யுத்தம் சரணம் - 3 "பாதி மொட்டை"
பூரி ஜகந்நாதர், பிஜு பட்நாயக், நவீன் பட்நாயக், பரதேசப் பாதிரியார் ஒருவரை எரித்த பஜ்ரங் தளத்துச் செயல்வீரர், இன்னும் யோசித்தால் ஒன்றிரண்டு கிரிக்கெட் மேட்சுகளில் இந்தியாவுக்காக விளையாடிய தெபாஷிஸ் மொஹந்தி என்று ஒரிஸ்ஸாவைப் பற்றி நாம் அறிந்த செய்திகள் எல்லாம் வெகு சொற்பமாக இருக்கும். ஆந்திரக் கரையைத் தவறவிடும் புயல்கள் மட்டும் வருஷத்துக்கு ஒருமுறை ஒரிஸ்ஸாவைக் கடந்துபோகும். அப்போது வெள்ள நிவாரணம் கேட்பார்கள். மழையற்றுப் போனால் பஞ்ச நிவாரணம். நம் நாட்டில் இருக்கும் ஒரிஸ்ஸாதான். ஆனாலும் நமக்குக் கொஞ்ச தூரம். இல்லையா?
இதுவே கலிங்கம் என்கிற அதன் பழைய பெயரில் சொன்னால் உடனே மரம் நட்டு, பசுமைத் தாயகம் அமைப்பதற்கு முந்தைய காலகட்டத்து அசோக மன்னரின் யுத்தம் ஒன்று நினைவுக்கு வரும். கிறிஸ்து பிறப்பதற்கு முந்நூறு வருடங்களுக்கு முன்னால் பிறந்து, ஆண்டு அனுபவித்து, வாழ்ந்து, இறந்துவிட்டு, பாடப்புத்தகங்களில் மறுஜென்மம் எடுத்த மன்னர்.
மற்றபடி நமக்கு ஒரிஸ்ஸா அத்தனை நெருக்கமில்லை. ஆனால், இலங்கை மக்களுக்கு அது நெருக்கம். அசோக மன்னரின் கலிங்க யுத்தத்துக்கு வெகுகாலம் முன்னாலிருந்து அவர்களுக்கு ஒரிஸ்ஸா என்கிற கலிங்கம் பரிச்சயம். வெகுகாலம் என்றால் கி.மு. 543. பின்னாளில் இலங்கையின் முதல் மன்னனாக முடி சூடவிருந்த விஜயன், ஒரிஸ்ஸாவிலிருந்துதான் அங்கே புறப்பட்டுப் போனான்.
இலங்கையின் வரலாறை விஜயனிடமிருந்துதான் நாம் பேசத் தொடங்கவேண்டியிருக்கிறது. இது ஒரு விசித்திரம். ராஜராஜ சோழன் மாதிரி இங்கிருந்து படை திரட்டிக்கொண்டு போய் கொடி நாட்டி, நல்லாட்சியோ என்னவோ அளித்து, சரித்திரத்தில் இடம் பிடித்தவர்களைப் போல் விஜயனுக்கு கலர்ஃபுல் வெற்றிப் பின்னணிகள் கிடையாது. ஒரு தண்டனைக் கைதியாக ஒரிஸ்ஸாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவன். அதுவும் சும்மா இல்லை. பாதித் தலைக்கு மொட்டையடித்து, கப்பலேற்றி அனுப்பிவைத்தார் அவனது தந்தையான அந்நாளைய கலிங்க மகாராஜா.
ஆதி இலங்கையின் சரித்திரத்தைச் சொல்லும் மகா வம்சம், இந்தப் பாதி மொட்டை விவகாரத்தைக் குறிப்பிட்டாலும், விஜயன் அப்படியென்ன பெரிய குற்றம் செய்தான், மொட்டையடித்து நாடு கடத்துமளவுக்கு என்று விரிவாக விளக்குவதில்லை. `விஜயன் தீயவன், அவனது தொண்டர்களும் தீயவர்கள்' என்று ஒரு வரியில் முடித்துவிடுகிறது மகா வம்சம். நிறைய பொறுமையும் மாய யதார்த்த வகைக் கதை படிப்பதில் ஆர்வமும் இருந்தால் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். ஜாலியாக இருக்கும்.
விஜயனின் தாத்தா ஒரு சிங்கம். சிங்கமென்றால், நிஜமான சிங்கம். இன்றைய பங்களாதேஷும் அன்றைய வங்க தேசமுமான குறுநிலத்தின் ராஜாவுக்கும், அவரது கலிங்க தேசத்து மனைவிக்கும் பிறந்த பெண்ணொருத்தி, இந்த சிங்கத்தைத் திருமணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள். இளவரசி ஏன் சிங்கத்தை மணந்தாள் என்றெல்லாம் கேட்கக்கூடாது. சோதிடர்கள் அப்படித்தான் கணித்து வைத்தார்கள். எனவே அவள் அப்படியே செய்தாள். தீர்ந்தது விஷயம்.
அந்த இளவரசி சிங்க ஜோடிக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. சிக பாஹு என்பது பையனின் பெயர். சிக சிவாலி என்பது பெண்ணின் பெயர்.
வெளியே வேறு பெண் கிடைக்கவில்லையோ என்னவோ. சிக பாஹு, தன் சகோதரி சிக சிவாலியையே பின்னர் திருமணம் செய்துகொண்டு, வரிசையாக இரண்டிரண்டாகப் பதினாறு ஜோடி பிள்ளைகள் பெற்றான். மொத்த ஸ்கோர் 32. அதில் மூத்தவன்தான் மகா வம்சம் குறிப்பிடும் விஜயன்.
வாலிப வயதில் விஜயன் மிகவும் ஆட்டம் போட்டிருக்க வேண்டும். ஒரு கொடுங்கோல் இளவரசனான அவனை, நாட்டு மக்கள் மிகவும் வெறுத்து, மன்னருக்கு மனு கொடுத்தனர். உங்கள் பிள்ளையென்று பார்க்காதீர். அவனுக்கு அதிகபட்ச தண்டனை அளித்து எங்களை ரட்சிப்பீராக.
பிள்ளைப் பாசத்தால் கொல்லாமல் விடுத்து, பதிலுக்குப் பாதி மொட்டை அடித்து, அவனது எழுநூறு தொண்டர்களுடன் கப்பலேற்றி அனுப்பி வைத்தார் மன்னர் சிக பாஹு. ஒரு கப்பல் அல்ல. மூன்று கப்பல்கள்.
ஒன்றில் விஜயனும் அவனது ஆள்படைகளும். இன்னொன்றில் அந்தக் கூட்டத்தின் மனைவிமார்கள். வேறொரு கப்பலில் குழந்தை குட்டிகள்.
மன்னர் எதற்காக இப்படி தனித்தனிக் கப்பல்களில் அவர்களை அனுப்பவேண்டும்? துரதிருஷ்டவசமாக இப்போது கேட்டுத் தெளிவு பெற வசதியில்லை என்பதால், அதனை அப்படியே ஏற்றுக்கொண்டாக வேண்டும். விஜயன் கோஷ்டி தென் இலங்கைக்கு வந்து இறங்கியது. அவனது மனைவியும் அவன் கூட்டத்தாரின் மனைவிமார்களும் மஹில தீபிகா என்ற தீவுக்குச் சென்று இறங்கினார்கள். அந்த அப்புராணி பிள்ளை குட்டிகள் நாகத்தீவில் வந்து இறங்கின என்று மகா வம்சம் குறிப்பிடுகிறது.
மகா வம்சம் சொல்வது ஒருபுறமிருக்க, விஜயனின் பூர்வீகமான `சிம்மபுரா' என்கிற சிஹ புரா சமஸ்தானம் இந்தியாவின் மேற்கு மாகாணமான குஜராத்துக்குச் சமீபத்தில்தான் இருந்திருக்கிறது என்றும் சில வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. சிந்து நதிக்கு அந்தப்பக்கம் அதாவது இன்றைய பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் பிராந்தியங்களில் எங்கோ என்றும் சொல்லப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சீனப்பயணி யுவான் சுவாங்கூட காந்தார மண்ணில் (என்றால் ஆப்கனிஸ்தான். மகாபாரத சகுனி முதல் இன்றைய ஹமீத் கர்சாய் வரையிலான ஆட்சியாளர்களைக் கண்ட தேசம்.) சிம்மபுர ராஜ்ஜியம் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டத்துக்குத் துல்லியமான வரலாற்றுக் குறிப்புகள் கிடைப்பது ரொம்பக் கஷ்டம். என்ன ஆனாலும் விஜயன் இங்கிருந்து புறப்பட்டுத்தான் இலங்கைக்குப் போயிருக்கிறான் என்பது வரை சந்தேகமில்லை.
அப்படி அவன் இலங்கைக்குப் போய் இறங்கியபோது அங்கே யார் இருந்தார்கள்?
இதில்தான் ஆரம்பிக்கிறது விஷயம்.
விஜயன், இலங்கையின் முதல் மன்னன். அதில் சந்தேகமில்லை. இளவரசனாக இருந்தபோது அழிச்சாட்டியங்கள் செய்து அடித்துத் துரத்தப்பட்டாலும், அங்கே போய் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, (அதற்கும் சில கதைகள் இருக்கின்றன. முதலில் ஒரு யட்சியைத் திருமணம் செய்துகொள்கிறான். பிறகு சங்க காலப் பாண்டிய இளவரசி ஒருத்தியை மதுரையிலிருந்து வரவழைத்து மணக்கிறான். யட்சர்களைக் கொன்று கடாசிவிட்டு ஆட்சிப் பீடத்தில் ஏறுகிறான்.) ஒரு மாதிரி நல்ல மன்னனாகத்தான் இறுதிவரை இருந்திருக்கிறான்.
சிங்க தாத்தாவைக் கொன்ற அவனது தந்தையை ஊரில் சிகலா என்று மக்கள் அழைத்துக்கொண்டிருந்தார்கள். அதே பெயரை அவன் தனக்கும் தன்னுடன் வந்த எழுநூறு வீரர்களுக்கும் அடையாளமாக வைத்துக்கொண்டான். சிகலா இனம்தான் பின்னர் சிங்கள இனமானது என்று சொல்வார்கள்.
இன்னொரு விதமாகவும் இதனைக் குறிப்பிடுவதுண்டு. பழைய கலிங்க ராஜ்ஜியத்தின் சின்னமும் கொடியும் சிங்கம். சிங்கத்தின் பேரனான விஜயன் இலங்கைக்குப் போனபோது அங்கே இரண்டு பூர்வகுடிகள் இருந்தார்கள். வடக்கே இருந்தவர்கள் நாகர்கள். தெற்கே இருந்தவர்கள் இயக்கர்கள். நாகர், நாக வழிபாடு, நாகர் கோயில் எல்லாம் நம் பக்கமும் உண்டு. அதுவேதான். ஆனால், அந்த இயக்கர்கள் என்னும் ஆதி இனம், இந்தப் பக்கம் எங்கும் கிடையாது. இலங்கையில் மட்டும்தான். `எலு' என்ற ஒரு மொழியை அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஆக, சிங்கம் போய் எலுவுடன் ஐக்கியமாகிறது. சிங்களம் பிறக்கிறது. போதுமா?
மகா வம்சம் என்னும் இலங்கையின் ஆதி வரலாறைச் சொல்லும் நூல், தனியொரு மனிதரால் எழுதப்பட்டதல்ல. பவுத்தம் இலங்கையில் பரவிய காலத்துக்குப் பிறகு, பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு புத்த பிக்குகளால் வாய் வழியாகவும் நாள் குறிப்பு வடிவிலும் சொல்லி, எழுதி வைக்கப்பட்ட பல கதைகளை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் மகாநாம தேரா என்கிற புத்த பிக்கு தொகுக்கிறார். வெறுமனே தொகுக்காமல், பிரதிக்கு அவரே ஒரு எடிட்டராகவும் இருந்திருக்கிறார். ஆதிகால புத்த பிக்குகள் எழுதி வைத்ததெல்லாம் ஒரே வழவழா. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். நான் கொஞ்சம் வெட்டி ஒட்டி சரி பண்ணித் தருகிறேன் என்று ஒரு முன்குறிப்பும் கொடுக்கிறார்.
அதன்படி பிஹாரிலிருந்து பவுத்தமும் ஒரிஸ்ஸாவிலிருந்து விஜயனும் புறப்பட்டு இலங்கையைத் தொடுகிறார்கள். புத்தரே ஒரு நடை இலங்கைக்குச் சென்று வந்ததாகக் கூட ஒரு கதை உண்டு. கதைதான். ஆதாரங்கள் ஏதும் கிடையாது.
இலங்கையின் ஆரிய ஊடுருவல் இவ்வாறாக அமைந்ததாக சரித்திரம் சொல்கிறது.
ஆரியம் ஒன்று இருந்தால் முன்னதாக அங்கே திராவிடம் இருந்தாக வேண்டுமல்லவா? முன்னர் சொன்ன நாகர் இனத்தவர்கள்தான் அவர்கள். தமிழ் பேசும் மக்கள். வட இலங்கை முழுதும் பரவி வசித்தவர்கள்.
விஜயன் கூட முற்று முழுதான தெற்குப் பக்கத்திலேயே செட்டில் ஆனதாகத் தெரியவில்லை. நடுவே மலைப்பகுதியில் கடம்ப நதியோரம் தோற்றுவிக்கப்பட்ட `அனுராதகாமம்' என்கிற இன்றைய அனுராதபுரம்தான் இலங்கையில் முறைப்படி அமைக்கப்பட்ட முதல் குடியிருப்புப் பகுதி. அதற்கு வடக்கே உபதிஸ்ஸகாமம் என்று இன்னொரு குடியிருப்பு அடுத்தபடியாக. இந்த `காமம்' ஒன்றுமில்லை. கிராமம் என்று இன்று நாம் சொல்வதன் அன்றைய வழக்கு. அவ்வளவே.
இந்த மாதிரி இன்னும் சில வசிப்பிடங்களை ஏற்படுத்திக்கொண்டு விஜயன் ஆட்சியில் அமர்ந்தான். அவனுக்குப் பின்னால் அடுத்த கப்பல்களில் வந்த பெண்டுபிள்ளைகள் இறங்கிய தீவுகள், அங்கே அவர்களது நிலைமை பற்றியெல்லாம் மகா வம்சம் பெரிதாகக் கவலைப்படவில்லை. விஜயனே கவலைப்படாமல் அடுத்த திருமணங்களில் தீவிரமாகிவிட்ட பிறகு, மகா வம்சம் என்ன செய்யும்?
ஆக, கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் விஜயனும் அவனது எழுநூறு ஆதரவாளர்களும் இலங்கையின் ஆதி குடிகளுள் ஒருவரான இயக்கர் இனப் பெண்களுடன் இணைந்து உருவாக்கிய சந்ததியே இன்றைய சிங்கள இனத்தவர். அந்த வகையில், இன்றைய இலங்கைப் பிரச்னை என்பது ஆதியில் தோன்றிய பாதி ஒரிஸ்ஸாக்காரர்களின் சந்ததியினருக்கும் மீதி இடங்களில் வாழ்ந்துகொண்டிருந்த முழுத் தமிழர்களுக்குமானதாகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment