புலிகளை அழிக்க முடியாது! - சத்யராஜ்
விடுதலைப் புலிகளை அழிப்பதாக தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. புலிகளை யாராலும் அழிக்க முடியாது என்றார் நடிகர் சத்யராஜ்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக் கோரி தீக்குளித்து உயிர்விட்ட முத்துக்குமாருக்கு தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி கூட்டம், சென்னை பாரிமுனையில் உள்ள மெமோரியல் ஹாலில் நடந்தது.
இயக்குநர்கள் சங்க தலைவர் பாரதிராஜா, செயலாளர் செல்வமணி, இயக்குநர் சீமான், நடிகர் சத்யராஜ், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் அன்பாலயா பிரபாகரன் உள்பட பலர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட டைரக்டர்களும், உதவி டைரக்டர்களும் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில், நடிகர் சத்யராஜ் பேசியதாவது:
அரசியல் உள்பட எந்த துறையாக இருந்தாலும், படிப்படியாக வளர்ந்துதான் ஒருவர் புகழ் அடைவார். ஆனால் முத்துக்குமார் மரணத்துக்குப்பின் பெரும் புகழ் அடைந்துள்ளார். அவர் தனது கடிதம் மூலம் மிகப்பெரிய அறிவாளி, உணர்வாளர் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளார்.
விடுதலைப் புலிகளை அழிப்பதாக தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. புலிகளை யாராலும் அழிக்க முடியாது. இலங்கை தமிழர் பிரச்சினையில், அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்வுப்பூர்வமாக ஒன்றுபட வேண்டும்.
உலக தமிழர்கள் அத்தனை பேரின் ஆசை, தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதுதான். இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் இனிமேல் நடக்கக் கூடாது என்றார் சத்யராஜ்.
எல்லா படங்களிலும் இனி ‘முத்துக்குமார்’-பாரதிராஜா:
இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த ‘வீரத் தமிழன்’ முத்துக்குமார் பெயரை எப்போதும் இந்த தமிழினம் நினைவில் கொள்ளும் வகையில் இனி வரவிருக்கும் ஒவ்வொரு தமிழ் திரைப்படத்திலும் நல்ல கதாபாத்திரங்கலுக்கு முத்துக்குமார் மற்றும் தமிழ் ஈழத்துக்காக உயர்கொடுத்த இளைஞர்களின் பெயரையே சூட்ட வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா கேட்டுக் கொண்டார்.
அவர் மேலும் பேசியதாவது:
இலங்கை தமிழர்களைப் பாதுகாக்க தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். ராமேசுவரத்தில் ஊர்வலம் நடத்தினோம். சென்னையிலும் நடந்தது. நாங்கள் படைப்பாளிகள். எந்த எதிர்பார்ப்பும் இன்றி, உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறோம். எங்களுக்குள் அரசியல் இல்லை, எங்களைச் சுற்றியும் அரசியல் இல்லை.
எந்த சுயநலமும் கிடையாது. எங்கள் ஒரே கோரிக்கை இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தி மக்களைக் காப்பாற்றுங்கள்.
இலங்கை தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமார், தமிழர்கள் நெஞ்சில் நிறைந்துள்ளார். அவர் ஒரு கோடி விடுதலைப் புலிகளுக்குச் சமம்.
இந்த ஆண்டு எடுக்கப்படும் எல்லா தமிழ் படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களுக்கு முத்துக்குமார் பெயரை சூட்ட வேண்டும். இன்னும் ஈழப்போரில் உயிர்நீத்த மண்ணின் மைந்தர்கள் பெயரையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள், முடிந்தவரை. படங்களின் டைட்டிலில், முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி, என்ற வாசகத்தை இடம்பெற செய்ய வேண்டும் என்றார்.
இயக்குனர் சீமான்:
இயக்குனர் சீமான் பேசும்போது, ஈழப் போராளி திலீபன் வழியில் உயிர்த் தியாகம் செய்தாவது, இன உணர்வைத் தட்டி எழுப்ப வேண்டும் என்றுதான் நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் மருத்துவர் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் என்னைத் தடுத்துவிட்டார்கள். அந்தப் பணியை தம்பி முத்துக்குமார் செய்துவிட்டார் என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment