நத்தார் போர்நிறுத்தம் இல்லை: அரசாங்கம்
கத்தோலிக்க மற்றும் அங்கிலிக்கன் திருச்சபை ஆயர்கள் கூட்டாக விடுத்த கோரிக்கைக்கு அமைய நத்தார் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்களுக்காக வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் யுத்தம் நிறுத்தப்படாது என அரசாங்கம் தெரிவித்தது.
விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே வைத்தால் மாத்திரமே அவர்களுடன் அரசாங்கம் அரசியல் பேச்சுவார்த்தையொன்றுக்குச் செல்லும் என தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தின் பணிப்பாளர்; லக்ஷ்மன் குலுகல்ல கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.
“ஆயுதங்களை கைவிட்டாலே புலிகளுடன் பேச்சு என்பதை அரசாங்கம் தெளிவாகக் கூறிவிட்டது. அவர்களுடன் பேச்சுக்குச் செல்வது பற்றி இதுவரை அரசாங்கம் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவிலல்லை” என அவர் குறிப்பிட்டார்.
நத்தார் மற்றும் புதுவருடக் கொண்டாட்ட காலங்களில் வடபகுதியில் நடந்துவரும் யுத்தத்தை நிறுத்தி விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கப் படைகளும் போர்நிறுத்தமொன்றுக்குச் செல்லவேண்டுமென யாழ், மன்னார், அநுராதபுரம் ஆகிய மறைமாவட்ட ஆயர்களும், குருநாகல் மற்றும் கொழும்பு மாவட்ட அங்கிலிக்கன் திருச்சபை ஆயர்களும் இணைந்து அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டுவரும் வன்னி மக்கள் இந்தப் புனித காலப்பகுதியிலாவது சற்று ஆறுதலடைவதற்கு இரு தரப்பும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும், இலங்கை தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் எதிர்மறையான நிலைப்பாடு குறித்து மாற்றப்படவேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
அத்துடன், வன்னிப் பகுதியில் நடந்துவரும்; மோதல்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைப் பாதுகாப்பான சூழலில் வாழவைப்பதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன், அரசாங்கம் இணைந்து பணியாற்றவேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment