புலிகளிடமிருந்து உத்தரவாதத்தை இந்தியா பெற்றுத்தராததால் போர்நிறுத்தம் சாத்தியம் இல்லை
ரொஷான் நாகலிங்கம்
யுத்த நிறுத்தத்தின் போது புலிகள் தாக்குதல்களை நடத்தமாட்டார்களென்ற உத்தரவாதத்தை இந்தியா பெற்றுத்தரமுடியாதிருப்பதால் போர்நிறுத்தமொன்று சாத்தியமில்லையென அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இது தொடர்பான உத்தரவாதத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ கோரியிருந்ததாகவும் ஆனால், அதனை பெறமுடியாதென புதுடில்லி தெரிவித்து விட்டதாகவும் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார்.
அத்துடன், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவும் மற்றும் எதிர்க்கட்சிகளும் ஒரேவிதமான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் யாப்பா மேலும் தெரிவித்ததாவது;
யுத்த நிறுத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது இதன் விசேடமாக யுத்த நிறுத்தத்துக்கு செல்ல சொல்வதாயின் புலிகள் கொலைகளையும் தாக்குதல்களையும் நடத்தமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை இந்தியாவை பெற்றுத்தர முடியுமாவென ஜனாதிபதி அவரிடம் கோரினார்.
முகர்ஜி இந்திய அரசுடனும் அங்குள்ள கட்சிகளுடனும் கதைத்து இதனை செய்ய முடியாதென தெரிவித்த நிலையில் எவ்வாறு யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு நாம் செல்லமுடியும். புலிகள் ஆயுதத்தை கீழே வைத்தாலே யுத்த நிறுத்தத்துக்கு அரசாங்கம் செல்லும்.
எனவே, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவும். எமது நாட்டுக்குமட்டுமல்லாமல் இந்த பிராந்தியத்திலுள்ள பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைக்கும்.
இந்தியா இவ்வாறான நிலைப்பாட்டில் இருக்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி உட்பட அனைத்துக்கட்சிகளும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளன. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையை முன்கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒத்துழைத்துள்ளனர்.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் அதேநேரம், தமிழ் மக்களின் பிரச்சினைகளை, தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அரசு நடவடிக்கையெடுத்து வருகின்றது.
சிவாஜிலிங்கம் எம்.பி. மாத்திரமல்லாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கும் வகிக்கும் இன்னும் சிலர் நாட்டின் அரசியலமைப்புக்கு எதிராக பேசுகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்புரிமை இருக்கின்றது. எனினும், நாட்டின் அரசியலமைப்புக்கு எதிராக பேசுகின்றது குறித்து விசாரணை நடைபெறுகின்றது என்றார்.
கிழக்கைப்போல பயங்கரவாதிகளிடமிருந்து வடக்கு மீட்கப்பட்டதும் வடக்கின் வசந்தம் முன்னெடுக்கப்படும் காங்கேசன் துறையிலுள்ள சீமெந்து நிறுவனம் மீண்டும் செயல்பட நடவடிக்கையெடுக்கப்படும். இது பாரிய சீமெந்து ஆலையாகும். இதன் மூலம் சீமெந்தில் தன்னிறைவு காணமுடியுமெனத் தெரிவித்தார்.
தினக்குரல்
0 விமர்சனங்கள்:
Post a Comment