பெருமளவான படையினர் பலி 1,700 புலிகளே மீதமாக உள்ளனர்-இராணுவ தளபதி கூறுகிறார்
பயங்கரவாதத்திற்கு எதிராக வடக்கை நோக்கி முன்னெடுக்கப்பட்ட படைநடவடிக்கையின் போது பெருமளவான படையினர் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர். பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் ஊனமுற்றும் உள்ளனர் என்று இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.
புலனாய்வு பிரிவினரின் தகவல்களின் பிரகாரம் கடந்த இரு மாதங்களில் 1500 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதுடன் 1700 ற்கும் 1900 ற்கும் இடைப்பட்ட பயங்கரவாதிகளே மீதமிருக்கின்றனர். இவ்வாறான் நிலையில் படை நடவடிக்கையை நிறைவு செய்வதற்கு இவ்வருடம் முழுவதும் தேவைப்படாது என்றும் அவர் சொன்னார். கிளிநொச்சியை கைப்பற்றியது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் கிளிநொச்சி மீட்கப்பட்டது தொடர்பில் தெளிவுப்படுத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெளிவுப்படுத்துகையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கிழக்கில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கை 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் வடக்கை நோக்கி முன்னகர்த்தப்பட்டது. வடக்கில் 57ஆவது படையணி வவுனியாவில் இருந்து தனது நடவடிக்கையை 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்தனர்.
2007ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மடுவில் இருந்து மன்னாரை நோக்கிய படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் வெலிஓயாவில் இருந்து 57, 59 படையணிகள் நடவடிக்கைகளை ஆரம்பித்தன. மன்னார் மீட்கப்பட்டதன் பின்னர் தெற்கில் இருந்து வடக்கிற்கு பயணிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததுடன் மாங்கேணி, நெடுங்கேணி பகுதிகளிலும் உக்கிர மோதல்கள் இடம்பெற்றன.
மன்னாருக்கு பின்னர் பூநகரி கைப்பற்றதோடு, ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கை 2007ஆம் மார்ச் மாதம் முதல் இரவு, பகல், மழை, வெள்ளம் ,காடு, வெயில் என்று பார்க்காது ஒவ்வொரு நாளும் எந்த நேரத்திலும் முன்னெடுக்கப்பட்டது. இந்த தாக்குதல்கள் மூலம் புலிகளை எந்த நேரத்திலும் எங்கும் தாக்க முடியும் என்பதை படைத் தரப்பினர் எடுத்துக்காட்டினர்.
எடுக்கப்பட்ட படை நடவடிக்கைகள் மூலம் பெருந்தொகையான படையினர் பலியானார்கள், காயமடைந்துள்ளனர். வைத்தியசாலைகளிலும் சிகிச்சைப் பெற்று வருகின்னர். பலர் ஊனமுற்றவர்களாக இருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களே பொறுப்பு கூற வேண்டும்.
மடு, பூநகரி பிரதேசத்தை கைப்பற்றியதன் மூலம் 23 வருடங்களுக்குப் பின்னர் தெற்கிற்கும் வடக்கிற்குமான பாதை திறக்கப்பட்டது. இந்த பாதை இன்றும் திறந்துள்ளதுடன் பாதையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பூநகரிக்குப் பின்னர் கிளிநொச்சி மற்றும் பரந்தனை நோக்கி இரு முனைகளில் படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கடந்த வருடம் இறுதி நாளன்று நள்ளிரவு 1.30 மணியளவில் பரந்தனை கைப்பற்றி 6 கிலோ மீற்றர் தூரத்திற்கு கிளிநொச்சியை நோக்கி பயணித்தோம்.
கிளிநொச்சிக்கு வடக்கு மேற்கு தெற்கு மும் முனைகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு புலிகளின் அரசியல் மத்திய நிலையம், வங்கி, நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என சகலவற்றையும் எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். கிளிநொச்சியில் இருந்து தொடர்ந்து மேற்கொண்ட படை நடவடிக்கை மூலமாக படையினர் தற்பொழுது ஆனையிறவுக்கு இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கின்றனர். இதேவேளை, வெலிஓயாவில் இருந்து முன்னேறிய படையினர் முல்லைத்தீவில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கின்ற விமான நிலைய ஓடுபாதைக்கருகில் இருக்கின்றனர். இரவு,பகல் பாராது தொடர்ச்சியாக படைநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி 1998 ஆம் ஆண்டிற்கு பின்னரும் பரந்தன் ,ஆணையிரவு 1994 ஆம் ஆண்டிற்கு பின்னரும் மீட்கப்பட்டுள்ளது. புலிகள் கிளிநொச்சியிலிருந்து மேற்கு திசையில் தப்பித்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். தப்பித்து ஓடிகொண்டிருக்கின்ற புலிகளையும் படையினர் விரட்டி தாக்குதல் நடத்திகொண்டிருக்கின்றனர்
. கிழக்கில் தொப்பிக்கல பிரதேசத்தை போன்றதொரு பிரதேசமே மீதமிருக்கின்றது எனினும் அந்த பிரதேசம் களப்பு,கடலினால் சூழப்பட்டுள்ளது படைநடவடிக்கையின் மூலமாக கடந்த இரண்டு மாதங்களுக்குள் 1500 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர் இன்னும் 1700 ற்கும் 1900 ற்கும் இடைப்பட்ட பயங்கரவாதிகளே மீதமிருப்பதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதிகளை தோற்கடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை நிறைவுசெய்வதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படாது இவ்வருடமும் தேவைப்படாது வருடம் நிறைவடைவதற்குள் மீதமுள்ளவற்றையும் மீட்போம் என்றார்.
வீரகேசரி நாளேடு 1/3/2009
0 விமர்சனங்கள்:
Post a Comment