ஜனாதிபதி ஹெலிகாப்டர் தப்பியது
மும்பை விமான நிலையத்தில் ஒரே ஓடுபாதையில் எதிர் எதிரே விமானமும், ஹெலிகாப்டரும் மோதி ஏற்படவிருந்த மிகப் பெரிய விபத்து, விமானியின் சமயோஜிதம் காரணமாக தவிர்க்கப்பட்டது. இதனால் 150 பயணிகள் உயிர் தப்பினர். மும்பையிலிருந்து டெல்லிக்கு இந்தியன் ஏர்லைன்ஸின் ஐசி866 என்ற விமானம் இன்று காலை புறப்படவிருந்தது. விமானத்தில் 150 பயணிகள் இருந்தனர்.
விமானம் புறப்படுவதற்கு முன்பு ஓடு பாதையில் 2 முதல் 3 கிலோமீட்டர் தூரம் வரை வேகமாக ஓடி, பின்னர் மேலே எழுப்பி செல்வது வழக்கம். அதுபோல இந்த விமானமும் ஓடு பாதையில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது.
அப்போது விமானத்தின் ஓடு பாதையில் ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரை இறங்கியது. சுமார் 50 மீட்டர் தூரத்தில் ஹெலிகாப்டரை பார்த்த விமானத்தின் விமானி சமயோஜிதமாக செயல்பட்டு விமானத்தின் அவசரகால பிரேக்குகளை பயன்படுத்தினார். பயங்கரமான சத்தத்துடன் விமானம் ஓடு பாதையை தேய்த்துக்கொண்டு ஹெலிகாப்டருக்கு மிக அருகில் சென்று நின்றது. இதன் காரணமாக விமானம் ஹெலிகாப்டர் மீது மோதி ஏற்பட இருந்த மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. 150 பயணிகள் உயிர் பிழைத்தனர்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மகாராஷ்டிரா மாநிலம் கொடியா என்னுமிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருவதையடுத்து அவரும், மகாராஷ்டிர முதலமைச்சர், துணை முதலமைச்சர், கவர்னர் ஆகியோர் செல்வதற்கு ஏற்பாடு செய்திருந்த 3 ஹெலிகாப்டர்களில் ஒன்றுதான் அவசரமாக தரையிறங்கிய அந்த ராணுவ ஹெலிகாப்டர் என்று தெரியவந்தது.
அவசரமாக பிரேக் போட்டதால் விமானத்தின் சக்கரங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனினும் உள்ளேயிருந்த பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அவர்கள் பத்திரமாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டு வேறு ஒரு விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விமானத்தின் விமானி சமயோஜிதமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப் பாட்டுடன் நிறுத்தியதால் தாங்கள் உயிர் பிழைத்ததாக பயணிகள் அவருக்கு பாராட்டுதெரிவித்தனர். ஒரே ஓடுபாதையில் விமானம் புறப்படவிருந் நேரத்தில் ஹெலிகாப்டர் எவ்வாறு தரையிறங்க அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment