இலங்கை அரசும்... தமிழ்நாடு கவர்னர் மகனும்..! சீமானின் சீறலும்….
தமிழக கவர்னர் பர்னாலாவின் மகனான ஜஸ்ஜித் சிங்கையும் சிங்கள அரசையும் சம்பந்தப் படுத்திக் கிளம்பி இருக்கும் உளவு தொடர்பான பரபரப்பு, ஈழ ஆதர வாளர்கள் மத்தியில்... பெரிய அளவிலான அதிர்வைக் கிளப்பி இருக்கிறது! ‘ஜஸ்ஜித் சிங் இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தம்தான் அதிர்வுக்கான காரணம்!’ என்ற முன்னுரையோடு நம்மிடம் பேசினார் கள் ஈழ ஆதரவாளர்கள். ‘இலங்கை அரசுக்கு சொந்தமான அரசு நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உளவு உபகரணங் களைப் பொருத்தும் ஒப்பந்தத்தை ஜஸ்ஜித் சிங்கின் 'பர்னாஸ்' கம்பெனி பெற்றிருக்கிறது. இதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அந்த ஒப்பந்தத்தின் பின்னணிதான் எங்களை அச்சமடையச் செய்திருக்கிறது.
‘வன்னிப் பகுதியில் மீண்டும் புலிகளோ, ஈழ ஆதரவாளர்களோ ஊடுருவ முடியாமலும், கடலோரப் படகுப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஏற்பாடுகளையும் கவர்னரின் மகன் நிறுவனம் செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் இலங்கை அரசு வைத்துள்ள கோரிக்கை. அதற்கு தலையாட்டியதால்தான் கவர்னர் மகன் கம்பெனிக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இலங்கை அரசின் ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது. இதை சிங்கள அரசு எப்படி வெளியில் பரப்புகிறது தெரியுமா? 'பார்த்தீர்களா... தமிழக கவர்னரின் மகனே எங்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருக்கிறார்' என்று மார்தட்டுவதாக இருக்கிறது. கிட்டத்தட்ட ராஜபக்ஷேவின் ராஜதந்திரத்தின் இன்னொரு பரிமாணம்தான் இது!’ என்று கவர்னர் மகன் மீது புகார் வாசிக்கிறார்கள்.
ஜஸ்ஜித் சிங்கை தலைவராகக் கொண்ட 'பர்னாஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்' என்கிற நிறுவனம், சென்னை வேப்பேரியில் இயங்கி வருகிறது. அதே நிறுவனத்தின் உபநிறுவனம்தான் உளவு உபகரணங் களை சப்ளை செய்கிறது. இதன் துணைத்தலைவராக (ஆபரேஷன் பிரிவு) சிவாஜிராவ் என்பவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த நிறுவனத்தைப் பற்றி விசாரித்தோம்.
'கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு செக்யூரிட்டி சேவையை முதலில் அளித்துவந்தது பர்னாஸ் நிறுவனம். ஒரு நிறுவனத்தின் முழுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்கள், அவற்றை இயக்கும் கம்ப்யூட்டர் சப்ட்வேர், ஹார்டுவேர் என அந்த நிறுவனம் வளரத் தொடங்கியது. பாதுகாப்புத் துறையில் சர்வதேசத் தரத்துடன் தனக்கென ஒரு இடத்தை குறுகிய காலத்தில் பிடித்தது பர்னாஸ் நிறுவனம். சென்னை மாநகர போலீஸ் துறை, பிரபல கல்லூரிகள், பிரபல மருத்துவமனைகள், சிமென்ட் தயாரிக்கும் நிறுவனம் என பல இடங்களிலும் பர்னாஸ் கம்பெனிதான் கண்காணிப்பு கேமராக்களை நிறுவியிருக்கிறது.
இலங்கையின் தலைநகரான கொழும்புவில் இருந்தபடியே, கடற்கரைப் பகுதியை தொலைதூரத்தில் இருந்து கம்ப்யூட்டர் உதவியுடன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் செட்டப்பை ஏற்படுத்த சிங்கள அரசு முடிவெடுத்தது. சில கோடிகள் மதிப்பிலான ஒப்பந்தத்தை தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பர்னாலாவின் மகன் ஜஸ்ஜித் சிங் பெற்றிருக்கிறார்!' என்றார்கள் பர்னாஸ் கம்பெனியைப் பற்றி அறிந்தவர்கள்.
இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து முழங்கத் தொடங்கி இருக்கும் இயக்குநர் சீமானிடம் பேசினோம். 'கவர்னர் பர்னாலாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், முதல்வர் மற்றும் துணை முதல்வர் போன்ற முக்கியஸ்தர்களின் குடும்ப விழாக்களுக்குகூட பர்னாலாவின் மகனான ஜஸ்ஜித் சிங்தான் போய் வருகிறார். தமிழகத்தின் முக்கியஸ்தர்களுடன் நெருங்கி வலம் வரக்கூடிய ஒருவர், சிங்கள அரசுடன் உளவு சம்பந்தமான ஒப்பந்தம் போட்டிருப்பதை எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியும்? அப்படியென்றால், கவர்னரின் மகனுக்கும் சிங்கள அரசுக்கும் இடையேயான தொடர்பு என்ன? தமிழகத்தின் அனுதின நிகழ்வுகளை கவனித்து அப்படியே இலங்கையிடம் ஒப்பிக்கும் வேலையை கவர்னரின் மகனுடைய நிறுவனமே செய்யும் திட்டத்தில் இருக்கிறதென்றால், தமிழர்களுக்கு என்னதான் பாதுகாப்பு? நம்முடைய கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்தும் கொடூரங்கள் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த மண்ணில் நடக்கப் போகிறதோ... இனியும் எங்களின் 'நாம் தமிழர்' இயக்கம் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. கவர்னரின் மகன் சிங்கள அரசுடனான உறவை அறுத்தெறியா விட்டால், ஒட்டுமொத்தத் தமிழகமும் போராட்டத்தில் குதிக்கும்!' என ஆவேசப்பட்டார் சீமான்.
'பர்னாஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் துணைத்தலைவரான சிவாஜிராவை தொடர்புகொண்டு பேசினோம். 'இது முழுக்க முழுக்கத் தொழில் சார்ந்த ஒரு ஒப்பந்தம். ஒப்பந்தத்தின் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிராக எங்கள் நிறுவனம் செயல் படாது என்பதை தெளிவாகவே குறிப்பிட்டிருந்தோம். தவிர தமிழக நிலைமைகளை இலங்கை அரசுக்கு நாங்கள் உளவு சொல்கிறோம் என்பது ஜமுக்காளத்தில் கடைந்தெடுத்த பொய். சென்னையை தலைமையகமாகக் கொண்டு உலக அளவில் செக்யூரிட்டி பிசினஸில் நாங்கள் மிகவும் பிரபலமாகி வருகிறோம். இதனால் இந்தியாவுக்கு அந்நியச் செலவாணி பெருகும் என்பதை ஏன் யாரும் நினைத்துப் பார்க்க மறுக்கிறார்கள்? கண்காணிப்பு குறித்த பணிக்காக இலங்கை அரசு சார்பில் உலக அளவிலான டெண்டர் அறிவிக்கப்பட்டது. அதில் எங்கள் நிறுவனம் உட்பட மொத்தம் 23 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அந்தப் போட்டியில் நாங்கள் ஜெயித்தோம். சரியாகச் சொல்வதானால், இலங்கையிலுள்ள ஏ.டி.எம். சென்டர்கள், வங்கிகள், அரசு அலுவலகங்களை வீடியோ கேமராக்கள் உதவியுடன் கண்காணிப்பதுதான் எங்கள் வேலை!
இது எதுவுமே தெரியாமல், அல்லது தெரியாதது போல் சிலர் தவறான செய்திகளைப் பரப்பினார்கள். அதன் விளைவாக, சர்ச்சையே வேண்டாம் என்று இலங்கை அரசு எங்களுக்கு கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடி நாங்கள் அந்த ஒப்பந்தத்தை மீண்டும் வாங்கியிருக்கலாம். ஆனால், எப்போது தமிழர்களுக்கு எதிராக எங்களைச் சித்திரிக்கத் தொடங்கினார்களோ... அப்போது அந்த ஒப்பந்தம் மீது எங்களுக்கு அக்கறையில்லை. அப்படியரு காரியத்தில் நாங்களோ, எங்கள் கம்பெனியோ எக்காரணம் கொண்டும் ஈடுபட மாட்டோம்.
இதோ, இப்போது மலேசிய அரசு எங்கள் நிறுவனத்துக்கு அதன் ரயில்வே இலாகாவின் சார்பாகக் கண்காணிப்பு பணிகள் செய்யும் ஒப்பந்தத்தைக் கொடுத்திருக்கிறது. சர்வதேச நிறுவனங்களுக்கு நிகராகக் கண்காணிப்பில் ஒரு புது தொழில் நுட்பத்தை உருவாக்கியிருக்கும் எங்களை யாரும் பாராட்ட வேண்டாம், தயவு செய்து அதைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்!'' என்று முடித்தார் சிவாஜிராவ்.
சீமான் தரப்பினரோ, 'தென்னை மரத்தில் ஏன் ஏறினாய் என்று கேட்டதற்கு 'புல்லு பிடுங்கத்தான்' என்று ஒருவன் சமாளித்தானாம். தென்னை மரத்தில் ஏது புல் என்று மடக்கியதும், 'அதான் இறங்குகிறேன்' என்றானாம். அந்த கதைதான் சர்ச்சை கிளப்பியதும் இவர்கள் வாபஸ் வாங்கிவிட்டு சமாளிப்பதும்!' என்கிறார்கள்.
(ஆனந்தவிகடன்)
0 விமர்சனங்கள்:
Post a Comment