முல்லைத்தீவில் தர்மபுரம் பிரதேசமும்
பலத்த மோதலின் பின்னர் கைப்பற்றப்பட்டதாக
இராணுவம் அறிவிப்பு; 4 சடலங்கள்; ஆயுதங்களும் மீட்பு
முல்லைத்தீவிலுள்ள புலிகளின் முக்கிய பிரதேசங்களில் ஒன்றான தர்மபுரம் பிரதேசத்தை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக மீட்டெடுக்கும் நோக்குடன் முன்னேறிவரும் இராணு வத்தின் 58வது படைப் பிரிவினர் தர்மபுரம் பிரதேசத்தைத் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தப் பிரதேசத்தில் படை நடவடிக்கைகளில் ஈடுபட் டுள்ள இராணுத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சாவிந்திர டி சில்வா தலைமையிலான படையினர் நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் தர்மபுரம் நகரை கைப்பற்றி அங்கு தமது நிலைகளை பலப்படுத்தி வருவதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.
பரந்தன்-முல்லைத்தீவு நெடுஞ்சாலையிலுள்ள மிகப் பெரிய நகரங்களில் ஒன்றாக தர்மபுரம் பிரதேசம் கருதப்படுவதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், ஏ-9 நெடுஞ்சாலைக்கு கிழக்கே 15 கிலோ மீற்றர் தொலை விலும் ஏ-35 பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் அமைந்து ள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில தினங்களாகப் பாதுகாப்புப் படையினரு க்கும், புலிகளுக்கும் இடையில் இந்தப் பிரதேசத்தில் இடம்பெற்ற கடுமையான மோதல்களின் போது இராணுவத்தின் கவனத்தை மிகவும் ஈர்த்திருந்த தர்மபுரம் பல வருடங்களுக்கு பின்னர் படையினரின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இராணு வப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
தர்மபுரம் நகரை கைப்பற்றும் படை நடவடிக்கைகளின் போது படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட புலிகளின் 4 சடலங்களையும், புலிகளின் பெருந்தொகையான ஆயுதங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கைப்பற்றப்பட்ட தர்மபுரத்திலிருந்து முல்லைத்தீவை நோக்கிய படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட பிரிகேடியர், இந்தப் பிரதேசத்தில் புலிகளால் மனிதக் கேடயங்களாக வைத்திருந்த பொது மக்களையும் புலிகள் அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, இராமநாதன் புரம், முரசுமோட்டை, புதுக்குடியிருப்பு கிழக்கு, உதயன் கட்டுக்குளம், அம்பகாமம் வடக்கு மற்றும் இரணைமடு ஆகிய பிரதேசங்களிலும் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பிரதேசங்களிலுள்ள புலிகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்திய படையினர் கொல்லப்பட்ட புலிகளின் ஆறு சடலங்களையும், ரி-56 ரக துப்பாக்கி 5, இயந்திரத் துப்பாக்கி மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment