ராஜனி திராணகம படுகொலை தொடர்பாக வெளிவராத உண்மைகள்!
(இலங்கையில் இருந்து வெளிவந்த அமுது சஞ்சிகையில் வெளியாகிய கட்டுரை கீழே)
என் சத்தியப்பதிவு 21 - 09 - 2005
எங்கள் மெடம் ராஜனி ஒரு கலங்கரை விளக்கு!
1989 ம் ஆண்டு செப்டெம்பர் 21ம் திகதி, எங்கள் அன்புக்குரிய மெடம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் தன் கடமையை முடித்து விட்டு வீட்டிற்கு போகும்போது வீதியில் வைத்து கோழைத்தனமாகசுட்டுக் கொல்லப்பட்டார். அவரையும் அவரது நேர்மையையும் நேருக்கு நேராக முகம் கொடுக்க முடியாத 'தமிழீழ விடுதலைக் கோழைகள் முதுகுப் புறமாக வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். இந்தக்கோழைத்தனமான கொலையைக் கண்டித்து மருத்துவபீட மாணவர்களும் ஏனைய பல மாணவர்களும் எமது கைகளால் சுவரொட்டிகளை எழுதி யாழ்ப்பணம் எங்கும் ஒட்டினோம்.
அப்போது எமது விடுதலைப்போராட்டத்தைப் பற்றி எனக்குள் எழுந்த உணர்வை நான் பின்வருமாறு ஆங்கிலத்தல் எழுதினேன். இதுவும் ஒரு சுவரொட்டியாக அப்போது ஒட்டப்பட்டது
Free Doom
& Free Dump
ist our Freedom...?
இன்றோடு எங்கள் மெடம் கொல்லப்பட்டு 16 வருடங்கள் ஓடிவிட்டன. அவர் கொல்லப்பட்டு 15 வருடங்களின் பின்னராவது அவரைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப் பட்டிருப்பது மிகவும் நன்றிக்குரிய விடயம்தான். ஆனால் இன்னும் அவரைக் கொன்றவர்களைப் பற்றிய பல உண்மைகள் சரியாக வெளிவரவில்லை என்பதுதான் மிகக் கவலையான விடயமாகும். இதற்கு முக்கிய காரணம் எம்மிடமிருந்த தத்தமது உயிர் பற்றிய பயம் பிரதானமானதாகும். அதேவேளை நாம் உண்மைகளைச் சொன்னால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் எமது சமூகம் இருக்கிறதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இன்றல்ல 1989இல் மெடம் கொல்லப்பட்ட போதும்கூட அவரை யார் கொன்றார்கள் என்ற உண்மையை எமது சமூகம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பதை நான் கண்டேன்.
அப்போதும்கூட பலருக்கு அந்த உண்மை தெரிந்திருந்தும் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளுவதற்கு துணிச்சல் இருக்கவில்லை. ஆனால் அந்த உண்மையை தமக்குள் மனதளவில் ஏற்றுக் கொண்டவர்களும் பலர் இருந்தார்கள் என்பதும் மறுபக்க உண்மைதான். அவ்வாறு உண்மை தெரிந்து உள்ளுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். அன்று ஏனைய பலரைப் போன்று எனது உயிர், எனது எதிர்காலம் என்று நானும் இந்த உண்மைகளை எனக்குள் போட்டு அமுக்கிக் கொண்டேன். தற்போது நான் என் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடொன்றில் ஒரு வைத்தியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் நாட்டில் பல ஒடுக்கு முறைகளுக்கு மத்தியில் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களோடு ஒப்பிடுகையில் எனது எதிர்காலத்திற்கும் உயிருக்கும் இவ்வெளிநாட்டில் அதிக உத்தரவாதம் இருக்கிறது. அந்த வகையில் மெடத்தின் கொலை தொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை இன்றாவது வெளியிடடுவது எனது கடமை என்று நினைக்கிறேன்.
எமது அன்புக்குரிய மெடம் கலாநிதி ராஜினி திரணகம அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது நான் அங்கு மருத்துவபீட மாணவனாக இருந்தேன். அவர் எங்களுக்கு வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் எம்மை மிகத்திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள், நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார். அன்றைய கால கட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நடந்தவைகள் இப்போதும் ஓர் திரைப்படத்தைப்போல் என் மனதிற்குள் ஓடுகின்றன.
இந்திய இராணுவத்தினரதும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்களினதும் கெடுபிடிகள் மிக அதிகமாக இருந்ததால் விடுதலைப் புலிகள் இயக்கம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தையும் தமது மறைவிடங்களில் ஒன்றாக பாவித்தார்கள். புலிகள் இயக்கத்தின் நபர்கள் மட்டுமன்றி அவர்களின் ஆயுதங்கள் கூட பல்கலைக்கழகத்திற்குள் சில ஊழியர்களினதும் மாணவர்களினதும் உதவியோடு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த உண்மை பல்கலைக்கழகத்தில் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பலருக்கும் தெரிந்திருந்தது. இதற்கு எமது மருத்துவ பீடமும் விதிவிலக்காக இருக்கவில்லை. இதனால் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களிடையேயும் விரிவுரையாளர்களிடையேயும் புலிகளைப்பற்றி பேசுவது மிக மிக அச்சம் நிறைந்ததாக காணப்பட்டது. இந்த அச்சத்தின் காரணமாக அன்று புலிகள் இயக்கம்தான் சில மருத்துவபீட மாணவர்களின் உதவியுடன் மெடம் ராஜினி அவர்களை சுட்டுக் கொன்றது என்ற உண்மையைப்பற்றி எவரும் வெளிப்படையாக பேசத் துணியவில்லை. அதுமட்டுமன்றி அக்கொலையைச் செய்தது இந்திய இராணுவம் அல்லது அவர்களோடு நிற்கும் ஏனைய ஆயுதக் குழுக்களில் ஒன்று என்ற பொய்யான கருத்தையே பலரும் பரப்ப முயற்சித்தனர்.
மெடம் அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மருத்துவ பீட மாணவர்களின் உதவியுடன் எமது வளாகத்திற்குள் நுழைந்து அவரை வேவு பார்த்தார்கள். மெடத்தோடு நெருங்கிப் பழகிய மாணவர்கள் பலருக்கு இவ்விடயம் தெரிந்திருந்தும் அதை எவ்வாறு வெளியிடுவது என்ற அச்சம் அவர்களிடம் காணப்பட்டது. அதே நேரம் இக்கொலையாளிகளை உள்ளே கூட்டிவந்த சில மாணவர்களும் கூட மெடத்தோடு மிக நெருக்கமாக பழகிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முக்கியமான இருவரை நான் இங்கு பெயர் குறிப்பிட விரும்புகிறேன்.
அவர்களில் ஒருவர் வடமராட்சியை சேர்ந்த சூரி எனப்படும் சூரியகுமாரன் மற்றவர் முல்லைத்தீவைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர்களாவர். புலிகள் இயக்கத்தின் உளவாளிகளும் கொலைகாரர்களும் சூரியோடும் தர்மேந்திராவோடும் மருத்துவபீட வளாகத்திற்குள் நின்று கதைத்து பேசுவதும் வளாக சிற்றுண்டிச் சாலையில் தேனீர் அருந்துவதும் அப்போது மிக வெளிப்படையான நிகழ்ச்சிகளாக இருந்தன. புலிகளின் சாவகச்சேரி பொறுப்பாளர் கேடில்சின் சகோதரரான காண்டீபன் என்னும் பிரபல கொலையாளியும்கூட தர்மேந்திராவோடு தேனீர் அருந்துவதை நான் பலமுறை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
1989 செப்டெம்பர் 21ம் திகதியன்று, 2வது எம்.பீ.பீ.எஸ் பரீட்சையின் இறுதி அங்கம் முடிவடைந்து மெடம் வெளியே வரும்வரை காத்திருந்த புலிகளின் உளவாளிகளில் ஒருவன் வீதியிலே தயாராக நின்றிருந்த கொலையாளிக்கு இரகசியமாக சிக்னல் கொடுத்தான். அதைச் செய்தவன் வேறு யாருமல்ல. அங்கு பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வக்குமார் என்பவனே. மெடம் தனது சைக்கிளில் வளாக பிரதான வாசலால் வீதிக்கு இறங்கியதும் அவரை சைக்கிளில் பின் தொடர்ந்த கொலையாளி அவரது தலையின் வலப்பக்கத்தில் முதல் வேட்டைத் தீர்த்தான். பின்னர் அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடைவைகள் அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான்.
இந்த கொலையாளி யார் என்பதையும் நான் இங்கு சொல்லவேண்டும். புலிகளின் உளவுப்பிரிவில் பணியாற்றியவரும் கொலையாளியுமான பொஸ்கோ என்பவனே அவன். பொஸ்கோவை சாதாரண மக்களில் பலருக்கு தெரியாது. ஆனால் மெடம் கொல்லப்படுவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பொஸ்கோவினதும் இன்னும் பல சந்தேகமான நபர்களினதும் நடமாட்டம் மருத்துவ பீடத்திற்குள் அதிகரித்திருந்தது. பொஸ்கோவிற்கு வயது 30 - 35 இடையில் இருக்கும். எப்போதும் மற்றவர்களை சந்தேகத்தோடு குரோதத்தோடும் பார்க்கும் அவனது விறைப்பான முகமே அவனைக் காட்டிக் கொடுத்து விடும். இந்த பொஸ்கோ சூரியோடும், தர்மேந்திராவோடும் அமர்ந்து வளாக சிற்றுண்டி சாலையில் தேனீர் அருந்துவதை நானும் பல மாணவர்களும் கண்டிருந்தோம். முதலில் எனக்கும் இவன் யார் என்று தெரியாது. எம்மோடு படித்த ஒரு மாணவனே எங்களுக்கு பொஸ்கோ யார் என்ற உண்மையைச் சொன்னான்.
மருத்துவ பீடத்திற்குள் இவனின் நடமாட்டம் பல தடவைகள் இருந்ததை நானும் சக மாணவர்களும் கண்டிருந்தோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இக்கொலை நடக்கும்போது அச்சம்பவத்தை நேரில் பாக்த்த ஓர் மாணவன் இன்னும் உயிருடன் இருக்கிறான். அந்த மாணவனும் நானும் ஒன்றாக திரியும்போதும்கூட பல தடவை பொஸ்கோவை நாம் கண்டிருக்கிறோம். அன்று அந்த மாணவனும் நாங்களும் இணைந்து, 'புலிகள் இயக்கமும், அதன் கொலையாளி பொஸ்கோவும், அவனுக்காக உளவு வேலை செய்த சூரிய குமாரனும் தர்மேந்திராவும்தான் மெடத்தின் கொலைக்கு பொறுப்பு' என்று கூறியிருந்தால் நாங்கள் ஒருவரும் இன்று உயிருடன் இருக்கமாட்டோம். எனவே என் சக மாணவன் கண்ணால் கண்ட அந்தக் கொலையை யாரிடமும் வெளியே சொல்லாதே என எச்சரித்தவர்களில் நானும் ஒருவன். மெடம் கொல்லப்பட்ட மறுதினம் அவரின் உடல் மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்டபொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் பல மூத்த விரிவுரையாளர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணம் அவர்களுக்கும் இக்கொலையை செய்தவர்கள் யார் என்று நன்றாக தெரியும்.
சூரி, தர்மேந்திரா ஆகிய இருவரோடும் நெருங்கி பழகியவர்களும், புலிகளின் கொலைகார அரசியலுக்கு ஆதரவாக இருந்த பல மருத்துவபீட மாணவர்களுக்கும் இந்த உண்மை நன்கு தெரியும். மெடம் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி மருத்துவ பீடத்திற்குள் பரவியதுமே சூரி, தர்மேந்திரா உட்பட அவர்களின் நண்பர்களின் முகங்களை நான் பார்த்தேன். அவர்களின் முகங்களே உண்மையை தெளிவாக வெளிப்படுத்தின. அவர்களைக் காட்டிக் கொடுத்தன. எனது கண்களைக்கூட அவர்களால் நேரடியாக பார்க்க முடியவில்லை. தங்களுக்கு கல்வியை போதித்து வழிகாட்டி, எதிர்கால மாணவ சமூகத்திற்கு கலங்கரை விளக்காக நின்ற அந்த ஒப்பற்ற மேதையை சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் இன்று வெளிநாடுகளில் சுகம் அனுபவிக்கிறார்கள். சூரியகுமாரன் இன்று இங்கிலாந்தில் வைத்தியசாலை ஒன்றில் வேலை செய்கிறான். அன்று அந்த தாயின் இரு குழந்தைகளை அநாதையாக்கிய இக்கொலைத்திட்டத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவனாகிய இவன், இன்று தான் உயிர்களைக் காப்பாற்றும் வைத்தியனாக வேஷம் போடுகிறான். இவர்கள் நாளைய சமூகத்தில் பெரிய மனிதர்களாக உலவ நாம் அனுமதிக்கலாமா? இந்த நாகரீக உலகத்தின் முன்னால் இவர்களை நிறுத்தி அம்பலப்படுத்த வேண்டாமா. நிட்சயம் அதை நாம் செய்ய வேண்டும்.
எனது அன்புக்குரிய சக மாணவர்களே நாம் நீண்டகாலம் மௌனமாக இருந்துவிட்டோம் எமது கண் முன்னால் நடத்தி முடிக்கப்பட்ட இந்த அநியாயத்தை மூடி மறைக்க புலிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் இன்னமும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நடந்த உண்மை வரலாற்றில் புதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நான் இங்கு இதைப் பதிவு செய்கிறேன் இது தொடர்பாக நீங்களும் உங்களின் மனட்சாட்சியின் அடிப்படையில் உண்மையை சமூகத்தின் முன் வைக்க கோரிக்கை விடுக்கிறேன்.
1989ம் ஆண்டில் யாழ். மருத்துவபீட மாணவன்
0 விமர்சனங்கள்:
Post a Comment