2000ற்கும் அதிகமான மக்கள் வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் வருகை
வன்னியிலிருந்து யாழ் குடாநாட்டிற்குத் தொடர்ச்சியாக மக்கள் வருவதாக தென்மராட்சி பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 2000ற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வந்திருப்பதாகவும், இவர்கள் கொடிகாமம், மிருசுவில், இருபாலை, குருநகர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதேச செயலக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
பொங்கல் தினமான இரவு இயக்கச்சிப் பகுதியிலிருந்து 385 பேர் பிரதேச செயலக அதிகாரிகளால் மீட்டு, யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள் திருநாவுக்கரவு மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டு, இன்று வியாழக்கிழமை மிருசுவில் நீக்கலஸ் தேவாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்களிலிருந்து தப்பும் நோக்கில் சிறிய பற்றைகள் மற்றும் மரங்களின் கீழ் ஒழிந்திருந்தவர்களே அரசாங்க அதிகாரிகளால் இவ்வாறு மீட்டுச் செல்லப்பட்டுள்ளனர். வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உடல், உளரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன், பசித்த நிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்றவர்களில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் சுகவீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக பிரதேச செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னியிலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வந்தவண்ணம் இருப்பதால் அவர்களைத் தங்கவைத்து, சமைத்த உணவுகளை தென்மராட்சி பிரதேச செயலகம் வழங்கி வருகிறது.
இடம்பெயர்ந்துவரும் மக்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனியாரும் முன்வரவேண்டுமென பிரதேச செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, இடம்பெயர்ந்து சென்றவர்களில் 536 பேரைப் பொலிஸார் தமது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதாகத் தெரியவருகிறது. இவர்களை விரைவில் பிரதேச செயலகத்தால் பராமரிக்கப்படும் முகாம்களுக்கு மாற்றவிருப்பதாகப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment