கிளிநொச்சியை இப்போது பிடிப்பதென்பது முடியாத காரியம்- கெஹலிய.. முடிந்தால் பிடித்துக் காட்டட்டும்-பிரபாகரன்
(லங்கா ஈ நியுஸ் டிச-27,2008 மு.ப 10.30)
கிளிநொச்சிக்குள் இலங்கை அரசாங்கப் படைகள் நுழைந்தால் பாரிய உயிரிழப்புகளையும் அழிவுகளையும் அவர்கள் முகங்கொடுக்க நேரிடுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எச்சரித்துள்ளார்.
லக்பிம பத்திரிகைக்கு அவர் ஈமெயில் மூலம் வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நான் எந்தக் காரணம் கொண்டும் எனது பூமியை விட்டோ எனது மக்களை விட்டோ ஓடிச் செல்லப் போவதில்லை.
வன்னிப் பிரதேசத்தில் இடம்பெறும் யுத்தம் காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இவர்கள் நலன் கருதியாவது ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாமே எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரபாகரன்,
நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவது எமது மக்களுக்காகவே. அவர்களுக்கு விடுதலை கிடைக்கப் பெற்ற பின்னரே ஆயுதத்தைக் கீழே வைப்போம். இது தவிர பலாத்காரத்தாலோ பயமுறுத்தலாலோ எம்மை அடிபணிய வைக்க முடியாது.
தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக பல்வேறு தியாகங்களை; செய்துள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டால் உரிய தீர்வினைக் காணமுடியும்.
பயங்கரவாதம் சர்வதேச ரீதியாக வெறுக்கப்படும் ஒன்று இந்த நிலையில் இந்த யுத்தத்தில் உங்களால் வெற்றி பெற முடியுமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில்,
எம்மால் முன்னெடுக்கப்படுவது ஒரு போராட்டமே. தமிழ் மக்கள் வாழும் இலக்குகள் மீது விமானத் தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று அவர்களுக்குப் பாரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துவது பயங்கரவாதம் இல்லையென்றால் நாம் எமது மக்களுக்காகப் போராடுவது மட்டும் எவ்வாறு பயங்கரவாதமாக முடியும்?
மேஜர்ஜெனரல் ஜானக பெரேராவை நாம் படுகொலை செய்யவில்லை. இதற்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஜானக பெரேராவுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் முரண்பாடுகள் இருந்தன. இதனை சிங்கள மக்கள் அறிவர்.
இவ்வாறான மனிதப் படுகொலைகளைக் கண்டித்து சிங்கள மக்கள் விரைவில் வீதிக்கு இறங்குவர். அப்போது உண்மை புலனாகும.; இவ்வாறு அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,தற்போதைய சூழ்நிலையில் கிளிநொச்சியை விரைவாகக் கைப்பற்றுவதென்பது முடியாத காரியமென பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இருதின என்ற சிங்களப் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சியில் சுமார் 1,50,000 மக்கள் வாழ்கின்றனர்.
இந்த நிலையில் படையினர் இந்தப் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீவிரமாகச் செயற்பட்டால் சில வேளைகளில் பொதுமக்களுக்குப் பாதிப்புகள் ஏற்படலாம். ஆகவே இதனைக் கருத்தில் கொண்டே மிக நிதானமாக எமது படையினர் செயற்படுகின்றனரெனத் தெரிவித்துள்ளார்.
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
0 விமர்சனங்கள்:
Post a Comment