‘தலைவர்’ இருக்கிறார்?
’தேசியத் தலைவர்’ மறைந்து விட்டாரா அல்லது மறைந்து வாழ்கிறாரா? என்ற மனவேதனையுன் வாழும் புலிவிசுவாசிகளே இதோ உங்கள் நெஞ்சங்களுக்கு பால் வார்த்த பெருமை இந்த மின்மினிக்கே சேரும். உங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை, நீங்கள் கும்பிட்ட தெய்வங்கள் கைவிடவில்லை.
மின்மினியின் போன் நடுச்சாமத்தில் அலறியபோது மின்மினிக்கு மிகவும் ஆத்திரம் ஆத்திரமாய் வந்தாலும் ஏதும் முக்கியமான போனாய் இருக்கலாம் என நினைத்து ரிசீவரை காதில் வைத்தபோது யாரு மின்மினியா பேசுறது? என்ற அந்த குரலை மின்மினிக்கு எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருந்தாலும், ஆமாய்யா மின்மினிதான் பேசுறன், நீர் முதல்ல யார் என்று சொல்லுமைய்யா?
நான்தான் பிரபாகரன் பேசுறன்!
மின்மினியின் சொந்தங்களுக்குள்ளும், நண்பர்கள் வட்டங்களுக்கும் “பிரபாகரன்” என்று யாரும் இல்லாத காரணத்தால் மேலும் எரிச்சலாகி போன மின்மினி, யோ நீ யாரய்யா? “பிரபாகரன்” என்று எனக்கு யாரையும் தெரியாதய்யா, ஏனய்யா நடுச்சாமத்தில கழுத்தறுக்கிற? என்று கடுகடுக்க...
ஐயோ என்னை தெரியாதா? ஒருகாலத்தில உலகமே என் பெயரை கேட்டா அதிரும், இப்ப என்னடா எண்டால் கேவலம் இந்த மின்மினி கூட என்னை தெரியாது என்கிறானே, இப்பிடியா என் நிலைமை போகணும் என்று அழாதகுரலில், நான் தானய்யா தேசியத்தலைவர் பிரபாகரன் பேசுறன்.
தூக்கி வாரிபோட்டது மின்மினிக்கு, உண்மையாக நீங்களா பேசுறது? நம்பவே முடியவில்லை.
ஆமாய்யா நான்தான் பேசுறன், உன்னோட கொஞ்சம் கதைக்கணும் ஆட்சேபனை இல்லையே?
ஆட்சேபனையா! எனக்கா! உங்களுடனா! நீங்க என்னோட கதைப்பதே பெரிய பாக்கியமா நினைக்கிறன், என்னோட எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கதைக்கலாம், சொல்லுங்க.
நான் சொல்லுறது என்றால் எங்க தொடங்கி எங்க முடிக்கிறது என்று தெரியாது, அதனால நீயே என்னை பேட்டி எடுக்கிற மாதிரி கேள்வியை கேளு அப்பத்தான் என் மனசில இருக்கிற பாரத்தை இறக்கி வைக்கமுடியும்.
மின்மினிக்கு ஒருகல்லில் ரெண்டு மாங்காய் விடுவானா! இதோ மின்மினி நிருபராய்
நிருபர்: சத்தியமாய் இன்னமும் நீங்கள் உயிரோடு இருப்பதாய் நம்பமுடியவில்லை. அதற்க்காக என்னை மன்னிக்கவும்.
தலைவர்: என்னால கூட நம்பமுடியவில்லை நீ மட்டும் என்னவாம்
நிருபர்: உங்கள் “உடல்” என்று ஒரு உடலை சிங்கள ஆமி காட்டிச்சே, அது உங்களுடையது இல்லையா?
தலைவர்: அது பார்ப்பவர் கண்களை பொறுத்தது, என்னுடைய “உடல்” என்று பார்தால் அது என்னுடையது, இல்ல அது வேறு யாரோடையது என்று பார்தால் அது வேறு யாரோடையது.
நிருபர்: அப்போ அது நீங்க இல்லை?
தலைவர்: அப்போ அது நானா இருந்தால் இப்போ உன்னோட பேசுறது யாரு? இப்போ பேசுறது நானயிருந்தால் அப்போ அது நானா இருக்கமுடியாதல்லவா!
நிருபர்: என்னையே குழப்பிட்டீங்க, அதுசரி நீங்க எங்கே இருக்கிறீங்க? எப்படி இருக்கிறீங்க?
தலைவர்: நான் எங்கே இருக்கிறன் என்று எனக்கே தெரியாது. ஆனா எப்படி இருந்தேனோ, அல்லது எப்படி இருக்கோணும் என்று நினைத்தேனோ அப்பிடி நான் இப்போ இல்லை என்பதைத்தான் என்னால இப்ப சொல்லமுடியும்.
நிருபர்: மறுபடியும் குழப்பமா! ஆமா எப்படி நீங்க மட்டும் தப்பினீங்க?
தலைவர்: நான் தப்பியா இருக்கிறன்? இன்னமும் என்னால நம்பமுடியல, எத்தனை பேரை என் கண்முன்னால சாகடிச்சு பார்த்திருக்கிறன், ஆனா அந்த சாவே என்னை துரத்தி துரத்தி வந்தபோது அப்பாடா இப்பகூட கைகாலெல்லாம் நடுங்குது. என் உடம்பை கொண்டு என்னால ஓடவும் முடியல, “என்னை தூக்கிட்டு போங்கடா” என்று யாரையாவது கேட்கலாம் என்றால் யாரையும் நம்பவும் முடியல, சந்தடி சாக்கில யாராவது என் முதகில சொருகிட்டாங்களண்டா? அப்பப்பா நான் பட்டபாடு அந்த கடவுளுக்குத்தான் தெரியும். எப்படியோ தப்பிட்டேன் என நினைக்கிறேன்.
நிருபர்: ஏன் தப்பிட்டதாக “நினைக்கிறேன்” என சொல்லுகிறீர்கள்?
தலைவர்: இப்ப நான் இருக்கிற நிலைமையில எது நிஜம் எது பொய் என்று ஒண்ணுமே விளங்குதில்ல.
நிருபர்: சரி உங்களோட இருந்த தளபதிகளலெல்லாம் எங்கே?
தலைவர்: கொஞ்சபேர் இன்னமும் இங்கேதான் உலாவிட்டு இருக்கிறாங்க, மீதிப்பேர் வேற ஏரியாவுக்கு போயிட்டாங்க என நினைக்கிறன்.
நிருபர்: எனக்கு விளங்கவில்லை, எதற்கு எல்லாத்தையும் “நினைக்கிறேன்” என சொல்லுகிறீர்கள்?
தலைவர்: நானே ஒரு நினைப்பிலதானே வாழ்ந்துகிட்டிருக்கிறன்.
நிருபர்: சரி விடுங்க! எப்பத்தான் மக்கள் முன்னால வரப்போகிறீங்க? நீங்கள் இறந்துவிட்டதா நினைச்சு உங்கள் விசுவாசிகள் படும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல.
தலைவர்: அந்த ஆசை எனக்கு மட்டும் இல்லையா! ஆனா அவங்க முன்னால வந்து நின்னா மட்டும், அவங்களால என்னை கண்டு கொள்ளமுடியுமா என சந்தேகமாகவும் இருக்கின்றது.
நிருபர்: உங்கள் தலைமையில் விடுதலைபுலிகள் எவ்வளவு பலமாக இருந்தார்கள், இப்படி பொல பொலவென அழிந்து போவார்கள் என நான் கூட நினைத்து பார்க்கவில்லை, இது எப்படி நடந்தது?
தலைவர்: நீங்கள் சொல்வது போல முழுப்போராளிகளும் அழிந்து போகவில்லை, எனக்கு தெரிஞ்சு பொட்டனோடு சேர்ந்து சில ஆயிரம் போராளிகளைத்தவிர மற்ற எல்லோரும் இப்பவும் என்கூடத்தான் இருக்கிறாங்கள்.
நிருபர்: அப்ப பழைய பலத்தோடதான் இப்பவும் இருக்கிறீர்கள், கூடிய சீக்கிரம் உங்க பக்கத்திலிருந்து பெரியதொரு தாக்குதலை எதிர்பார்க்கலாம் என சொல்ல வருகிறீர்கள்.
தலைவர்: உடம்பு, பலம் எல்லாம் அப்பிடியேதான் இருக்கிது, ஆனா உணர்வு மட்டும் ஏதோ லேசா பஞ்சா பறக்கிறமாதிரி இருக்கிது.
நிருபர்: கார்த்திகை 27க்காவது உங்கள் மாவீரர் உரையை கேட்கலாமா?
தலைவர்: வழமையா எனக்கு மாவீரர் உரையை எழுதித்தாற இவன் பாலகுமாரையும் கொஞ்ச நாளா காணல, எங்க போய் தொலைந்தானோ? பார்க்கலாம் கார்த்திகைக்கு முதல் அவன் என்கிட்ட வந்திட்டானென்றால் நிச்சயம் நீங்கள் என் உரையை கேட்கலாம்.
நிருபர்: உங்க நண்பர் கே.பியையும் சிறீலங்கா அரசு அரஸ்ற் பண்ணிட்டு தெரியுமா?
தலைவர்: கேள்விப்பட்டேன்! அவன் இன்னும் என்னை வந்து சந்திக்கவில்லை, கூடிய சீக்கிரம் வருவான் என எதிர்பார்க்கிறேன்;. அந்த கழுதை கடைசி நேரத்தில என்னை கைவிட்டுட்டான், வந்தா ஒரு நாலு சாத்து சாத்தணும்.
நிருபர்: நீங்கள் உங்களை பாதுகாத்துக்கொள்ள, கடைசி நேரத்தில் மக்களை மனித கேடயங்களாக பாவித்ததாக பலராலும் பேசப்படுகிறதே, உண்மையா?
தலைவர்: கடைசி நேரத்தில் மட்டுமல்ல, ஆரம்பத்திலிருந்தே அவர்களை எனது “கேடயமாகத்தான் பாவித்து வருகிறேன்” என்ற உண்மை தெரியாதவர்கள் இப்படித்தான் வாய்க்கு வந்தபடி உளறுவார்கள்.
நிருபர்: நீங்கள் மறைமுகமாக வாழ்ந்தாலும் சொர்க்கபுரியில் வாழ்வதை போல் சந்தோசமாக வாழ்ந்திருப்பதை உங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புகைப்படங்கள் கூறுகின்றனே..
தலைவர்: நான் செத்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்குமா என்ன? அதுதான் வாழும்போது அதை அனுபவித்து விட்டேன்.
நிருபர்: நீங்கள் ராஜீவ் காந்தி உட்பட பல அரசியல் தலைவர்களை அநியாயமாக கொன்றதற்க்கு என்ன காரணம்?
தலைவர்: எனக்கு நியாயமாக தெரிந்ததால் கொன்றேன், ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் பகவத்கீதையில் சொன்னமாதிரி நான் விட்டுவிட்டாலும் அவர்கள் உடல் ஓர்நாளில் வெந்துதான் தீரும். என்ன கொஞ்சம் முன்னுக்கு பின்னுக்கு வெந்துபோச்சு.
நிருபர்: நீங்கள் கொன்றவர்களில், “இவனை கொன்றிருக்ககூடாதோ” என எண்ணியவர்கள் யாராவது உண்டா? அல்லது கொல்லாமல் விட்டுப்போனவர்களில் ‘இவனை கொல்லாமல் விட்டுட்டேனே’ என்று மிகவும் ஆதங்கபட்ட நபர்கள் யாராவது உண்டா?
தலைவர்: நான் கொன்றவர்களில் ‘பிரேமதாசாவை’ கொன்றிருக்கூடாதோ என எண்ணியதுண்டு, ஏனெனில் என்னுடைய ஆசைகளில் பலவற்றை நிறைவேற்றி தந்தவர் அவர் ஒருவரே! மற்றும்படி நான் கொல்ல நினைத்தவர்கள் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது எனக்கு பெரிய அவமானமான விடயம்.
நிருபர்: முள்ளிவாய்க்கால் பகுதியில் என்னதான் நடந்தது?
தலைவர்: முள்ளிவாய்க்கால் பகுதி - என்னை
கொள்ளி வைக்க பார்த்த இடம்
கள்ளி செடி நடுவே என்னை காயவைத்த இடம்
சுள்ளி தடிகள் கூட என்னை உரசி பார்த்த இடம்
வெள்ளித்திசை போய் சனி ஆட்சி செய்த இடம்
பள்ளி தராத பாடம் சொல்லி தந்த இடம்
அள்ளிச்சேர்த்த பணம் என் கையை விட்டு போன இடம்
தள்ளி போன சனங்கள் எனக்கு டிமிக்கி கொடுத்த இடம்
வள்ளிக்கிழங்கை திண்டு உயிர் வாழச்சொன்ன இடம்
நிருபர்: உங்களுக்கு கவிதைகள் கூட வருமா?
தலைவர்: நான் பட்டபாட்டுக்கு கண்றாவி எது வேண்டுமானாலும் வரும்.
நிருபர்: தாங்கள் தற்சமயம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மறைந்து வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கறீர்கள், பல துன்பங்களை அனுபவிக்க வேண்டி வரும் அதைப்பற்றி கொஞ்சம் சொல்லமுடியுமா?
தலைவர்: மறைந்து வாழும் வாழ்க்கை எனக்கு புதியதல்ல, என் பாதம் படாத காடு மேடே கிடையாது,
ஆனாலும் மண்ணில் பாதம் பதிக்காமல் நடப்பது கொஞ்சம் புதிதாகவும் இருக்கிறது, சிரமமாகவும் இருக்கிறது.
நிருபர்: (பதற்றத்துடன்) என்ன சொல்லுகிறீர்கள்?
தலைவர்: என்ன பயந்திட்டீர்களா? அவ்வளவு நிசப்தமாக நடமாட வேண்டும் என்பதை சொல்லவந்தேன்.
மின்மினியின் சந்தேகம் தீராதலால் மின்மினியாகவே இந்த கேள்வியை தலைவரிடம் கேட்டார்
தலைவரே தலைவரே உங்களுக்கு மரணம் ஒன்று நேர்ந்து (அப்படி எதுவும் நடக்காது) சும்மா பேச்சுக்கு கேட்கிறேன் அதனால் ஆவி ரூபத்தில் அலையும் போது, பொழுது போக்குக்காய் யாருடனாவது பேச விரும்பினால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?
தலைவர்: ஏன் சுற்றி வளைத்து கேட்க்கிறாய்? மின்மினியே! உன்னுடன் தான், இதுவரை என் பொழுதை போக்கியத்ற்க்காய் நன்றி, மீண்டும் வருவேன்.
மின்மினியின் போனுடன் மின்மினியும் நிசப்தமானான்
மன்னிக்கவும் புலிவிசுவாசிகளே உங்களுடன் சேர்ந்து ஏமாந்தவன் நானும்தான்
(மோகன்)
சூற்றம் இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment