யுத்த நிறுத்தத்தை அரசும் புலிகளும் ஏற்படுத்த வேண்டும் : இரா.சம்பந்தன்
"வன்னியில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகின்றது. அப்பாவி மக்கள் மீதான துப்பாக்கி பிரயோகங்களும், ஷெல் தாக்குதல்களும் எறிகணை வீச்சுக்களும் தொடர்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அரசாங்கமும் புலிகளும் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்" என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் ஆர். சம்பந்தன் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான க.கனகசபை,எஸ். தங்கேஸ்வரி, அரியநேந்திரன்,சிவநாதன் கிஷோர், மாவை சேனாதிராஜா,எஸ். காந்தா,சிவசக்தி ஆனந்தன், ஐ.எம். இமாம், சொலமன் சிறில், எஸ் .பத்மநாதன், எஸ் .சந்திரநேரு ஆகியோர் பங்கேற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் :
"முல்லைத்தீவில் டிசம்பர் நடுப்பகுதியிலிருந்து பெப்ரவரி நடுப்பகுதி வரை மட்டும் 2 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 4500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். எனினும் பொதுமக்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. இதனை யாரும் நம்பமாட்டார்கள்; ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
அரசாங்கம் தமிழ் மக்களை விடுவிப்பதாகக் கூறுகின்றது எனினும் கொலை செய்தல், காயப்படுத்தல், வீடுகளை உடைத்தல், மருந்துப்பொருட்களை வழங்காது விடல் மற்றும் ஷெல்தாக்குதல்களை மேற்கொள்ளுதல் - இவையெல்லாம் ஏன்?
ஆயிரம் ஆயிரம் மக்கள் மோசமான காலநிலையையும் கருத்தில் கொள்ளாது மரநிழல்களிலேயே வாழ்ந்துவருகின்றனர். மக்களை விடுவிப்பதாகக் கூறும் அரசாங்கம் அங்கு இன அழிப்பையே மேற்கொள்கின்றது" என்றார்.
கேள்வி பதில்
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்த கொண்ட செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
கேள்வி நீங்கள் கூறுவதைப் போல வன்னியில் குறுகிய பிரதேசத்திற்குள் பல லட்சக்கணக்கான மக்கள் எவ்வாறு வாழ முடியும்?
பதில் வாழ்கின்றார்கள், அகதிகளாக வாழ்கின்றனர். நாளாந்தம் இடம்பெயர்ந்துகொண்டே இருக்கின்றனர். அரசாங்கம் கூறுவதைப் போல அங்கு ஒரு லட்சத்திற்கு குறைவான மக்கள் வாழவில்லை. 4 லட்சத்திற்கு மேற்படாத மக்களே வாழ்கின்றனர்.
கேள்வி ஐ.நா நிறுவனமொன்றின் பணியாளர் ஒருவரை புலிகள் பலவந்தமாக தமது படையில் சேர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றதே...?
பதில் ஐ.நாவின் சர்வதேச பணியாளர்கள் அங்கில்லை. உள்ளூர் பணியாளர்கள் அங்கு நீண்டகாலமாக கடமையாற்றுகின்றனர். எனினும் பணியாளர் ஒருவர் அவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டாரா என்பது தொடர்பில் சரியான தகவல் இல்லை.
கேள்வி அனுராதபுர பகுதியில் எரிந்த நிலையில் சடலங்கள் கிடப்பதாக கூறப்படுகின்றதே...?
பதில் சடலங்கள் கிடப்பதாக எங்களுக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் உண்மையா பொய்யா என்று உறுதியாகக் கூறமுடியாது. எங்குதான் சடலங்கள் இல்லை?
கேள்வி அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வருகின்ற பொதுமக்கள் மீது புலிகள் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றதே..?
பதில் புலிகள் செய்திருக்கமாட்டார்கள் என்று கூறவில்லை. படையினரை இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொண்டிருக்கலாம். அவ்விடத்தில் பொதுமக்களும் இருந்திருக்கலாம். எனினும் அங்கு என்ன நடந்தது, நடக்கிறது என்றுதான் யாருக்கும் தெரிவதில்லையே...?
கேள்வி அரசியல் தீர்வுக்காக அரசாங்கத்திற்கு ஏன் ஒத்துழைப்பு நல்க முடியாது?
பதில் தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம தயாராக இல்லாத நிலையில் எவ்வாறு ஒத்துழைப்பு நல்க முடியும்? அரசியல் தீர்வுக்காக முட்டாள்தனமாக மாட்டிக்கொள்ள நாம் தயாராக இல்லை.
கேள்வி போர் நிறுத்தத்தைக் கோருவதன் நோக்கம்...?
பதில் மனிதாபிமான அடிப்படையின் பொதுமக்கள் பாதுகாக்கப்படல் வேண்டும். போர் நிறுத்தத்தின் மூலமாகவே மக்களை பாதுகாக்கமுடியும். போர் நிறுத்தம் ஏற்பட்டால் மக்கள் எங்கு செல்லவேண்டும் என்பதை சுயமாகவே தீர்மானிப்பார்கள். புலிகளுக்காக போர் நிறுத்தம் கோரவில்லை.
கேள்வி சர்வதேச சமூகம் கோரிக்கை விடுத்தும் மக்கள் வரவில்லையே?
பதில் வவுனியாவுக்கு இதுவரையிலும் 42 ஆயிரத்து 830 பேர் வந்துள்ளனர்.
கேள்வி மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன, வவுனியாவுக்கு வருகின்ற மக்களை காட்சிப் பொருளாக்கவிரும்பவில்லை என்பதனால் தான் அங்கு எவரையும் செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றாரே...?
பதில் எங்கள் மக்கள், மதிப்புக்குரிய எங்கள் மக்கள் என்று கூறிக்கொண்டு மக்களை கொலை செய்ய முடியுமா? காயப்படுத்த முடியுமா? அகதி முகாம்களில் உறவினர்களைப் பார்க்க முடியாது, அவர்களுடன் 2 நிமிடங்கள் மட்டுமே பேச முடியும். கணவன் முகாமுக்கு வெளியிலும் மனைவி முகாமுக்கு உள்ளேயும் வாழ்கின்றனர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட அங்கு செல்ல அனுமதியில்லை.
அகதி முகாம்களில் வாழ்கின்ற மக்கள் எங்களுடைய இரத்தங்கள், சொந்தங்கள் ஆறுதல் கூறுவதற்கும் உதவிகளை வழங்குவதற்கும் எங்களுக்கும் உரிமையுண்டு. எனினும் முகாம்களின் உண்மைகளை ஏனையோர் அறிவதை மறைப்பதற்காகவே அங்கு போவதற்கு தடை விதிக்கப்படுகின்றது.
அரசாங்கம் இராணுவ வெற்றியைக் கொண்டு அரசியல் செய்வதற்கு முயற்சிக்கின்றது. அகதி முகாம் திறந்த வெளிச் சிறைச்சாலை. அங்கு மக்கள் நிம்மதியாக வாழமுடியாத நிலைமையே காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தடுத்து வைப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை.
கேள்வி 2000 பேர் பலியானார்கள் என்ற தகவலை எங்கிருந்து பெற்றீர்கள்?
பதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் முல்லைத்தீவிலேயே இருக்கின்றார். அவரே இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
கேள்வி பிரபாகரன் முல்லைத்தீவிலா இருக்கின்றார்?
பதில் எங்களுக்குத் தெரியாது. ஜனாதிபதி அனுமதி கொடுத்தால் நாங்கள் சென்று பார்த்துவிட்டு வந்து சொல்கின்றோம்.
கேள்வி புலிகளின் ஈழம் கனவு கலைந்துவிட்டதே...?
பதில் ஈழம் கோரிக்கையை முன்வைத்தது புலிகள் அல்ல; தந்தை செல்வநாயகம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவரே கோரியிருந்தது.ஈழம் கோரிக்கையை விடுவதற்கு புலிகளுக்கு எவ்விதமான உரிமையும் இல்லை.
கேள்வி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டதா?
பதில் ஐ.தே.க,ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளைப் பிளவுப்படுத்திய அரசாங்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பிளவுப்படுத்துவதற்கு முயற்சித்தது. எனினும் ஜனநாயகக் கட்சி என்பதனால் கூட்டமைப்பை பிளவுப்படுத்த முடியவில்லை.
கேள்வி சர்வக் கட்சி ஆலோசனைக் குழுவில் பங்கேற்று தீர்வு திட்டத்தைத் தயாரிக்கலாமே?
பதில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதற்கு நாம் தயாராவே இருக்கின்றோம். எனினும் சர்வக்கட்சி ஆலோசனைக் குழுவில் பங்கேற்குமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையே...






0 விமர்சனங்கள்:
Post a Comment