மக்கள் எவரையுமே காணமுடியாத கிளிநொச்சி நகரில் தொடர்ந்தும் பலத்த துப்பாக்கிச் சூடு, ஷெல் சத்தங்கள்
மக்கள் எவரையுமே காண முடியாதவாறு காணப்படும் கிளிநொச்சி நகரில் கூரைகள் இல்லாத கட்டிடங்களும் குண்டுகள் துளைத்த கட்டிடங்களும் சேதமான சுவர்களுமே காணப்படுவதாக கிளிநொச்சிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் நகரைச் சுற்றி ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டு சத்தங்களும் கடும் ஷெல் சத்தங்களும் கேட்ட வண்ணம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கிளிநொச்சி நகரை வெள்ளிக்கிழமை படையினர் கைப்பற்றியதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்கள் படைத்தரப்பால் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஊடகவியலாளர்கள் அங்குள்ள நிலைமைகள் பற்றிக் கூறும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் இருந்து காட்டுப் பகுதிகளை நோக்கி கடும் ஷெல் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. தூரத்தில் ஷெல்கள் வீழந்து வெடிக்கும் சத்தங்களும் கேட்கின்றன.
கவச வாகனங்களும் இராணுவ வாகனங்களும் "ஏ9' பிரதான வீதியிலும் குறுக்கு வீதிகளிலும் நடமாடுவதையும் காணமுடிந்தது. கண்ணிவெடிகள், மிதி வெடிகளை அகற்றும் பணிகளும் நடைபெறுகின்றன.
விடுதலைப் புலிகளின் முன்னர் காப்பரணாக அமைந்த இடத்தில் முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் ஊடகவியலாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
மண் அரண்கள் படையினரால் சிதைக்கப்பட்டுக் காணப்படுகின்றன. அடிக்கடி ஹெலிகொப்டர்களும் மிகத் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தன.
அக்கராயன்குளம் அருகில் அமைந்த கட்டிடம் ஒன்றில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வன்னி யுத்தம் குறித்து விளக்கிக் கூறினார்.
முல்லைத்தீவு காடுகளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிக்கும் வரை இராணுவ நடவடிக்கை ஓயப்போவதில்லை என அவர் கூறினார்.
வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எதிர்காலத் தாக்குதல்கள் கிளிநொச்சியில் இருந்தே மேற்கொள்ளப்படும்.
இந்த யுத்தத்தைத் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்வோம். இந்த யுத்தத்தால் விடுதலைப் புலிகளின் பகுதிகள் நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டு வருகின்றன.
விடுதலைப் புலிகளின் படையணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது.
கிளிநொச்சிக்காக புலிகள் மிகக் கடுமையாகப் போரிட்டனர். கிளிநொச்சிக்குள் படையினர் நுழைவது மிகக் கடுமையாக இருந்தது. இங்கு நுழைவதற்கு ஒன்றரை மாதங்களுக்கும் மேல் சென்றதாகவும் விரைவில் இந்த யுத்தத்தை முடித்து விடுவோம் எனவும் தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment