முல்லைத் தீவில் பிரபாகரன்
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் (54) முல்லைத் தீவில் தஞ்சம் அடைந்திருக்கலாம் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் வெள்ளிக்கிழமை கைப்பற்றியதைத் தொடர்ந்து பிரபாகரன் முல்லைத் தீவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் அவரை உயிருடன் பிடிப்பதே ராணுவத்தின் குறிக்கோள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடலோர நகரான முல்லைத் தீவில் பிரபாகரன் தங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடங்களைச் சுற்றி ராணுவம் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. தற்போது 40 கி.மீ. சுற்றுப் பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் பிரபாகரனை உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதில் ராணுவம் முனைப்பாக உள்ளது.
குளிர்பதனம் (ஏசி) செய்யப்பட்ட பதுங்கு குழியில் பிரபாகரன் தங்கியுள்ளதாகவும், தரைக்கடியில் 30 அடி ஆழத்தில் இந்த பதுங்கு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை நாளிதழ் வரைபடத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. பகலில் எப்போதும் பதுங்கு குழியில் இருக்கும் பிரபாகரன், இரவில் மட்டுமே வெளியே வருவார். அவரது ஆலோசனைப்படி அவரது பதுங்கு குழி அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த அறையில் குளிர்பதனம் மற்றும் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.
பதுங்கு குழி இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு செல்வதற்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பதுங்கு குழியின் கடைசி தளத்தில் பிரபாகரன் தங்கியிருப்பார் என்றும் அந்த அறையிலிருந்து வெளியேற வசதியாக இரு வழிகள் உள்ளதாகவும் அந்த வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரபாகரன், காலை 5 மணிக்கு எழுந்துவிடுவார். சர்க்கரை இல்லாத தேநீர் அல்லது பால் அருந்திவிட்டு காலை 6.30 மணிக்கு போர் தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார்.
போர் தளத்தில் உள்ள தளபதிகளுக்கு தன்னிடம் உள்ள சக்திவாய்ந்த ரேடியோ மூலம் கட்டளைகளைப் பிறப்பிப்பார். அதுவும் தளபதிகளிடம் நேரடியாக பேசமாட்டார். தனது அந்தரங்க காரியதரிசி மூலம் கட்டளைகளைப் பிறப்பிப்பார்.
இரவு நேரத்தில் வயர்லெஸ் ரேடியோக்கள் மூலம் பேசும்போது ஒட்டுக்கேட்க வாய்ப்பிருப்பதால், செயற்கைகோள் தொலைபேசி மூலமே தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்துவார்.
பிரபாகரனின் உடல்நிலையை தினமும் மூன்று மருத்துவர்கள் சோதனை செய்வார்கள். காலை மற்றும் மாலை என இரு வேளையிலும் அவரது ரத்த அழுத்தம் சோதிக்கப்படும். சைவ உணவுகளை விரும்பி உண்ணும் அவர், மருத்துவர்களின் அறிவுரைப்படி பகலில் உப்பு சேர்க்காத உணவை கொஞ்சமாக உண்பார். இரவிலும் சாதம் அல்லாத உணவுகளை கொஞ்சமாக எடுத்துக்கொள்வார் என்று நாளிதழில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் எப்போதும் நல்ல உடல் ஆரோக்கியதுடன் இருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment