போர்நிறுத்த உடன்படிக்கையே இராணுவ வெற்றிக்குக் காரணம்: ரணில் விக்ரமசிங்க
2002ஆம் ஆண்டு செய்யப்பட்ட போர்நிறுத்த உன்படிக்கையாலேயே தற்பொழுது அரசாங்கப் படைகள் இராணுவரீதியாக வெற்றிபெற்றிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அரசாங்கம் கூறுவதைப் போன்று போர்நிறுத்த உடன்படிக்கை காலத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்திருந்தால் அரசாங்கப் படைகள் தற்பொழுது பாரிய எதிர்ப்பைச் சந்தித்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறினார்.
“விசேடமாக கிழக்கு மோதல்கள் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரை நேருக்குநேர் சந்திக்கவில்லை. அரசாங்கப் படைகளால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மோதல்களுக்கு விடுதலைப் புலிகள் புதியரக ஆயுதங்களைப் பயன்படுத்தியிருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவ்வாறான நிலையில் போர்நிறுத்த ஒப்பந்தம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்க உதவியாக இருந்தது என எவ்வாறு கூறமுடியும்” என ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பினார்.
“போர்நிறுத்த உடன்படிக்கை மூலம் விடுதலைப் புலிகளின் ஆயுதப் பலம் குறைக்கப்பட்டதால் இராணுவத்தினர் வெற்றிகரமாக இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தனர்” என அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், கிளிநொச்சி மோதல்களில் காயமடைந்த இராணுவத்தினர் அரசாங்கம் உரிய முறையில் நடத்துவதில்லையெனவும், காயமடைந்தவர்கள் இருக்கைகள் அற்ற பேரூந்துகளிலேயே அழைத்துவரப்படுவதாகவும் ரணில் விக்ரமசிங்க நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இணைந்து நேற்று ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தனர்.
இராணுவ வெற்றிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது: அரசாங்கம்
அரசாங்கப் படைகள் பெற்றிருக்கும் வெற்றிகளைக் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறைத்து மதிப்பிடக்கூடாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி வெற்றியைக் கொண்டாடவேண்டுமாயின் பெற்றோல் விலையை அரசாங்கம் குறைக்கவேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பது, களநிலைமைகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லையா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment