கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது பொதுமக்களுக்கு இழப்பு எதுவுமில்லை
* ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியதாக "இந்து' ஆசிரியர் ராம் தெரிவிப்பு
கிளிநொச்சியைக் கைப்பற்றியதையடுத்து ஆனையிறவையும் ஏனைய முக்கிய இலக்குகளையும் கைப்பற்றுவதற்காக இலங்கையின் ஆயுதப்படைகள் துரிதமாக முன்னேறும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கிறார். அண்மித்த எதிர்காலத்தில் வட இலங்கையில் முல்லைத்தீவுக் காடுகளுக்கு வெளிப்புறமாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் எங்கும் செல்லமுடியாது என்ற நம்பிக்கையுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ இருக்கிறார் என்று சென்னையிலிருந்து வெளியாகும் "இந்து' பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் "இந்து' பத்திரிகையின் முதல் பக்கத்தில் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராகவிருந்த கிளிநொச்சியை விடுவிப்பதற்காக ஆயுதப்படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது "பொதுமக்களுக்கு இழப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கொள்கையை' படையினர் மேற்கொண்டமை குறித்து ஞாயிறு மாலை கொழும்பிலிருந்து தொலைபேசி மூலம் என்னுடன் உரையாடிய போது ஜனாதிபதி ராஜபக்ஷ திருப்தி தெரிவித்தார். தமது சகல நடவடிக்கைகளின் போதும் அவர்கள் இக்கொள்கையை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாலஸ்தீனத்தில் என்ன நடக்கின்றது என்று பாருங்கள்!மோசம் அங்குள்ள உண்மையான நிலைவரத்தை அறிந்து கொள்வதற்காக பாலஸ்தீன ஜனாதிபதியுடன் (மஃமூட் அப்பாஸ்) நான் கதைத்தேன் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ கூறினார்.
கைதிகள் போன்று வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்கவில்லையென கவலை தெரிவித்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் சுதந்திரம், மனித உரிமைகளை புலிகள் தொடர்ந்தும் நிராகரித்தால் அந்த அமைப்பு தடையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ராஜபக்ஷ எச்சரித்தார். ஒருவார காலப்பகுதிக்குள் தடை அமுலுக்கு வரக்கூடும் என்பது விளங்கிக் கொள்ளக்கூடியது. இந்தியா உட்பட சுமார் 30 நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பொதுமக்களை பராமரிப்பது தொடர்பாக நாம் அதிகளவு முன்னுரிமை கொடுக்கவுள்ளோம் என்று தொலைபேசி மூலமான உரையாடலின் போது ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்தார். "அவர்களின் பாதுகாப்பை நாம் விரும்புகிறோம் அதனாலேயே அவர்களின் விடுதலையை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். நாம் அவர்களுக்கு உணவு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். நாம் புலிகளுக்கும் உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் வந்த பின்னரும் கூட நாம் அவர்களை பட்டினியுடன் இருக்க விடமாட்டோம்' என்று ராஜபக்ஷ கூறினார்.
விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் படையினரிடம் சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அகதிகளாக சில தற்கொலைக் குண்டுதாரிகள் வருவதற்கு முயற்சி செய்யும் சாத்தியம் குறித்தும் தனது அரசாங்கத்துக்கு தெரியும் என்றும் ராஜபக்ஷ கூறினார்.
கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் சுமார் 15 தொடக்கம் 20 வரையிலான தற்கொலைக் குண்டுதாரிகள் ஊடுருவியிருக்கலாமென நம்பப்படுகின்றது. அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் முடிந்தளவுக்கு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் ராஜபக்ஷ கூறினார்.
தினக்குரல்






0 விமர்சனங்கள்:
Post a Comment