பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட வள்ளிபுனத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் புகார்
இலங்கை இராணுவத்தால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இன்று எறிகணைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அங்கிருந்து வவுனியா வந்த பொதுமக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையி்ல் உக்கிர மோதல்கள் நடைபெறுகின்ற வன்னிப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்ற எறிகணை தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் 36 பேர் உட்பட 51 பேர் இன்று வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாக வவுனியா மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்களில் 20 பேர் 12 வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் என்றும் இரண்டு பேர் மேல்சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட வள்ளிபுனம் பகுதியில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும், எறிகணை தாக்குதலில் காயமடைந்த தனது பத்து வயது மகளைக் இளம் தாய் ஒருவர் இன்று வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தார். வள்ளிபுனம் மருத்துவமனையும் எறிகணையால் தாக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதேபோன்று காயமடைந்த தனது கணவனை வவுனியா மருத்துவம்னைக்கு கொண்டுவந்த ஒரு பெண்ணும் கூறியுள்ளார்.
ஆனால், இதனை இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி மறுத்துள்ளார். தம்மால் நேற்று பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இன்று தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் எதுவும் தமக்குக் கிடையாது என்று அவர் கூறியுள்ளார். இராணுவத்தினர் அங்கு தாக்குதல் நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சுமார் ஒருவார காலத்தின் பின்னர் இன்று வன்னிப்பிரதேசத்திற்கான பாதை திறக்கப்பட்டதையடுத்து, வன்னிப்பகுதியில் மேல்சிகிச்சை தேவைக்காகக் காத்திருந்த நோயாளிகளே இவ்வாறு வவுனியாவுக்கு இன்று கொண்டு வரப்பட்டார்கள். இந்த நோயாளர்களுடன் வன்னிப்பகுதிக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு சென்றிருந்த உலக உணவுத் திட்ட அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய அரச அதிகாரிகள் சிலரும் இன்று வவுனியாவுக்கு வந்து சேர்ந்தார்கள்.
இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு நெத்தலியாறு பகுதிகளில் இருந்து இன்று அதிகாலை முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினரை எதிர்த்து தாங்கள் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
BBC Tamil
0 விமர்சனங்கள்:
Post a Comment