எம்.டி.வி, எம்.பி.சி கலையகங்கள் மீது தாக்குதல் , பாரிய அளவில் சொத்துக்கள் சேதம்
தெபானம பன்னிப்பிட்டியவிலுள்ள எம்.டி.வி, எம்.பி.சி கலையக கட்டிடங்களின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் கலையக கட்டிடங்கள் மற்றும் சொத்துக்களிற்கு பாரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு ஊழியர்களை அச்சுறுத்தி 20பேர் அடங்கிய குழு ரி-56 ரக துப்பாக்கி மற்றும் வாள்களுடன் அத்துமீறி கலையக கட்டிடத்தின் கண்ணாடிகளை உடைத்து உள்நுழைந்துள்ளது.கலையகத்தில் காணப்பட்ட கணினிகள், ஒளிப்பதிவு,பரிவர்த்தனை கருவிகளிற்கு சேதம் விளைவித்துள்ளதுடன் கைக்குண்டினை வீசியுள்ளனர். அத்துடன் பிரதான கட்டுப்பாட்டு அறைக்கு தீவைத்துள்ளனர்.இதனையடுத்து கலையகத்தில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்த 4 பவுசர்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.தற்பொழுது தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது.
15 முதல் 20 பேர் அடங்கிய ஆயுத குழுவொன்று இத்தாக்குதலினை மேற்கொண்டதாகவும். இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலை நடத்திவிட்டு வெளியேறும் போது கட்டிடத்தினுள் குண்டு இருப்பதாக கலையக ஊழியர்களை அச்சுறுத்தி விட்டு இவ் ஆயுதக்குழு சென்றுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதலில் வெடிக்காத நிலையில் குண்டினை மீட்டுள்ளனர்.
எம்.பி.சி. எம்.டி.வி கலையங்கள் மீது இன்று காலை இனந்தெரியாத ஆயுதகுழுவொன்று மேற்கொண்ட தாக்குதலை பல்வேறு ஊடக அமைப்புக்கள் மற்றும் சமய தலைவர்கள் வன்மையாக கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Virakesari






0 விமர்சனங்கள்:
Post a Comment