கிளிநொச்சியின் கதை!
கிளிநொச்சி இப்பொழுது ஒரு கூரையில்லாத நகரம். சமாதான காலத்தில் கட்டிய வீடுகளைத் தாங்களே உடைத்துக்கொண்டும் பெயர்த்துக்கொண்டும் சனங்கள் போய்விட்டார்கள்.
நான்கு ஆண்டுகளுக்குள் எல்லாமே தலைகீழாகிவிட்டன. இப்போது சுவர்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன. ஆட்களற்ற தெருக்கள். சனங்களில்லாத வளவுகள். தெருநிறைய நாய்கள். குண்டுவீச்சு விமானங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி மெல்ல மெல்ல சூனியப்பிரதேசமாக மாறிவருகிறது.
அது முழு யுத்தப் பிராந்தியமாகக் கனிந்துகொண்டிருக்கிறது. தமிழர்களின் பட்டினங்களில் மிகவும் இளையது கிளிநொச்சி. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியிலேயே அது உருவானது. சடுதியாக வளர்ச்சியடைந்து கிளிநொச்சி வடபகுதியின் முக்கிய விவசாயப் பட்டினமாகியது. வடக்கின் நெற் களஞ்சியம் கிளிநொச்சி என்று ஒருகாலம் சொல்லப்பட்டது. வடக்கிலிருக்கும் மிகப்பெரியகுளமான இரணைமடு கிளிநொச்சியின் செல்வாக்கில் முக்கியமானது. எண்பதுகளில் கிளிநொச்சி வர்த்தக நகரமாகமாறியது.
வடக்கிற்கும் தெற்கிற்குமான தொடர்பாடலில், வணிகத்தில் கிளிநொச்சியே மையம். தெற்கிலிருந்து வரும் வண்டிகள் வாகனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் பொருட்களை விற்றும் வாங்கியும் சென்றன. இதனால் அது சடுதியான பலவகை வளர்ச்சிகளைப் பெற்றது. எண்பதுகளில் யாழ்ப்பாணம் முற்றவெளிக்கு நிகரான மதிப்பை கிளிநொச்சி நகர மத்தியிலிருக்கும் ரொட்டிக்கோ மைதானம் பெற்றது. இந்தியப் பாடகர்கள், திரைப்பட நடிகர்கள், கலைஞர்கள் தொடக்கம் இலங்கையின் பிற கலைஞர்கள், ரொட்ரிக் கோவில் கூடி நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். பொருளாதா வளர்ச்சிக்கேந்திரம் மாதிரி அது கல்வி, கலாச்சார ரீதியிலும் சடுதியான வளர்ச்சியைக் கண்டது. வயதில் இளைய இந்தப்பட்டினம் இத்தனை வளர்ச்சியையும் மதிப்பையும் பெற்றது என்றது ஆச்சரியந்தான். இது முதற்கட்டம். ஆனால் இது நீடிக்கவில்லை.
இரண்டாம் கட்டம் கிளிநொச்சியின் அழிவுகாலம் அல்லது சிதைவுகட்டம் எனலாம். எண்பதுகளின் நடுப்பகுதியில் கிளிநொச்சி நெருக்கடிச் சூழலுக்குள் சிக்கியது. ஆனையிறவிலிருந்த சிறீலங்காப் படையினர் பரந்தன் வழியாக கிளிநொச்சியை தமது பிடிக்குள் கொண்டுவந்தபோது கிளிநொச்சி சிதைந்தது. அதன் மதிப்பும் வளர்ச்சியும் சடுதியாக, அதேவேகத்தில் சரிந்தது. இப்போது தென்னிலங்கையின் தம்புள்ள சந்தைக்கு நிகரான சந்தைப் பெறுமதியை நோக்கியிருந்த கிளிநொச்சி பின்னர் அச்சப்பிராந்தியமாகியது. 1990 களின் முற்பகுதியில் கிளிநொச்சி மீண்டும் மெல்லத் துளிர்க்கத் தொடங்கியது. 1995 இல் யாழ்ப்பாணத்தின் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட ரிவிரச (சூரியக்கதிர்) நடவடிக்கையோடு கிளிநொச்சி சடுதியாக மறுபடியும் நகராகியது.
சனங்கள் நெரிபடும் வீதிகள் பார்க்குமிடமெல்லாம் கடைத் தொகுதிகள் பள்ளிக்கூடங்கள் பெருத்தன. வண்டிகள், சாலைகள், சந்தை என்று அது எல்லா நிலையிலும் வீங்கியது. இயல்பான வளர்ச்சி என்பதைவிட வீங்கியது என்று சொல்வதே பொருத்தம். ஆனால் இந்த வீக்கத்தின் வேகத்துக்கும் அதன் கனபரிமாணத்துக்கும் ஏற்றமாதிரி அது 1996 இன் நடுப்பகுதியில் சத்ஜெய நடவடிக்கையோடு முற்றாக அழிந்தது. ஒரு மனிதர்கூட எஞ்சவில்லை. அதன் தெருக்களில் கிளிநொச்சியைப் படையினர் ஆக்கிரமித்தபோது ஒரேயரு நாய்மட்டும் நகரின் மையத்தெருவான ஏ-9 இல் நின்றதை அரச தொலைக்காட்சி காட்டியது.
1996 இலிருந்து 2000 வரையான நான்காண்டுகளில் கிளிநொச்சியில் தங்களுடைய வீடுகளைப் பார்க்கப்போன 300ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர். அந்தளவுக்கு அது பயங்கரங்களின் சூழ் இடமாக இருந்தது.2000 இல் கிளிநொச்சியை புலிகள் மீண்டும் கைப்பற்றிய போது அது மிதிவெடிகளாலும் காடுகளாலும் புதர்களாலும் நிறைந்திருந்தது. ஒரு நகரம் என்பதற்கான தடையங்கள் பல இடங்களிலும் இல்லாமலிருந்தது. ஆனால், அது மீண்டும் சடுதியாக வளர்ந்தது போக, விளைச்சல் காணும் நிலத்தைப்போல அது உடனேயே முளைத்து வளர்த்தது. 2002 சமாதான உடன்படிக்கை கிளிநொச்சி நகரத்திலிருந்து செய்யப்பட்டது. அரசியல் முக்கியத்துவம் மிக்க நகரமாக அது மாறியது. இலங்கைத் தீவில் தீர்மானம் எடுக்கும் இரண்டு அரசியல் மையங்களாக கொழும்பும் கிளிநொச்சியும் சரிநிகர் ஸ்தானத்திலிருந்தன.
வெளிநாட்டுப் பிரதானிகள், இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், கலாச்சராவாதிகள் எனச் சகலரும் கிளிநொச்சியில் திரண்டனர். சர்வதேச தொண்டு அமைப்புக்கள் தங்கள் வன்னித் தலைமையகத்தை கிளிநொச்சியிலேயே வைத்தனர். பேச்சுவார்த்தை நடத்தியபோது கிளிநொச்சியில் உலங்குவானூர்திகளில் விருந்தாளிகள், பேச்சாளர்கள், அனுசரணையாளர்கள் எனச் சகலரும் வந்திறங்கினார்கள். கிளிநொச்சியின் தெருக்கள் மீண்டும் சனங்களால் நிறைந்தது. ஏ-9 பாதை மறுபடியும் உயிர்தந்தது. உயிர்த்தெழுந்த பட்டினமாக புதுப்பொலிவாக சடுதியாக உலகப்பரப்பில் அறிமுகமானது கிளிநொச்சி. இந்தளவுக்கு வேறு எந்தப் பட்டினமும் இலங்கையில் சடுதியான மதிப்பைப் பெற்றதில்லை. ஆனால் இந்த மதிப்பெல்லாம் ஆறு ஆண்டுகள் வரையில்தான் நீடித்தது. இப்போ அது மறுபடியும் கூரையில்லாத நகரமாகிவிட்டது.
ஆட்களில்லாத தெருக்களுள்ள பட்டினமாகியுள்ளது. நாய்கள் மட்டும் வானத்தைப் பார்த்து ஊளையிடும் அளவுக்கு அது தனித்து, வெறுமையாகியிருக்கிறது. இப்போது அது யுத்த சூனிய அரங்கு. இனிவரும் நாட்களில் கிளிநொச்சி யுத்தமையப் பகுதியாகக் கூடிய நிலைமைகளே அதிகமுண்டு. கிளிநொச்சிக்கான யுத்தப் பிரகடனத்தை சிறீலங்கா அரசு முழு அளவில் செய்திருக்கிறது. இதன் முதற்கட்டமாக அது கிளிநொச்சியை ஸ்தம்பித நிலைக்கு கொண்டு வந்துள்ளது. அடுத்தகட்டமாக நகரத்தை தமது பிடிக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது படைத்தரப்பு.இந்த நிலை புலிகளுக்கும் சவாலாகியுள்ளது. கிளிநொச்சி நகர்பகுதியை படைத்தரப்பு கைப்பற்றினால், அடுத்தாக பரந்தன், ஆனையிறவு, இயக்கச்சி, வெற்றிலைக்கேணி... என்று படை பெரும் பரப்பில் விரியும். இதுதான் படைத்தரப்பின் நோக்கமாகும். இந்தப் பத்தியில் கடந்த சில மாதங்களின் முன்னர் சொன்னதைப்போல, இப்போது நடந்துகொண்டிருப்பது யாழ்ப்பாணத்துக்கான யுத்தமே.
யாழ்ப்பாணத்தை மீட்பதற்காக புலிகளும் இந்த யுத்தத்தில் இறங்கியிருக்கின்றார்கள். எனவே சரியான அர்த்தத்தில் கிளிநொச்சிக்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்தின் மீதே போர்மேகம் திரண்டுகொண்டு இருக்கிறது.படைத்தரப்பின் முதுகெலும்பை உடைக்காதவரையில் இந்த யுத்தத்தை நிறுத்த முடியாதென்று புலிகளுக்குத் தெரியும். யுத்தத்தை நிறுத்துவதற்கு இரண்டே இரண்டு வழிகள்தானுண்டு. ஒன்று படையைப் புலிகள் சிதைத்தழிப்பது. அடுத்தது இந்திய அல்லது மேற்கு சிறீலங்கா அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பது. மேற்கு அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் இந்தியா அதற்குத் தயாராக இல்லை என்பது தெளிவு.
எனவே புலிகள்தான் இதனைச் செய்யவேண்டியுள்ளது. புலிகளின் நிகழ்ச்சிநிரல் இனியும் தாமதிக்க முடியாது என்ற புள்ளிக்கு வந்துவிட்டது. அடுத்துவரும் மாவீரர்நாள் பிரகடனம், யுத்தத்தைப் போல இன்னுமொரு சவாலாக புலிகளுக்கு உள்ளதால் அதற்குள் அவர்கள் வலிந்த தாக்குதலை மேற்கொண்டேயாக வேண்டும். இதற்காக அவர்கள் பெரும் விலையைக் கொடுத்தாவது தமது நகர்வை மேற்கொண்டேயாகவேண்டியுள்ளது. எனவே அடுத்தகட்ட யுத்தம் யாழ்ப்பாணத்தின் மீது அல்லது மணலாற்றின் மீது அல்லது வன்னி மேற்கில் நிலைகொண்டிருக்கும் படையினர் மீது என்பதாகவே இருக்கும். இதில் முதற் தேர்வு யாழ்ப்பாணம் மீதானதாகவே எனத்தெரிகிறது.
- மனோகரன்
தமிழ்க்கதிர்
வெளியீட்டாளர்கள்
0 விமர்சனங்கள்:
Post a Comment