வன்னியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தமிழ் கட்சிகளைச் சந்திக்கிறார் ஜனாதிபதி
பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க இராணுவ வழியான தீர்வு தேவைப்பாட்டாலும், வன்னியில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு தமிழ் கட்சிகள் அனைத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பி., இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏனைய தமிழ் கட்சிகள் அனைத்தையும் அழைத்து வன்னியில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது பற்றி ஆராயப்படும் என அவர் கூறினார்.
எந்தவிதமான பாரபட்சமுமின்றி அனைத்துத் தமிழ் கட்சிகளும் அழைக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த காலத்தில் அவர்கள் யாருடன் தொடர்புவைத்திருந்தார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படாது எனக் கூறினார்.
“அனைத்துத் தமிழ் கட்சிகளின் தலைவர்களும் அழைக்கப்படுவார்கள். விடுதலைப் புலிகளுடன் கடந்த காலங்களில் அவர்கள் தொடர்புவைத்திருந்தாலும் அழைக்கப்படுவர். விடுதலைப் புலிகள் தற்பொழுது எங்கே? வன்னியில் அவ்வாறு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என அவர்களிடம் நான் கேட்கவிரும்புகிறேன். இது மிகவும் அவசரமானது. இதனை நாம் காலதாமதப்படுத்த முடியாது” என்றார் ஜனாதிபதி.
உடனடியாக வன்னி மக்களை ஜனநாயக நீரோட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, உடனடியாக மக்கள் குறித்துத் தீர்மானித்து அவர்களை மீளக்குடியமத்தாவிட்டால் பெற்ற இராணுவ வெற்றிகள் வீணாகிவிடும் எனக் கூறினார்.
“வடபகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டிய காலம் கனிந்துள்ளதுடன், வடபகுதி மக்களின் கவலைகளை நாங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்றார் ஜனாதிபதி.
அதேநேரம், இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்துக்கே முதலிடம் கொடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இடம்பெயர்ந்த மக்களுக்கான குடிநீர் வசதிகள், வைத்தியசாலை வசதிகள், கல்வி வசதிகள் என்பன செய்துகொடுக்கப்படும் எனக் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment