நலமா தமிழினி
அன்புள்ள தமிழினி,
உங்களை அன்புள்ள ஒரு மனுஷியாக விளிப்பதையேகூடப் பலர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன். புராணக் கதாபாத்திரங்களைப் போன்று பிரபாகரன் ‘உயிர்த்தெழுவார்’ என அவரது ‘பக்தர்’கள் ஓயாத பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். மே 18க்குப் பிறகு புதுப்பலம் பெற்றுள்ள அவரது எதிர்ப்பாளர்களோ ‘ஒழிந்தான் பயங்கரவாதி’ எனக் கொண்டாடிக்கொண்டிருக்கும் ஒரு சூழலில், அவரது தங்கையும் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்கள் (அரசியல்) பிரிவின் தலைவியுமான உங்களை அன்புள்ள ஒரு மனுஷியாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் இடத்திலிருந்து இந்த மடல்.
ஒரு வாரக் காத்திருப்புக்குப் பின் உங்களை, இன்று தரைமட்டமாகிவிட்ட கிளிநொச்சியில் இருந்த பெண்கள் பிரிவின் அலுவலகத்தில் சந்தித்த நாளை நினைத்துக்கொள்கிறேன். தீர்க்கமான விழிகள், ஒப்பனைகளின் சுவடறியாத கருமையான முகம், அழுத்தி வாரிப் பின்னப்பட்ட சிகை, ஆண்களுடையதைப் போன்ற சட்டை, நகைச்சுவை கலந்த உரையாடல், புதிய விஷயங்களை, குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள பெண்கள், பெண்ணிய அரசியல் பற்றிய உங்களது ஆர்வம் எல்லாம் என் நினைவில் தோன்றுகின்றன.
அப்போது அங்கே ஓரளவு அமைதி நிலவிக்கொண்டிருந்த காலம். ஓயாது நடைபெற்றுக்கொண்டிருந்த கொடிய போரினிடையே நீங்கள் சற்று இளைப்பாறிக்கொண்டிருந்தீர்கள். A9 நெடுஞ்சாலை அப்போது திறக்கப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் வசித்துக்கொண்டிருந்த சுற்றங்கள் தத்தம் குடும்பங்களோடு வந்திருந்து விடுமுறைகளைக் கழித்துக்கொண்டிருந்தனர். பள்ளிகளும் மருத்துவமனைகளும் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இன்னும் சில ஆண்டுகளுக்குள் எல்லாம் அழிந்து மண்ணோடு மண்ணாகக் குருதிச் சேற்றுக்குள் புதையுண்டு போய்விடும் என்பதை அறியாமல் அனைவரும் தத்தமது வீடுகளையும் கோவில்களையும் புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள்.
சரி, நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் தமிழினி?
மே 28ஆம் தேதி வவுனியாவில் உள்ள உள்நாட்டு அகதிகள் முகாமில் இருந்த நீங்கள் சிறப்பு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டதாக இணையத்தில் படித்தேன். உங்கள் இயற்பெயர் சிவத்தாய் என்பதையும் அதிலிருந்து தான் அறிந்துகொண்டேன். நீங்கள் உயிரோடிருப்பது குறித்துச் சந்தோஷப்படுவதா? அல்லது சிங்கள ராணுவத்திடம் பிடிபட்டது பற்றிப் பதற்றம் கொள்வதா எனத் தெரியவில்லை. உங்களை நலம் விசாரிக்கும் கொடூரமான அபத்தத்திற்காக என்னை மன்னியுங்கள். கடந்த ஆறு மாதங்களாக ஈழமண்ணில் நடைபெற்று வரும் கொடிய நிகழ்வுகளாலும் அதை முன்னிறுத்தித் தமிழக மண்ணில் அரங்கேறிவரும் நாடகங்களாலும் மிகுந்த மனநெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் பல இரவுகளில் உங்களை என் கனவுகளில் காண்கிறேன். பிரபாகரனின் மரணத்திற்குப் பின்னர் அவர் படையணியில் இருந்த ஆயிரக்கணக்கான பெண் புலிகளின் தற்போதைய நிலை என்ன தமிழினி? சங்கடம் தருகிற, வேதனையை மூட்டுகிற, அச்சுறுத்துகிற கேள்வி இது.
எறும்புகளைப் போல நசுக்கி அழிக்கப்பட்ட தமிழ் மக்களின் உயிர்களுக்கு முதலாவதாக ராஜபக்சேவும் பிறகு பிரபாகரனும் விடுதலைப்புலிகளும் பதிலளிக்க வேண்டும். ஆனால் சமீப காலமாகத் தமிழகத்தில் ஒலித்துவரும் புலி எதிர்ப்புப் பிரகடனங்கள் சில மாதங்கள் முன்புவரை ஒலித்துவந்த புலி பக்தி மந்திரங்களைப் போன்றே மொன்னையானவையாக ஒலிக்கின்றன. மூடத்தனமானதாகவும் மனிதத் தன்மையற்றதாகவும் கடந்த முப்பதாண்டுகளாக நடைபெற்று வந்த ஒரு போரின் விளைவான, உள்ளுறைந்து கிடந்த முரண்களும் நெருக்கடிகளும் தற்போது வெளிப்படத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் உயிர் வாழும் உரிமையைப் பற்றிப் பேசுவது, போர்க்குற்றவாளியும் கொலைகாரனுமான ராஜபக்சேயின் சட்டங்களின்படி அவர்கள் குற்றவாளிகள் என்றால், அவர்கள்மீது குறைந்தபட்சம் நியாயமான வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருவது கவர்ச்சியற்ற ஒரு அரசியல் செயல்பாடாக இருக்கிறது.
பல கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் காத்திரமான தோழிகளையும் உங்களோடு சந்தித்திருந்த எனக்கு, உங்களுடைய தற்போதைய நிலை பற்றிக் கிடைக்கப்பெறும் தகவல்கள் தாங்கொணாத் துயரத்தை அளிக்கின்றன. போர்க்களத்தில் உயிர் துறப்பதற்கும் தற்கொலை செய்துகொள்வதற்கும் நீங்கள் தயாராகவே இருந்தீர்கள். மிக நிராதரவான நிலையில் நீங்கள் இராணுவத்தால் கால்கள் துண்டிக்கப்பட்டு முல்லைத் தீவின் காடுகளுக்குள் வீசப்படுகிறீர்கள் என்னும் செய்திகளைக் கேட்கும்போது மனப்பிறழ்வுக்குள்ளாவது தவிர வேறு எதுவும் செய்யவியலாத கையறுநிலையை உணர்கிறேன். இறுதிநொடிவரை தன்னுடன் நின்ற படையணிகள் சொந்த விருப்பத்தின் பேரில் அல்லது வேறு வழியற்ற நிர்க்கதியான நிலையில் தன்னோடு நின்ற மக்கள் என யாரைப் பற்றியும் யோசிக்காமல் போரை நடத்திச்சென்ற பிரபாகரன்மீது வெறுப்பும் கோபமும் எழுகிறது.
அதே சமயம் ஈழத்துப்போரில் மிக முக்கியப் பங்கு வகித்துத் துரோக நாடகம் ஆடிய இந்தியர்கள் வெறும் புலி எதிர்ப்பு அல்லது ஆதரவு என ஒரு குறுகிய ஒருபக்கச் சார்பை எடுக்க முடியாது எனக் கருதுகிறேன். அப்படிச் செய்தால் அது அப்பட்டமான சந்தர்ப்பவாதம். உங்கள் அண்ணனின் மரணத்துக்கும் உங்கள்மீது நடைபெற்றுவரும் கொலைவெறித் தாக்குதல்களுக்கும் தமிழகப் புலி ஆதரவு அரசியல்வாதிகள் முக்கியக் காரணமாயிருந்திருக்கிறார்கள் என எனக்குத் தோன்றுகிறது. ஒரு நெருக்கடியான பின்னடைவை ஈழப்போர் சந்தித்த பின்னரும், ஒரு தற்காலிகத் தோல்வியை ஏற்று மக்களைக் காப்பாற்ற உங்களுக்கு யோசனை கூறுவதை, அதற்கான வழிகாட்டுதல்களையும் உதவிகளையும் அளிப்பதை விடுத்துத் தம் வீர வசனங்களால், வாய்ச்சவடால்களால், போலியான ஆருடங்களால் உங்களைக் கொம்புசீவிவிட்டதைக் குறித்து என்ன சொல்ல தமிழினி?
பத்தாயிரம் பேரைத் திரட்டிக்கொண்டு வன்னிக்குச் செல்வோம், கடலை நீந்திக் கடந்து போரில் பங்கேற்றுத் தமிழீழத்துக்கான போரில் ஈடுபடுவோம் என இங்குள்ள தமிழர்களின் உணர்வுகளைத் தூண்டியவர்களால் தாக்கத்தை ஏற்படுத்தும்படியான எந்தவொரு அர்த்தமுள்ள போராட்டத்தையும் நடத்த முடியாமல் போனது. அப்பாவிகளான இளைஞர்களில் பலர் ஈழத் தமிழர் படும் துயர் தாளாமலும் இந்திய அரசின், சர்வதேசச் சமூகத்தின் கவனத்தை ஈழத் தமிழர் பக்கம் ஈர்க்கவும் செயல்பட வைக்கவும் தீக்குளித்தது நினைவுக்கு வருகிறது. அந்த இழப்புகளை அரசியலாக்குவதற்கும் பின்னர் தேர்தலில் வாக்குகளாக்கவும் அவர்கள் பட்டபாடு நினைவுக்கு வருகிறது. புலிகளின் பெயரால் புலி ஆதரவாளர்கள் பலர் தமிழக மண்ணில் நிகழ்த்திய அரசியல் துரோகம் இது.
போரில் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னரும் நான்கே நாட்களில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட பின்னரும் ஆயிரக் கணக்கான புலிகள் துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டுக்கொண்டிருந்த வேளையிலும் இங்குள்ள புலி ஆதரவாளர்கள் பிரபாகரன் சாகவில்லை எனவும் அவர் உயிர்த்தெழுவார் எனவும் ஆருடம் கூறிக்கொண்டிருந்தார்கள். கொல்லப்பட்ட மக்களைப் பற்றியோ முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களைப் பற்றியோ இங்கு யாரும் பேசவில்லை. குறைந்தபட்சம் கைதுசெய்யப்பட்ட புலித் தலைவர்களைப் பற்றியும் உயிர் தப்பிக் காடுகளில் பதுங்கியிருக்கும் புலிகளைப் பற்றியுங்கூட அவர்களால் பேச முடியவில்லை.
புலிகளுக்கும் ஈழப் போருக்கும் ‘பேராதரவு’ கொடுத்துவந்த தமிழகப் புலனாய்வு இதழ்கள் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக வந்த செய்திகளை முன்வைத்துத் தம் விற்பனையைப் பெருக்கிக்கொள்வதில் தீவிரம் காட்டின. பிரபாகரன் கொல்லப்படவில்லை, அவர் தப்பிவிட்டார், விரைவில் மீண்டு வரப்போகிறார் என கிராபிக்ஸ் பட ஆதாரங்களோடு ஒரு வார இதழ் செய்திக் கட்டுரைகளை வெளியிட அதற்கு எதிரிடையாக அவர் கொல்லப்பட்டுவிட்டார் என மற்றொரு வார இதழும் ஆதாரங்களோடு செய்திக் கட்டுரைகளை வெளியிட்டது. போர் திடீரென முடிந்துபோனதால் ஏற்பட்ட இழப்புகளை இவ்வகையான ‘புலனாய்வு’க் கட்டுரைகள் மூலம் அவை ஈடுகட்டிக்கொண்டன. அரசியல் நீக்கம் செய்யப்பெற்ற ஆயுதந்தாங்கிய போரைத் தம் அரசியல் ஆதாயங்களுக்காக ஆதரித்த பக்தர்களால் வேறு என்ன செய்ய முடியும்?
இவை நீங்கள் மக்களை விசுவாசிகள், கொடையாளிகள், துரோகிகள் எனத் தட்டையாக வகைப்படுத்தியதன் விளைவுகள். உங்களைப் போன்றே உங்களது விசுவாசிகளுக்கும் அரசியல் பிரக்ஞை இருந்திருக்கவில்லை.
இவற்றிலெதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளாமல் போகலாம் தமிழினி. ஆனால் புலிகளின் தலைமை, முப்பதாண்டுகளாகப் பின்பற்றிவந்த அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப் போராட்டப் பாதையின் விளைவாய் நேர்ந்த விபரீதங்களுக்கும் கொடூரங்களுக்கும் பதிலாய் நீங்களோ அம்புலியோ மலைமகளோ பெயர் தெரியாத ஏராளமான தோழர்களோ கொல்லப்படுவதை, சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதை, அவமானப்படுத்தப்படுவதை, பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுவதை உங்களின் தீவிர விசுவாசியாக இல்லாவிடினும் என்னால் தாங்கிக்கொண்டுவிட முடியவில்லை செய்வதற்கு ஏதுமில்லை என்றாலுங்கூட. புலி எதிர்ப்பு என்பதன் பெயரால் இன்று ராஜபக்சேவைக்கூட ஆதரிக்க முடியும் என்ற நிலையில் பேசுபவர்களின் எண்ணங்களில் நீங்கள் ஒருமுறைகூட வருவதில்லை என்பதையும் சகிக்க முடியவில்லை.
புலிகளின் வீரவரலாறு, புலிகளின் துரோக வரலாறு இவையிரண்டுக்கும் இடையேதான் உண்மை வரலாறு இருக்க முடியும். ஆயிரக்கணக்கான கல்லறைகள் நிற்கும் அந்த காம்பவுண்டுகளில் துயிலும் மாவீரர்கள் அனைவரையும் ‘துரோகிகள்’ என யாராலும் அடையாளப்படுத்திவிட முடியாது. ஒரு இயக்கத்தின் தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது. பயங்கரமான ஒரு யுத்தத்தில் நிற்க வேண்டி வந்த புலிப்படையணிகளை, சாதிய நிலவுடைமை சமூக மதிப்பீடுகளின் இறுகிய பிடிக்குள் உள்ள ஈழத்தில் இருந்து போர்முனை சென்ற சூரியப் புதல்விகளான புலிகளின் பெண்கள் படையணிகளை வெறும் ‘பயங்கரவாதிகள்’ எனப் புறந்தள்ளிவிட முடியாது.
வர்க்கம், சாதி, பால், இனம் சார்ந்த வேறுபாடுகளால் ஏற்றத்தாழ்வாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இவ்வுலகைப் புரட்டிப்போடும் பெருங்கனவொன்றுக்கான நியாயங்கள் உள்ளவரை சுயநலமற்றவர்களாய்ப் புரட்சிகர இயக்கங்களில் அணி சேரும் இளைஞர்களின் தியாகங்களுக்கான தேவைகளும் நியாயங்களும் இருந்து வரும். அதே நேரத்தில் எந்தவொரு நியாயத்தின் பெயராலும் ஒரு சர்வா திகாரத்தைக் கட்டமைக்க, ஒடுக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட யாருக்கும் உரிமையில்லை. காணாமல் போனவர்களின் நிலையைக் கண்டறிவதில் சட்டப்படியும் நியாயப்படியும் அக்கறை காட்டாத இலங்கைப் பேரினவாத அரசின் சட்டங்களும் நீதிமன்றங்களும் உங்களைப் போன்றவர்களின் தற்போதைய நிலை குறித்து எதுவும் சொல்லப்போவதில்லை. சிறைச் சுவர்களின் பின்னால் நீளும் அந்த இருள்வெளியில் நிகழக்கூடிய அபாயங்கள் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் உள்ள சிங்கள இன வெறியர்களுக்கான கொண்டாட்டங்களாக மாறியிருப்பது நிலைமையை மிகப் பயங்கரமானதாக்கியிருக்கிறது. இது போன்ற ஒரு சூழலில் தமிழகத்தில் நடப்பவற்றைப் பற்றி உங்களுக்கு இப்போது தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்காது தமிழினி. வாய்ப்புகளிருந்த காலங்களில்கூட நீங்கள் தவறாகவே நண்பர்களையும் எதிரிகளையும் தேர்ந்தெடுத்தீர்களென நினைக்கிறேன்.
கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் தன்னெழுச்சியான போராட்டங்கள் நிகழ்ந்தன. இவற்றில் பங்கேற்றவர்களில் பலர் ஈழத் தமிழரின் மேல் உண்மையான அக்கறை கொண்டவர்கள். பெண்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், அரவானிகள் ஆகிய பல்வேறு பிரிவினரும் ஈழத் தமிழர்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன ஒடுக்குமுறைகளுக்கெதிராகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இவர்களது உணர்வுகளைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
ஆனால் ஒரு நேர்மையான தலைமை இல்லாமல் போனதால், தலைமையேற்றவர்கள் பலரின் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளால் அப்போராட்டங்களால் ஈழத் தமிழரின் மீதான இலங்கை ராணுவத்தின் கொடூரமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவோ சர்வதேசச் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவோ முடியாமல் போனது தமிழினி.
‘பக்தர்’களின் மனநிலையில் இப்போதுகூட மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை. இப்போதிலிருந்தே நவம்பர் மாதம் மாவீரர் நாளை எப்படிக் கொண்டாடுவது என்று திட்டமிட்டுவருவதாகச் செய்தி.
யாரை அழைப்பது? ‘தம்பி’ சீமானையா, வேறு யாரையுமா என்னும் குழப்பத்திலிருக்கிறார்கள். போரில் வெற்றிபெற்றால் என்னவெல்லாம் நடக்கும் எனக் கனவுகளில் மிதந்துகொண்டிருந்தவர்களுக்குத் தோல்வியைப் பற்றிச் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்ப்பது சிரமமாய்த்தானிருக்கும். ஆனால் இவர்களின் பின்னால் ஈழ மக்களின் பால் அக் கறைகொண்ட அவர்களது நிலையறிந்து கொதிப்புற்றிருக்கிற எண்ணற்ற தமிழ் மக்கள், இளைஞர்கள் இருக்கிறார்கள். கொடுஞ்சிறைகளிலும் இலங்கையின் கிழக்கிலும் வடக்கிலும் உள்ள காடுகளுக்குள்ளும் சிதறுண்டு கிடக்கிற நீங்கள் உங்களுடைய சரி தவறுகளை ஆராய்ந்து ஒரு நிலைப்பாட்டை எட்ட முடியாமல் இருக்கும் கையறுநிலையில் இங்குள்ள யாருமே இல்லை. எனினும் அவர்களால் தமது இனப்பெருமைகளையும் வீராவேசத்தையும் தற்காலிகமாகவேனும் துறந்து விட்டு ஈழத் தமிழர்கள் உடனடியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிற மனித உரிமை, வாழ்வியல் நெருக்கடிகள் பற்றியும் இனச் சிக்கலுக்கான தீர்வைக் குறித்தும் தொலைநோக்குடன் அர்த்தமுள்ள வகையில் எதையாவது யோசிக்க முன்வருவார்களா என்பது கேள்விக்குறிதான். பிரபாகரனின் மீதான தனிமனித வழிபாடும் தமிழனின் வீரம் பற்றிய புறநானூற்றுக் கால வசனங்களுமே இன்னமும் அவர்களிடம் எஞ்சியிருப்பவை. மற்றொருபுறம் சென்னையில் ஈழக்கவிதைகள் குறித்துத் தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் நடத்திய விமர்சனக் கூட்டத்தில் இலங்கை தேசிய கீதத்தைப் பாடுகிறார் ‘தலித் போராளி’ சுகன். இப்படி இருக்கிறார்கள் இங்கே இருக்கிற எங்கள் நண்பர்கள்.
புலிகள் முஸ்லிம் மக்கள்மீது நிகழ்த்திய வன்முறைகளும் சுமத்திய அவதூறுகளும் கடும் விமர்சனத்திற்குரியவை என்பதில் சந்தேகமில்லை. அவை குறித்து, இலங்கையில் போரை நிறுத்தவும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய பேராசிரியர் சிராஜ் மசூர் அவர்களின் நேரடி அனுபவங்களைக் கேட்க முடிந்தது. இவர் இன்னொரு கூட்டத்திலும் சென்னையில் பேசினார். அவர் கூறியவை ஏற்றுக்கொள்ளக்கூடியவையாய், முக்கியமானவையாயிருக்கலாம். ஆனால் அவர் கூறாத விஷயங்களும் முக்கியமானவை.
புலிகள் 90இல் முஸ்லிம் மக்களை மசூதியில் கொலை செய்தது, இயக்கத்தில் தலைவர்களாகவும் படையணிகளாகவும் இருந்த முஸ்லிம்களைக் கொன்றது குறித்து அவர் கூறினார். அது சரி. ஆனால் 90இலிருந்து 2009வரை முஸ்லிம் மக்கள் நல்வாழ்விலும் சரி, ஒட்டுமொத்த இனப்பிரச்சினையிலும் முஸ்லிம் காங்கிரசின் பங்கு என்ன என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை. போர் கிழித்துப் போட்ட இலங்கையில் பல வன்முறைகளையும் வன்மங்களையும் துரோகத்தையும் அனைத்து மக்களும் ஏதோ ஒரு வகையில் சந்தித்துவிட்ட நிலையில் இனிமேலான தீர்வு பற்றியும் அவர் ஏதும் கூறவில்லை, “வடக்கும் கிழக்கும் மட்டுமான பகுதி தமிழர் பகுதியல்ல” எனச் சொல்வதைத் தவிர. இவையனைத்தையும்விட அதிர்ச்சி, இந்து ராம் போன்ற ராஜபக்சே ஆதரவாளர்களைத் தவிரப் பெரும்பாலான பத்திரிகையாளர்களும் தொண்டு நிறுவனங்களும்கூட அனுமதிக்கப்படாத ‘மெனிக் பண்ணை’ இரும்பு வேலி முகாமிற்குள் எப்படி அவர் சென்றார் என்பது. அதைவிட அதிர்ச்சி அந்த முகாமைப் பற்றி “துக்ககரமானது” என்பது தவிர அவருக்குக் கூறுவதற்கு ஏதுமில்லாமல் போனது.
விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்களைச் சார்ந்தவர்களுக்கும் விரட்டப்பட்டவர்களுக்கும் அவதூறு செய்யப்பட்டவர்களுக்கும் மனநோயாளிகளாக்கப்பட்டவர்களுக்கும் புலிகளின் மீது ஏற்படும் அளவிலா வெறுப்பு புரிந்து கொள்ளக்கூடியது. வன்னி, வவுனியா, யாழ் நகரத் தமிழ் மக்கள் அனைவரும் பிரபாகரன் அல்ல என்பதையும் பிரபாகரன்மீதும் புலிகள்மீதுமான வெறுப்பு இந்த மக்களின் வாழ்வுரிமைகள்மீதான அலட்சியமாக மாறும் வேளையில் அவர்கள் புலிகளாக மாறுவதற்கான நியாயங்கள் புதுப்பிக்கப்படும் என்பதையும் புலி எதிர்ப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
முக்கியமான இன்னொரு குழுவினர் இங்கே இருக்கிறார்கள் தமிழினி. இவர்கள் இடுகாடுகளில் ஃபேஷன் ஷோ நடத்துபவர்கள். தமது நிலைப்பாடுகளை மீடியாக்களின் தேவைகளுக்கேற்றாற்போல் மாற்றிக்கொள்பவர்கள். தங்களுடைய ஃபோட்டோ ஆல்பத்திற்குக் கனம் சேர்க்க உங்கள் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்கிறவர்கள். முன்னர் அதற்கெனப் பிரத்யேகமாய் வடிவமைக்கப்பட்ட டி ஷர்டுகளைப் போட்டுக்கொண்டு ஆதரவாகப் போராடி மீடியாவின் கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்த்தவர்கள் இப்போது எதிர்ப்பு ஃபேஷனானபின் அங்கே சென்று நிற்கிறார்கள்.
நீங்கள் சிறையிலிருந்து வெளிவருவீர்களா? உங்களை மீண்டும் சந்திக்க முடியுமா என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை தமிழினி. ஆனால் இந்திய அமைதிப்படையின் கொடுமைகளால் போராளியானதாகச் சொன்னீர்கள் தமிழினி, நான் உங்களைச் சந்தித்த அதே கிளிநொச்சி நகரைப் புதுப்பிக்க இப்போது இந்தியா உதவி செய்யவிருக்கிற தகவல் உங்களுக்குத் தெரியுமா?
ஈழத் தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த, அவர்களை அடியோடு நாசமாக்கிய கொலைகாரன் ராஜபக்சேவின் கூட்டாளியாக நின்று அக்கொலைவெறிக்குத் துணைபோன ஒரு நாட்டின் குடிமகள் நான் என்பது எனக்கு மிகுந்த அவமானத்தையும் வேதனையையும் தருகிறது. ஈழத் தமிழர்களின் துயரங்களை வைத்து ஆதாய அரசியல் நடத்திப் பிழைத்துவருபவர்கள் உலவிடும் தமிழ்நாட்டில் இருப்பதும் கேவலமாய்த்தான் உள்ளது தமிழினி.
உங்களையும் உங்களைப் போன்ற எண்ணற்ற இளைஞர்களையும் முடிவற்ற துயரப் பாதைக்கு இட்டுச்சென்று, அவமானகரமான அடிமைகளாக வாழும்படி கைவிட்டுச் சென்றுவிட்ட உங்கள் தலைவரின்மீது கடும் கோபமும் வெறுப்பும் வருகிறது. ஆனால் ஒடுக்குமுறைகள் உள்ளவரை போராட்டம் இருக்கும். நம்முடைய தவறுகளுக்கும் கையாலாகாத்தனங்களுக்கும் வரலாறுதான் தீர்ப்பெழுதும் அல்லவா தமிழினி?
ப்ரேமா ரேவதி
0 விமர்சனங்கள்:
Post a Comment