முல்லைத்தீவு நோக்கிய முன்னகர்வு குறித்து உதய நாணயக்கார விளக்கம்
சிலாவத்தைப் பிரதேசத்தின் பள்ளிக்குடியிருப்புப் பகுதியில், 59 ஆவது படையணி படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. 4 ஆவது படையணியினர் புதுக்குடியிருப்புப் பகுதியின் தெற்கில் படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.அதேபோல் உதயன்கட்டுக்குக்குளம் பகுதியிலும் படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முல்லைதீவைக் கைப்பற்றுவது தொடர்பில் படையினரின் முன்னகர்வு குறித்து விளக்கமளித்த இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"57 ஆவது படையணியினர் இராமநாதபுரம் பகுதியைக் கைப்பற்றியதன் பின்னர் விசுவமடு பகுதியை நோக்கித் தமது படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். 55ஆவது படையணியினர், சுண்டிக்குளம் பகுதியைக் கைப்பற்றியதன் பின்னர், தெற்குப் பகுதியில் படை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்கள் பல கைப்பற்றப்பட்டன. அதேவேளை, விடுதலைப்புலிகள் பயணித்த டிராக்டர் வண்டியை நோக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் பயணித்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
படையினர் கிளிநொச்சிப் பிரதேசத்தில் சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டனர் . இதில் கிளேமோர் வெடி ஒன்று கைப்பற்றப்பட்டது. 58 ஆவது படையணியினர் தர்மபுரம் பகுதியில் 4 விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலத்தைக் கைப்பற்றினர்.
முல்லைத்தீவு பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய தளம் ஒன்றைப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அங்கு வரைபடம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இராணுவ முகாம்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் முகாம்கள் உட்பட சகல விபரங்களும் அந்த வரைபடத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
நேற்று இரவு சித்தாண்டிக்குளம் பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டது.
2,950 பேர் இதுவரை அரச கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வந்துள்ளனர். நேற்றும் 17 பேர் சுண்டிக்குளம் பிரதேசத்தை வந்தடைந்தனர். அதே போன்று கொக்குதொடுவாய் பகுதியில் 17 பேர் படகில் வந்து சேர்ந்துள்ளனர்.
பரந்தன் முல்லைத்தீவு வீதியில் 35 ஆவது கிலோ மீற்றரில் இருந்து 32 ஆவது கிலோ மீற்றர் மைல் கல் வரையிலான சுமார் 8 கிலோ மீற்றர் நீளமான பிரதேசத்தின் வடக்குப் பக்கமாக உள்ள சுமார் 4 கிலோ மீற்றர் தூரமுள்ள பகுதியையே பாதுகாப்புப் பிரதேசமாக இராணுவத்தினர் அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்" என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment