ஈழத்தமிழரை எங்களால் காப்பாத்த முடியாது!
வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை அரசின் நீதி மற்றும் சட்டம் மறுசீரமைப்புத் துறை மலையகத் தமிழ் அமைச்சர் புத்திரசிகாமணி சென்னை வந்திருந்தார். அவரிடம் இலங்கைத் தமிழர்களின் நிலைமை குறித்துப் பேசினோம்.
ஈழ தமிழர்களை ஒரு பக்கம் ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கும் சிங்கள அரசில், சகோதரத் தமிழர்களான மலையக மக்களின் பிரதிநிதியாக நீங்கள் அங்கம் வகிப்பது என்பது...
``இலங்கையைப் பொறுத்தவரை தமிழர்களில் மூன்று பிரிவினர் இருக்கிறார்கள். அதாவது வடக்கில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள். கிழக்கு இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்கிற மூன்று பிரிவுதான் அது. ஈழத்துத் தமிழர்கள் மலையகத் தமிழர்களான எங்களையும், கிழக்குப் பகுதி தமிழர்களையும் இரண்டாம், மூன்றாம் தர பிரஜைகளாகத்தான் நினைத்துப் பேசினார்கள். இதில் மலையக மக்களுக்கென்று போராட்டங்கள் இருந்தது. பிரஜா உரிமை மீட்புப் போராட்டத்தில் காந்திய வழியில் போராடினோம். அப்போது எங்களுக்கு ஈழத் தமிழர் தலைவர்கள் உதவவில்லை. எங்களுக்குத் துரோகம் இழைத்தனர்.
அன்று உதவியிருந்தால் இன்று அவர்கள் அகதிகளாக வந்திருக்க வேண்டியதில்லை. இடது சாரி சிங்களவர்கள்தான் பாராளுமன்றத்தில் எங்களுக்காக குரல் கொடுத்தார்கள். ஈழத் தமிழ்த் தலைவர்கள் ஆதரவு எங்களுக்குக் கிடைந்திருந்தால், அதிக எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினராக தமிழர்கள் இருந்திருப்பார்கள். அதே சமயம் அவர்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. சில தமிழ்த் தலைவர்கள் இலங்கை அரசுக்கு ஆதரவாக அன்று செயல்பட்டனர்.''
இது இரண்டு தமிழ்ச் சகோதரர்களுக்கிடையே இலங்கை அரசு ஏற்படுத்துகிற பிரித்தாளும் சூழ்ச்சிதானே?
``அரசாங்கம் பிரித்தாளுகிறது என்பதை விட, நாங்கள் எங்கள் தேவைகளுக்காக அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அடிப்படைத் தேவைகள் நிறைய இருக்கின்றன. சொந்த நிலம், வீடு எதுவும் இல்லை. அரசையும் எங்கள் தொழில் தருணர்களையும் நம்பி இருக்கிறோம். இப்போது தான் படிப்படியாக 16 ஆயிரம் ஆசிரியர்கள், பொறியாளர்கள், காவல்துறையில் பணி புரிபவர்கள் என்று முன்னேறி வருகிறோம். அவர்கள் ஆள வேண்டும் என்று போராடுகிறார்கள். நாங்களோ எங்கள் உணவு, உடை, இருப்பிடத் திற்காக உரிமை கேட்டுப் போராடுகிறோம்.''
சக தமிழராய் ஈழத்தில் நடத்தப்படும் கொடூரத் தாக்குதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
``அப்பாவி மக்கள் மீது எங்கு தாக்குதல் நடந்தாலும் அது வருத்தத்திற்குரியது. அதே சமயம் யுத்தம் நடக்கிற இடத்தில் சட்டம் இருக்காது. இது தவிர்க்க முடியாது. சமரசப் பேச்சு வார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டபோது புலிகள் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லை. சரியான முறையில் சர்வதேச அங்கீகாரத்தை வாங்க அவர்கள் முயலவில்லை. இந்தியா இந்த விடயத்தில் தன் கையைச் சுட்டுக் கொண்டிருக்கிறது. மீண்டும் அந்த தவறைச் செய்யாது. இங்கிருப்பவர்கள் சொல்கிற தொப்புள் கொடி உறவு என்பது மலையகத் தமிழர்களிடம் தான் முதலாவதாக இருக்கவேண்டும். நாங்கள்தான் நேரடியான சகோதரர் கள். ஈழத்தமிழர்கள் சித்தப்பா மகன் உறவுபோல, ஆனால் எங்களைப் பற்றி இங்கிருப்பவர்கள் யாரும் கவலைப் படமாட்டேன்கிறார்களே, எமக்கு குரல் கொடுப்பதில்லையே என்கிற ஆதங்கம் எங்களுக்கு உண்டு.''
நீதித் துறையை கையில் வைத்திருக்கும் நீங்கள் செத்து மடியும் அப்பாவித் தமிழருக்கு நீதி கிடைக்கச் செய்ய முடியுமா?
``எங்களுக்கும் ரத்தம் துடிக்கத்தான் செய்கிறது. வேதனைப் படத்தான் செய்கிறோம். ஆனால் குளத்தில் விழுந்தவனை கரையில் நின்று வேடிக்கை பார்க்கும் நீச்சல் தெரியாதவன் நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். ஈழத்தமிழர்களை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. நீதியைப் பற்றி இலங்கையில் வந்து பாருங்கள். நீதிமன்றங்களின் அநேக தீர்ப்புகள் அரசுக்கு எதிராக இருக்கிறது. மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது''என்றார் சூடாக.
தேனி கண்ணன்
படம்: சித்ராமணி
குமுதம்
0 விமர்சனங்கள்:
Post a Comment