முல்லைத்தீவு நகர் படையினர் வசம்
முல்லைத்தீவு நகரத்தை இலங்கைப் படையினர் இன்று தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இராணுவத்தின் 59வது பிரிவின் ஒரு அணி இன்று காலை முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றி அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
1996ம் ஆண்டு முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த இராணுவ முகாமைத் தாக்கி முல்லைத்தீவு நகரை புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர் முதல் தடவையாக முல்லைத்தீவு நகரம் மீண்டும் படையினர் வசம் வந்திருப்பதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்மடுக்குளத்தை உடைத்து புலிகள் படகுத் தாக்குதல்
இதேவேளை, முல்லைத்தீவுக்கு வடக்காக தர்மபுரம் பிரதேசத்தில் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்மடு குளத்தின் அணைக்கட்டைக் குண்டு வைத்துத் தகர்த்த புலிகள், அணை உடைத்துப் பாய்ந்த நீரூடாகப் படகுகளில் வந்து தொடுத்த தாக்குதலை இராணுவத்தினரின் 574வது பிரிவினர் முறியடித்திருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.
இதில் புலிகளின் மூன்று படகுகள் உடைக்கப்பட்டு மேலும் இரண்டு சேதமாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசத்தை நோக்கிப் புலிகள் கடுமையான ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு படையினர் வழங்கிவந்த உதவிப் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கல்மடுகுள அணைக்கட்டுத் தகர்ப்பினால் ஏராளமான கால்நடைகள், விவசாயப் பயிர்கள், வீடுகள், கட்டடங்கள், சொத்துக்கள் உட்பட பொதுமக்களுக்கும் பாரிய தேசம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment