ஒரே பார்வையில் இன்று (23-02-09)
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவிவகாரங்களுக்கான கவுன்சில் இலங்கையில் மோசமடைந்துவரும் மனிதநேய நெருக்கடி குறித்தும் பெருமளவில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் நிலை குறித்தும் கவலை வெளியிட்டிருக்கிறது.
சர்வதேச சட்டங்கள் மற்றும் போர் தொடர்பிலான சட்டங்களை இந்த மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்புக்களும் மதித்து நடக்கவேண்டும் என்று கோரியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக போர்நிறுத்தம் ஒன்றையும் கோரியிருக்கிறது.
விடுதலைப்புலிகள் மோதல் நடக்கும் பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்க வன்முறை மற்றும் அச்சுறுத்தலைப் பயன்படுத்துவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்திருக்கிறது.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான தற்காலிக இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்து அங்கு தங்கியிருப்போரைப் பார்க்க வருபவர்களைக் கண்காணித்து அனுமதிக்கும் முறை சர்வதேச தரத்துக்கு அமைவாக இருக்க வேண்டும் என்று கூறும் ஐரோப்பிய ஒன்றியம் , அங்கு சுயாதினமான கண்காணிப்பு அனுமதிக்கப்படவேண்டும் என்றும் கூறியிருக்கிறது. ஐ.நா. செஞ்சிலுவை சங்கம் மற்றும் பிற மனித நேய அமைப்ப்புகள் அந்த முகாம்களுக்கு வர முழு அனுமதி தரப்படவேண்டும் என்றும் அது கோருகிறது.
இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு இல்லை என்பதை வலியுறுத்தும் ஒன்றியம், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுவது என்பது அரசியல் தீர்வுக்கான அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவே அமையும் என்று கூறியிருக்கிறது.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கையளித்துவிட்டு, வன்முறையையும் பயங்கரவாதத்தையும் முடிவாகத் துறந்து, சிறார்களை படையணியில் சேர்ப்பதை நிறுத்தி, நியாயமான மற்றும் நிரந்தரமான தீர்வை அடைய ஒரு அரசியல் வழிமுறையில் பங்கேற்கவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியிருக்கிறது.
இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றை நோக்கிய யுத்த நிறுத்தத்துடனான சமாதான பேச்சுவார்த்தைக்கு இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கையின் சமாதான முயற்சிகளுக்காக செயற்பட்டுவந்த இணைத் தலைமை நாடுகளுக்கும், ஐ.நா.மன்றத்தி்ற்கும், ஐ.நா.மன்றப் பாதுகாப்புச் சபைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எழுதியுள்ள கடிதம் ஒன்றில் விடுதலைப்புலிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் இந்த இன முரண்பாட்டில் தங்களுக்கு உள்ள ஒரேயொரு நிரந்தரத் தீர்வு தமிழ் மக்களுக்கான தனியரசே என்றும், ஆயினும், அதனை சர்வதேச சமூகம் ஆதரிப்பதில் தயக்கம் காட்டிவருவதாகவும் விடுதலைப்புலிகளின் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஆனால் விடுதலைப்புலிகளிடமிருந்து நிபந்தனையுடன் கூடிய எந்த ஒரு போர்நிறுத்த அழைப்பையும் இலங்கை அரசு ஏற்காது என்று இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு பகுதியில் உக்கிர மோதல்கள்
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு நகரப்பகுதியை இராணுவம் முற்றுகையிட்டிருப்பதாகத் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே படையினர் வசமாகியுள்ள பகுதிக்குள் ஊடுருவ முயற்சித்த விடுதலைப்புலிகள் குழுவொன்றுடன் வற்றாப்பளை பகுதியிலும், புதுக்குடியிருப்புக்கு கிழக்கிலும் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக அது கூறியிருக்கின்றது.
இந்தச் சண்டைகளின் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலில் விடுதலைப்புலிகளின் 5 சடலங்களையும் ஆயுதத் தளபாடங்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
புதுக்குடியிருப்புக்கு வடமேற்கே முன்னேறிய இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் கடும் எதிர்த்தாக்குதலுக்கு மத்தி்யிலும் கோம்பாவில் என்னுமிடத்தில் விடுதலைப்புலிகள் அமைத்துள்ள பாரிய மண் அரணின் ஒரு பகுதியைச் சென்றடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
இங்கு நடைபெற்ற சண்டைகளின் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலில் விடுதலைப்புலிகளின் 3 சடலங்களையும் ஆயுதத் தளபாடங்களையும் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இதனிடையில், கிழக்குக் கரையோரத்தின் புல்மோட்டை கடற்படைத்தளப் பிரதேசத்திற்கு 12 சிவிலியன்கள் கடற்படையினரிடம் வந்துசேர்ந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
அகதி முகாம்களுக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதி
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை ஊடகவியலாளர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மோதல்கள் காரணமாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து சுமார் 35,000 மக்கள் இதுவரை அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்திருக்கிறார்கள்.
இவர்கள் இப்போது வவுனியாவில் 13 முகாம்களிலும், மன்னாரில் 3 முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டு அரசினால் பராமரிக்கப்பட்டு வருக்கிறார்கள்.
இவர்களில் சுமார் 2700க்கும் அதிகமானோர் வவுனியா மனிக் பார்மில் அமைந்துள்ள கதிர்காமர் இடைத்தங்கல் நிவாரணக் கிராமம் என்று பெயரிடப்பட்ட இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அங்கு தற்போது தற்காலிமாக உருவாக்கப்பட்டிருக்கும் பாடசாலையின் அதிபர் செல்லையா ரவீந்திரராஜ், முகாமில் உள்ள நிலைமைகள் குறித்து இன்று கொழும்பிலிருந்து சென்ற பத்திரிகையாளர்களிடம் கருத்து வெளியிட்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
முல்லைத்தீவுக்கு நிவாரணப் பொருட்களுடன் கப்பல் மீண்டும் செல்கிறது
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மற்றுமொரு தொகுதி நோயாளாகளை அழைத்து வரும் வகையில் சற்று முன்னர் கிறீன் ஓசியானிக் கப்பல் அனைத்துலக செஞ்சிலுவக் குழுவின் அனுசரணையுடன் முல்லைத்தீவை நோக்கிப் புறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கப்பலில் கோதுமை மாவு உள்ளிட்ட ஒரு தொகுதி உணவுப் பண்டங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதுமாத்தளன் பகுதியிலிருந்து தொடர்ந்து நோயாளர்கள், கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் காயங்களுக்கு இலக்கானோர் திருகோணமலைக்கு அழைத்துவரப்படும் நிலையில், சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான மருந்து வகைகள் பெருமளவில் தேவைப்படுவதாகவும், இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் மருத்துவப் பணிகளுக்கான இணைப்பாளர் டாக்டர் ஞானகுணாளன் தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பாக மருத்துவ சிகிச்சைகள் வழங்குவது பற்றியதான இணைப்புக் குழுவின் கூட்டமும் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment