சட்டவிரோத ஊடக அட்டையைப் பாவித்து சிங்கப்பூர் செல்லவிருந்த புலி உறுப்பினர் விமான நிலையத்தில் கைது-கெஹெலிய
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர், ஒரு ஊடகவியலாளர் எனத் தெரிய வந்துள்ளது. இவர் சிங்கப்பூருக்குச் சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விசாரணயில் இவர் பிரகாஷ் சக்திவேல் என அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக ஊடக அட்டை ( Media Card) ஒன்றைப் பயன்படுத்தியே இவர் சிங்கப்பூர் செல்ல முற்பட்டுள்ளார். இவர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது. இது தொடர்பிலான மேலதிக விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இன்று காலை பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது :
" அண்மையில் சில பயங்கரவாத சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பலதரப்பட்ட வெடிப்பொருட்களுடன் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. எவருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் அந்த வாகனத்தில் 24 வகையான வெடிபொருட்கள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்வாறான நடவடிக்கைகளில் சில குழுக்களே செயற்படுவதாகத் தெரிகிறது. இது தொடர்பில் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவேதான் இரகசிய பொலிஸார் மற்றும் ஏனைய பொலிஸார் இது தொடர்பில் தமது முழு அவதானத்தையும் செலுத்தி வருகின்றனர்.
முல்லைத்தீவு தர்மப்புரம் பிரதேத்தில் ஓர் ஏக்கர் நிலபரப்பில், பூமிக்கடியில் 360 எண்ணெய்க் கலன்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் அத்தியாவசிய சேவைகள் திணைக்களத்தினூடாக அப்பிரதேசத்தில் உள்ள, சர்வதேச அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற சில நிறுவனங்களுக்கே அளிக்கப்பட்டன. ஆனால் இவை அனைத்தும் தெரிந்தோ தெரியாமலோ விடுதலைப்புலிகளைச் சென்றடைந்துள்ளன. இந்த எண்ணெய் கலன்கள் இவ்வாறு புலிகளைச் சென்றடைந்தமையிட்டு நாம் மனம் வருந்துகிறோம். அந்த நிறுவனங்களை மிரட்டி பலவந்தமாகப் புலிகள் இவற்றை எடுத்துச் சென்றிருக்கலாம்.
கிளிநொச்சியைக் கைப்பற்றுவது ராஜபக்ஷவின் பகல் கனவு என பா.நடேசன் தெரிவித்தார். அன்று 2 லட்சத்துக்கும் அதிகமானோர் அப்பிரதேசத்தில் இருக்கிறார்கள் எனப் புலிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அங்கு ஒருவர் கூட காணப்படவில்லை. வருடக் கணக்கில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிக் கிடந்தவர்களே இன்று இங்கு கரையோர பிரதேசங்களிலும் கொழும்பின் பல பகுதிகளிலும் குடியேறியுள்ளனர்.
வன்னியில் புலிகள் 600 சதுர கிலோ மீற்றர் எல்லைக்குள் முப்படையினராலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பின் 35 கிலோமீற்றர் வரையான பகுதிகளைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
புது குடியிருப்பு, முல்லைத்தீவு வீதியில் 25 ஆவது கிலோ மீற்றரில் இருந்து 35ஆவது கிலோ மீற்றர் மைல் கல் வரையிலான பகுதிகளைப் பாதுகாப்புப் பிரதேசமாக இராணுவத்தினர் அறிவித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வன்னிப் பிரதேசத்திற்குச் சென்று அங்கு சுகாரதார நிலைமைகளைக் கண்காணித்த சுகாதார திணைக்கள அதிகாரிகள் பல நடவடிக்கைகளை அங்கு மேற்கொண்டுள்ளனர்.காயமடைந்த நிலையில் சுமார் 200 விடுதலைப்புலிகள் உள்ளனர். அவர்களையும் அரசு என்ற வகையில், நாம் மனிதாபிமான முறையில் பராமரித்து வருகின்றோம்" என்றார்.
வீரகேசரி
0 விமர்சனங்கள்:
Post a Comment