பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைப்பது பற்றி தீர்மானிக்கவில்லை
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை இந்தியாவிடம் கையளிப்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லையென பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பிரபாகரன் உயிருடன் கைதுசெய்யப்படும் பட்சத்தில் சர்வதேச சட்டத்துக்கு அமையவே அவருக்கு எதிரான நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் எனவும், அதற்கமையவே பிரபாகரனை இந்தியாவிடம் கையளிப்பதா இல்லையா என்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
விடுதலைப் புலிகளின் தலைவரைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்தால் அது பற்றி இலங்கை அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து முடிவெடுக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“ஜெனீவா ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களுக்கு அமையவும், ஏனைய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளுக்கு அமையவுமே பிரபாகரனை என்ன செய்வது என்பது பற்றித் தீர்மானிப்போம்” என அமைச்சர் கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.
இராணுவ நடவடிக்கைகளை தாமதப்படுத்துவதற்காக விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்களைத் தடுத்துவைத்திருப்பதாக ரம்புக்வெல குற்றஞ்சாட்டினார்.
கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து பலர் ஏற்கனவே வெளியேறியிருப்பதால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் எனத் தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பில் தேடப்படும் பிரபாகரனை தம்மிடம் கையளிக்கவேண்டும் என இந்திய காங்கிரஸ் கட்சி கடந்த சனிக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தது.
விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பென்பதுடன், ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பில் பிரபாகரன் தேடப்பட்டு வருபவர் என காங்கிரனின் பேச்சாளர் வீரப்ப மௌளி ஊடகவியலாளர்களிடம் கூறியிருந்தார்.
“அவர் ஒரு கொலைக்காகத் தேடப்படுகிறார். அவரை இந்தியாவிடம் ஒப்படைத்தால் மகிழ்ச்சியடைவோம். அவர் செய்த குற்றத்துக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்” என மௌளி தெரிவித்தார்.
ஐ என் லங்கா இணையம்






0 விமர்சனங்கள்:
Post a Comment