தீக்குளிப்பு அரசியல்!
தமிழ் இனஉணர்வு தீயாகப் பற்றி எரிகிறது என்று யாராவது சொன்னால், இப்போது அதை மேடை யில் பேசப்படும் அலங்காரப் பேச்சாக ஒதுக்கிவிட முடியாது! ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கும் நபர்களின் எண்ணிக்கை, நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
சென்னையில் முத்துக்குமார் தீக்குளித்ததில் ஆரம்பித்துஸ பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன் என அந்தப் பட்டியல் வளர்ந்துகொண்டு போகிறது.
‘தீக்குளிக்க வேண்டாம்!’ என்று அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும், தமிழர்கள் தங்களை மாய்த்துக் கொள்வது நின்றபாடில்லை.
உணர்ச்சிக் கொந்தளிப்பில், ஏதோவோர் ஆவேசத்தில் இப்படிச் செய்கிறார்கள். புரிதல் இல்லாததுதான் இதற்கெல்லாம் காரணம் என்று இதைப் பற்றி எண்ணுபவர்களும் உண்டு. இது திராவிட அரசியல் அறிமுகப்படுத்திய ஒரு மோசமான போராட்ட வடிவம் என்று குறை கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அத்தகைய விமர்சனங்கள் தவறானவை.
தீக்குளித்து ஒருவர் தன்னை மாய்த்துக்கொள்வதை, எவருமே ஆதரிக்க முடியாது. அதே நேரத்தில் அப்படி செய்கிறவர்களை நாம் கொச்சைப்படுத்திவிடவும் கூடாது.
தீக்குளித்து உயிர் துறப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரித்தான போராட்ட வடிவமல்லஸ உலகெங்கும் உள்ள நாடுகள் பலவற்றிலும் இது வழக்கத்தில் இருக்கிறது.
பிரான்ஸ் நாட்டில் இருந்த ஏசு சபை பாதிரியார்கள் பதினாறாம் நூற்றாண்டில் தங்கள் உறுப்புகளை எரியூட்டிக்கொண்ட சம்பவங்கள் பலவற்றை வரலாற்றில் பார்க்க முடிகிறது. ஏசு அனுபவித்த துன்பத்தை தாமும் அனுபவிக்கவேண்டும் என்ற நோக்கோடு அவர்கள் அப்படிச் செய்து கொண்டார்களாம்.
வியட்நாம் யுத்தத்தின்போது, அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த துறவிகள் பலர் தீக்குளித்து உயிர் நீத்த சம்பவங்கள், உலகையே அதிரச் செய்தன! சீன அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 2001-ம் ஆண்டில் சீனாவில் உள்ள தியானென்மென் சதுக்கத்தில் பலர் தீக்குளித்துத் தம்முடைய உயிரை மாய்த்துக்கொண்டனர்.
திராவிடக் கட்சிகளால்தான் தீக்குளிப்பு தமிழ்நாட்டுக்கு அறிமுகமானது எனச் சொல்பவர்கள் அறியாமையால் அப்படிச் சொல்கிறார்கள்.
இந்தியா முழுவதும் அண்மைக் காலம் வரை நடைமுறையில் இருந்த சதி என்ற உடன் கட்டை ஏறும் (ஏற்றும்?) வழக்கம்கூட ஒரு வகையான தீக்குளிப்புதான்! கணவனின் சிதையில் மனைவியும் மூழ்கி உயிரைப் போக்கிக்கொள்கிற அந்தக் கொடிய முறை, தமிழகத்தில் அவ்வளவாக இருந்ததில்லை என்பதைக்கூட விமர்சனம் செய்பவர்கள் மறந்து விடுகிறார்கள்.
தீக்குளித்து உயிர் நீப்பதை நாம் ஆதரிக்கவில்லை என்றபோதிலும், அது உணர்த்தும் செய்தியை நாம் புறக் கணித்துவிடக் கூடாது.
ஒரு மனிதனின் உடல் மற்றும் உயிர் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதுதான் அரசாங்கத்தின் உச்சபட்ச அதிகாரமாக இருக்கிறது. ஒரு குடிமகனை சிறையில் அடைப்பதென்பது அவனுடைய உடலின் மீதான அரசாங்கத்தின் அதிகாரத்தை எடுத்துக்காட்டுகிறது.
அது போலவே தன்னுடைய குடிமக்களின் உயிரைப் பறிக்கக்கூடிய அதிகாரத்தையும் அரசாங்கம் தன்னிடம் வைத்திருக்கிறது. மரண தண்டனை வழங்குவதன் மூலம் அந்த அதிகாரத்தை அரசாங்கம் செயல்படுத்துகிறது.
உயிரைப் பறிக்கக்கூடிய அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துள்ள அரசாங்கம், அதைக் குடிமகன் ஒருவன் மேற்கொள்வதற்கு அனுமதிப்பதில்லை.
எந்தக் குடிமகனும் தன் உயிரை மாய்த்துக்கொள்ள இங்கே அனுமதி கிடையாது. தற்கொலை என்பது சட்டப்படி ஒரு குற்றமாகும். அரசாங் கத்துக்கு, அதன் அதிகாரத்துக்கு குடிமகன் ஒருவன் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென்றால், அதற்குப் பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.
தன்னையே துன்புறுத்திக்கொள்வது அதில் ஒரு வழிமுறையாகும். உலகெங்கும் பாராட்டப்படுகிற காந்தியடிகளின் உண்ணா விரதப் போராட்ட வழிமுறை அத்தகையதுதான்.
அதை அகிம்சாமுறை என எல்லோரும் அழைக்கிறார்கள். அதை விடவும் ‘சுய இம்சை’ என அதைக் குறிப்பிடுவதுதான் பொருத்தமானதாயிருக்கும்.
ஒரு மனிதன் தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்ளும்போது, அரசாங்கத்துக்கு அது மிகப்பெரும் சவாலாக மாறிவிடுகிறது. தன்னுடைய வாழ்வின் மீது மட்டுமல்லாமல்ஸ சாவின் மீதும் அவன் அதிகாரம் கொண்டவனாக மாறும்போது, அதை அரசாங்கத்தால் சகித்துக்கொள்ள முடிவதில்லை.
தன்னுயிரின் மீது அதிகாரம்கொண்ட ஒரு மனிதன், எந்தவொரு சக்தியாலும் கட்டுப்படுத்தப்பட முடியாதவனாக மாறிவிடுகிறான்.
அது அரசாங்கத்தின் ஆளுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த விதத்தில் பார்த்தால், தீக்குளித்து தன்னை மாய்த்துக்கொள்கிறவர்கள்ஸ அறியாமையால் அதைச் செய்கிறார்கள் என்று நாம் நினைப்பது தவறு என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
தீக்குளித்து உயிர் துறப்பவர்கள், தம்முடைய கையறு நிலையின் காரணமாகத்தான் அதைச் செய்கிறார்களா? அப்படியும் கூறிவிட முடியாது.
தினந்தோறும் ஈழத்தில் செத்து மடியும் தமிழ் சொந்தங்களுக்குத் தங்களால் எதுவும் செய்யமுடியவில்லையே என்ற இயலாமை அவர்களுக்கு இருந்திருக்கும் என்பது உண்மைதான்.
ஆனால், அது மட்டுமே அவர்களை சாகத் தூண்டிவிடவில்லை. தங்களுடைய சாவாவது இங்குள்ள அரசாங்கங்களை வேகமாகச் செயல்பட வைக்காதா என்ற எதிர்பார்ப்புதான், அவர்கள் இந்த முடிவை மேற்கொள்வதற்கு அடிப்படை.
அந்த எதிர்பார்ப்பை ஈடேற்றாமல், இந்த மரணங்களை வெறுமனே சட்டம்-ஒழுங்குப் பிரச்னையாக அரசாங் கங்கள் கருதுமேயானால், அது மிகப்பெரும் தவறாகவே முடியும்!
ஈழத் தமிழர் பிரச்னை ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருவதைப் பார்க்கிறோம்.
அது தமிழ்நாட்டின் அரசியல் கணக்குகளையெல்லாம் அழித்து எழுதிக் கொண் டிருக்கிறது. இந்தக் கட்சிக்கு இவ்வளவு சதவிகித வாக்கு வங்கி இருக்கிறது. அந்தக் கட்சிக்கு அவ்வளவு இருக் கிறது. இரண்டும் சேர்ந்தால் இத்தனை சதவிகிதம் வரும்.
அதில் இவ்வளவு இடங்களை வெல்லலாம் என்று கணக்குப் போட்டுக்கொண்டிருந்தவர்கள், ஒரு தொகுதிக்கு இவ்வளவு பணம் செலவு செய்தால், இவ்வளவு ஓட்டுகளை வாங்கலாம் என திட்டமிட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லோரையும் ஈழப் பிரச்னை தடுமாறச் செய்திருக்கிறது.
ஒவ்வொரு நாளும் அங்கே பறிபோய்க் கொண்டிருக்கும் அப்பாவி மக்களின் உயிர்கள் தமிழ்நாட்டு அரசியலைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது. ‘தமிழகத்துக்கு நான்தான் ஒரு மாற்றை வழங்கப்போகிறேன்’ என்று சொன்னவர்களெல்லாம் இன்று வாய்மூடி மௌனிகளாகி விட்டார்கள்.
இப்போது தமிழக அரசியலில் அவர்கள் வழக்கொழிந்து போனவர்களாக ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள். இதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் இலங்கையில் நிலைமை சீரடைந்து விடும். அதன் பிறகு, அது ஒரு தேர்தல் பிரச்னையாக இருக்காது என ஆட்சியாளர்கள் எண்ணக்கூடும். அப்படி நிலைமை சீரடைந்து, இலங்கையில் அமைதி ஏற்படுமானால்ஸ
எல்லோருக்குமே மகிழ்ச்சிதான். ஆனால், எந்த நிமிடமும் இலங்கையில் ஒரு மனிதப் பேரவலம் நிகழலாம். இன்று ஐம்பது, நூறு என கொல்லப்படும் தமிழர்கள் ஆயிரம், பத்தாயிரம் எனப் படுகொலை செய்யப்படலாம்.
அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரே சர்வதேச அமைப்பான செஞ்சிலுவை சங்கம் இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான சவப் பைகளுக்கு ஆர்டர் செய்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
அவ்வளவு தமிழ் மக்கள் சாவார்கள் என செஞ்சிலுவை சங்கம் எதிர்பார்க்கிறது என்பதைத்தான் இந்தச் செய்தி உணர்த்துகிறது. அப்படியரு நிலை வந்தால் தமிழகத்தில் உணர்வுகள் எந்தளவுக்குக் கொழுந்துவிடும்!
-Vikatan
0 விமர்சனங்கள்:
Post a Comment