தொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ்சம் அசையும்
தொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ்சம் அசையும்: சோலை
[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008, 09:48 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்]
நாம் தொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ்சம் அசையும். இல்லையேல் சிங்கள இனவாத அரசுடன்தான் கைகுலுக்கும். இதுதான் இதுவரை நாம் கண்ட நடைமுறை என்று அரசு தனிமைப்பட்டுத் தவிக்கிறது- இந்தியா என்ன செய்யப்போகிறது? என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் எம்.ஜி.ஆரின் ஆலோசகராக செயற்பட்டவருமான சோலை தெரிவித்துள்ளார்.
குமுதம் குழுமத்தின் "றிப்போர்ட்டர்" வாரமிருமுறை இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை:
டெல்லியில் சிறிலங்கா தூதுவரை நமது வெளியுறவுச் செயலாளர் சிவசங்கரமேனன் அழைத்தார். பேச்சுவார்த்தையின் மூலம் ஈழப் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் நிலை என்பதனை எடுத்துரைத்தார். செய்தி வந்தது. இப்படிச் சொன்னது சிவசங்கரமேனன்தானா? நம்ப முடியவில்லை.
எந்த இலங்கைப் பிரச்னையென்றாலும் அங்குள்ள தமிழர்களின் நலன்களை முன்னிறுத்தித்தான் நேருவும் இந்திரா காந்தியும் முடிவெடுத்தனர். ஆனால், அதன்பின்னர் ராஜீவ் காந்தி காலத்தில் இந்தியா தடம்புரண்டது. ஈழப் பிரச்சினையில் இந்திரா வகுத்த பாதையிலிருந்து இந்திய அரசு வழுக்குப் பாதையில் அடியெடுத்து வைத்தது.
1987 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை உடன்பாடு ஏற்பட்டது. அதன்பின்னர் ராஜீவ் காந்தி இலங்கை சென்றதும், மரியாதை அணிவகுப்பில் நின்ற ஒரு சிங்கள வெறியன் அவரைக் கொலை செய்ய முயன்றதும் மறக்கக்கூடிய நிகழ்ச்சியா? அதன்பின்னர் இந்திய இராணுவம் ஈழப்பரப்பில் இறங்கியது.
ராஜீவ் காந்தி காலத்தில் இலங்கையில் இந்தியத் தூதராக இருந்தவர்களில் ஒருவர் சிவசங்கரமேனன். இந்திய உளவுத்துறைத் தலைவராக இருந்தவர் எம்.கே.நாராயணன். இன்றைக்கு அதே மேனன் இந்திய அரசின் வெளியுறவுச் செயலாளர், எம்.கே. நாராயணன் பிரதமரின் பாதுகாப்புத்துறை ஆலோசகர். ரொமேஷ் பண்டாரி என்பவர் இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்தார். சிங்கள இனவாத அரசு அவரது துணைவியாருக்கு விலை மதிப்புமிக்க வைர நெக்லசை வாங்கித் தந்ததாக பிரபல இந்திய ஆங்கில ஏடு எழுதியது.
தீட்சித் என்று இன்னொருவர் தூதுவராக இருந்தார். பிரபாகரனைச் சுட்டுக்கொல்லும்படி யாழ்ப்பாணத்திலிருந்த இந்திய இராணுவத் தளபதிகளை நச்சரித்தார். அமைதியை நிலைநாட்ட வந்திருக்கிறோமே தவிர, பிரபாகரனைச் சுட்டுக்கொல்வற்காக அல்ல என்று தளபதிகள் மறுத்தனர். 'பேச்சுவார்த்தைக்கு பிரபாகரனை அழைத்து வரும்போதே தீர்த்துக்கட்டுங்கள். மேலிடத்து உத்தரவு" என்றார். மறுத்து விட்டனர்.
தனிப்பட்ட எவர்மீதும் குற்றம் கூற வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வுகளை இப்போது நாம் சுட்டிக்காட்டவில்லை. அன்னை இந்திரா காந்திக்குப் பின்னர் அரியணைக்கு வந்தவர்களுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் ஈழ மக்களின் நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சிங்கள இனவாத அரசு ஈழத் தமிழர்களை அழித்திட அடுத்தடுத்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. அதன் பின்னர்தான் ஈழத்து இளைஞர்கள் போர்க்குணம் கொண்டு புலிப்பாய்ச்சலுக்குத் தயாரானார்கள்.
ராஜீவ் காந்தியின் மரணம் சிங்கள இனவாதிகளுக்கும், இங்குள்ள ஈழத்து எதிராளிகளுக்கும் ஆயுதமாகக் கிடைத்தது. அன்னை இந்திராவின் அந்த அருந்தவப் புதல்வனின் இழப்பை ஈடுசெய்ய முடியாதுதான். இன்றைக்கும் நமது இதயங்களில் இரத்தம் கசிகிறது. ஆனால் அதனையே காரணம் காட்டி ஈழத் தமிழினத்தை அழிக்க வேண்டுமா? அதற்குத் துணை போக வேண்டுமா?
நடந்து போன துயர சம்பங்களைக் கடந்து இனி நடக்க வேண்டிய காரியங்களைக் காண்போம் என்ற மனநிலைக்கு அன்னை சோனியாவே வந்திருக்கிறார்.
அன்னை இந்திரா காந்தியைப் பலி கொண்டவன் ஒரு சீக்கியன். அதனைத் தொடர்ந்து ஆத்திரம், ஆவேசத்தில் நடந்த சீக்கியப் படுகொலைகளுக்கு மன்னிப்புக் கேட்டு விட்டோம். ஒரு சீக்கியன் செய்த பாதகச் செயலுக்காக ஒரு இனமே அழிய வேண்டுமா? அதனால்தான் ஒரு சீக்கியரையே நாட்டின் பிரதமராக ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஈழத் தமிழ் இனத்தை அழிக்கின்ற வேலைகளை சிங்கள இனவாத அரசு வெறிகொண்டு வேகப்படுத்தியிருக்கிறது. அதற்காக எத்தனையோ நாடுகளில் ஆயுதம் வாங்கிக் குவித்திருக்கிறது. அந்த ஆயுதங்களால் போரைத் தீர்மானிக்க முடியாது.
ஆனால், இந்திய அரசு சிங்கள இனவாத அரசிற்கு பெரும் சேவகம் செய்திருக்கிறது. ஈழப் போராளிகளின் கடல் நடமாட்டத்தைக் கண்காணிப்பதே இந்திய கடற்படைதான் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதனை சிங்கள கப்பற்படைத் தளபதியே பகிரங்கமாக அறிவித்தார்.
சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ் மண்ணிலேயே பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த அநியாயம் அம்பலமானதும் சிங்களவர்கள் வட மாநிலப் பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
கொழும்பிற்கு அருகிலுள்ள இராணுவ விமானத் தளங்கள் மீது ஈழப் போராளிகளின் சிட்டுக் குருவி விமானங்கள் தாக்குதல் தொடுத்தன. அதனைக் கண்டு சிங்களவன் சீற்றம் கொண்டதைவிட நமது இந்திய அதிகாரிகள்தான் அதிக ஆவேசம் கொண்டனர். எனவே, இந்திய - சிங்கள கூட்டு ரோந்து வேண்டும் என்றன. அப்படிச் சொன்னவரே சிவசங்கர மேனன்தான்.
ஈழத்தில் தினம் தினம் சிங்கள விமானங்கள் குண்டுமாரி பொழிகின்றன. குடியிருப்புக்கள், பள்ளிகள், வயல்கள், கோயில்களை அழிக்கின்றன. குழந்தைகள் காப்பகம் கூட அழிக்கப்பட்டது. அப்போதெல்லாம் நமது இதயங்கள் படபடத்தன. டெல்லி அதிகாரிகளோ அதற்காகக் கண்டனம் கூடத் தெரிவித்ததில்லை. ஆனால் சிங்கள அரசுக்கோ இராணுவத்திற்கோ சேதம் என்றால் எல்லா உதவிகளையும் செய்தனர். இன்றுவரை செய்கின்றனர்.
இதற்கு அவர்களைக் குற்றம் சாட்டக்கூடாது. நாமே குற்றவாளிக்கூண்டில் நிற்க வேண்டும். இங்குள்ள தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை. உகாண்டாவில் குஜராத்திகளுக்குச் சோதனையென்றால் கட்சி வேறுபாடின்றி அணிதிரள்கின்றனர். ஜாம்பியாவில் மார்வாடிகளுக்கு ஆபத்து என்றால் மத்திய அரசே குரல் கொடுக்கிறது.
இப்போது தமிழகம் ஈழத் தமிழர்களுக்காக அணிதிரள்கிறது. முதல்வர் கூட்டிய சர்வகட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் மத்திய அரசும் சோம்பல் முறிக்கிறது. அரசியல் மாச்சரியங்களால் இதயங்களைக் கருக்கிக் கொண்டவர்கள் மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு தனிமைப்பட்டு வருகிறார்கள். அவர்களைப் பற்றி கவலை கொள்ளாது இப்போது உருவாகி இருக்கும் ஒற்றுமை வலிமை பெற வேண்டும். அந்த வலிமைதான் இந்திய அரசை அசைக்கும். ஈழத் தமிழர்களுக்குக் கரம் கொடுக்கும். ஈழத்துக் கதிரவனை மறைக்கும் கார்மேகங்கள் கலையும்.
அங்குள்ள தமிழர்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க இலங்கை அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று செய்தி வந்தது. அடுத்து நமது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புவிற்குப் பயணம். ஆஹா! இனி ஈழத்தின் கிழக்கு வெளுத்துவிடும் என்று நம்பினால் ஏமாந்துவிடுவோம். அதே சமயத்தில் அவர்களுடைய முயற்சியைப் பாராட்டுகிறோம்.
தமிழகத்தில் ஈழப் பிரச்னை எதிரொலிக்கும் போதெல்லாம் நமது பிரதமர்கள் சிங்கள இனவாத அரசிற்கு வேதாந்தம் சொல்வார்கள். இதற்கு முன்னர் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர்களாக இருந்த நரசிம்மராவ், நட்வர்சிங் போன்றவர்கள் கொழும்பிற்குப் பயணம் போய் வந்திருக்கின்றனர். அதனால் என்ன பலன் ஏற்பட்டது?
இராமேஸ்வரத்திற்கு அப்பால் இந்தியக் கடலில் மிதக்கும் நமது போர்க் கப்பல்கள் இடம் மாற வேண்டும். அதனை நமது பிரதமர் செய்தால்தான் நம்பிக்கை பூக்கும். இந்திய ஆயுதங்கள் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் நிம்மதி பிறக்கும்.
ஈழப் போராளிகளை எதிர்த்து சிங்கள இராணுவம் போர் புரிவதை நாம் விமர்சிக்கவில்லை. ஆனால் போராளிகளுடன் போர் என்ற பெயரால் எத்தனை ஆயிரம் அப்பாவி ஈழத்து மக்கள் மடிந்திருக்கிறார்கள்?
ஈழப் போராளிகளின் பாசறைகள் தாக்கப்படுவது பற்றி நாம் கவலை கொள்ளவில்லை. ஆனால் லட்சோப லட்சம் தமிழ் மக்களை சிங்கள இனவாத அரசு அநாதைகளாக அகதிகளாக கண்ணீரும் கம்பலையுமாக அலையவிட்டுக் கொன்று குவிப்பதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.
நாம் தொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ்சம் அசையும். இல்லையேல் சிங்கள இனவாத அரசுடன்தான் கைகுலுக்கும். இதுதான் இதுவரை நாம் கண்ட நடைமுறை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Puthinam.com
0 விமர்சனங்கள்:
Post a Comment