இறுதிநேரத்தில் கலந்துகொள்வது பயனற்றது: கூட்டமைப்பு
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக விரைவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்று முன்வைக்கப்படும் என இலங்கை அரசாங்கம் கூறிவருகின்றபோதும், அதில் தாம் தற்பொழுது கலந்துகொள்வது பயனற்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லையெனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், அவ்வாறு இறுதிநேரத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுக் கலந்துகொண்டாலும் அதில் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லையெனக் கூறினார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஆரம்பிக்கப்பட்டபோது, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகக் கணக்கெடுக்கவில்லை என அவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
“99 வீதமான நடவடிக்கைகள் பூர்த்திசெய்யப்பட்ட பின்னர் ஏன் அவர்களுக்கு நாம் தேவைப்படுகிறோம். அவர்கள் செய்யும் வேலையில் நம்பிக்கையில்லாமல் அவர்களுடன் இணைவது சாத்தியமற்றது” என்றார் சிவநாதன் கிஷோர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்புவிடுக்கவிருப்பதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண அண்மையில் கூறியிருந்தமை தொடர்பாகவே, பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் நோக்கங்களை வெளியிடாமல், தமிழ் மக்களின் நீண்டகால வேண்டுகோளை நிறைவேற்றவேண்டுமென்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உணரவேண்டிய நேரம் கனிந்திருப்பதாக திஸ்ஸ வித்தாரண அண்மையில் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment