கிளி, முல்லை அரச அதிபர்கள் வெளியேறினர்; செயற்பாடுகள் நிறுத்தம்: 4 இலட்சம் மக்கள் நிர்க்கதி
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசாங்க அதிபர்கள் வன்னியிலிருந்து வெளியேறியிருப்பதுடன், சிவில் நிர்வாகப் பணிகளையும் இடைநிறுத்தியுள்ளனர். இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கியுள்ள சுமார் 4 இலட்சம் பொதுமக்கள் நிவாரண உதவிகள் எதுவுமின்றிப் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்களிலிருந்து வெளியேறி தற்காலிகமாக புதுக்குடியிருப்பில் செயற்பட்டுவந்த தமது அரசாங்க அதிபர் காரியாலயங்களை மூடியுள்ள அவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு பணித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு ஏதுவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் கருதி அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவரும் பணிகளை இடைநிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
இரண்டு தரப்புக்களுக்குமிடையே மோதல்கள் தீவிரமடைந்து கடுமையான எறிகணை வீச்சுக்களும் ஆரம்பித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
புதுக்குடியிருப்பில் தற்காலிகமாக இயங்கிவந்த கிளிநொச்சி அரசாங்க அதிபர் செயலகம் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதாக தற்போது அங்கிருந்து வெளியேறிவிட்ட கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் தெரிவித்தார்.
4 இலட்சம் மக்கள் நிர்க்கதி
இலங்கை மோதல் வரலாற்றில் முதற்தடவையாக இவ்வாறு அரசாங்க அதிபர் காரியாலயங்கள் மூடப்பட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வன்னீயில் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலிருந்தும், முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்தும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து முழுமையாகவும் இடம்பெயர்ந்துள்ள சுமார் 4 இலட்சம் பொதுமக்கள் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் குறுகிய பிரதேசத்துக்குள் செறிவாக வாழ்ந்து வருகின்றனர்.
முற்றாக நிவாரண உதவிகளில் தங்கியுள்ள இவர்களுக்கு வேண்டிய உதவிப் பணிகள் அரசாங்க அதிபர் காரியாலங்களுக்கூடாகவே வழங்கப்பட்டு வந்தது.
தற்போது அரசாங்க அதிபர் காரியாலயங்கள் மூடப்பட்டு, பணிகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், இங்கு வாழும் 4 இலட்சம் மக்களும் உதவிகள் ஏதுமின்றிப் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத உதவிப்பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
பணி தொடரும்: ஐ.சி.ஆர்.சி.
எனினும், முல்லைத்தீவு மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் தமது பணிகள் தொடரும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சுமார் 300 நோயாளர்கள் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ள செஞ்சிலுவைச் சங்கம், நோயாளர்களும், காயமடைந்தவர்களும் இருக்கும்வரையில் தாம் தொடர்ந்து அங்கே இருக்கப்போவதாகக் கூறியுள்ளது.
இதேவேளை, உணவு விநியோகப் பணிகளை மேற்கொள்வதற்காக புதுக்குடியிருப்பில் செயற்பட்டுவந்த ஐ.நா. அலுவலகம் தற்போது அரசாங்கம் அறிவித்துள்ள யுத்த சூனியப் பிரதேசமான உடையார்கட்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment