50மீற்றர் தூரத்தில் இருந்தே உறவினர்களைக் பார்வையிட்டு செல்வதாக வவுனியா நலன்புரி நிலையம் செல்வோர் கவலை
வன்னியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியான வவுனியாவுக்கு வரும் மக்கள் 13 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் ஏழு பாடசாலைகள், ஒரு கல்வியியல் கல்லூரி, ஒரு பல்கலைக்கழகம் மற்றும் நான்கு இடைத்தங்கல் முகாம்கள் என்பவற்றில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மனிதாபிமான பணிகளை மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் இயங்கிவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையில் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை மன்னார் மாவட்டத்திலிருந்து நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான உறவினர்கள் சந்தித்துக் கொள்வதுண்டு. எனினும் கடந்த மூன்று தினங்களாக இவ்வாறு சந்திக்கச் செல்லும் மக்களை பொலீசாரும் இராணுவத்தினரும் இணைந்து துரத்தி விடுகின்றனர் என மன்னாரிலிருந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களைப் பார்வையிடச் சென்ற மக்கள் கவலை தெரிவிக்கின்றன. இடைத்தங்கள் முகாமைச் சுற்றி நாலாபுறமும் முள்ளுக் கம்பிகள் அடைக்கப்பட்டிருக்கிறது என்றும் தாம் 50மீற்றர் தூரத்தில் இருந்தே உறவினர்களைக் பார்வையிட்டு செல்வதாகவும் இவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் பார்வையிட அனுமதிக்கப்பட்ட போதிலும், பின்னர் பார்க்க வருபவர்கள் கையடக்கத் தொலைபேசி, மதுபானம், பீடி, சிகரட் போன்றவற்றையும் உணவுப் பொருட்களுடன் மறைத்து வழங்கும் நிலைமைகள் கண்டு பிடிக்கப்பட்டன. அத்துடன் பலருக்கு முகாம்களில் அம்மை நோயும் பரவியுள்ளது. இந்நிலையில் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment