இலங்கை நிலைவரம் குறித்து குறைந்த எண்ணிக்கை யிலேயே தகவல்ககள் வெளியாகியுள்ளன! அங்கு போர் நிறுத்தம் செய்யுமாறு அரசாங்கத்தை நான் கோர முடியாது! UN-பான்கீ
இலங்கையில் நடைபெறும் போரினால் பெரும் இரத்தக்களரி உண்டாகி வருகின்றபோதிலும், அந்த நாட்டின் விவகாரம் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாததால், அங்கு போர் நிறுத்தம் செய்யுமாறு அரசாங்கத்தை நான் கோர முடியாது.
இவ்வாறு தெரிவிக்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீன் மூன்.
இலங்கையில் நடைபெறும் போரினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த விவரங்கள் குறைவாகவே வெளிப்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்த மூன் தாம் நாடுகளின் இறைமையை மதிப்பவர் என்றும் ஒரு கட்டத்தில் கூறினார். பல வெளிநாடுகளுக்கு விஜயம் செய்த பின்னர் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூன் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.
அந்த மாநாட்டில் வைத்து “இன்னர் சிற்றி பிறெஸ்” ஊடகத்தின் செய்தியாளர் மத்தி ரஸல் லீ, பான் கீ மூனிடம் காஸா, கொங்கோ ஆகிய நாடுகளில் போர் நிறுத்தத்தை கோரியது போன்று, ஏன் பெரும் இரத்தக்களரி உண்டாகியுள்ள இலங்கையில் போர் நிறுத்தம் கோரவில்லை என்று கேட்டார்.
அப்போதே இலங்கை விவகாரம் குறித்து பாதுகாப்பு சபையின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாமையால் தன்னால் போர் நிறுத்தம் கோர முடியவில்லை என்று பான் கீ மூன் சொன்னார்.
இதேவேளை அதே ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்துக்கு ஏற்பநடத்தப்பட வேண்டும் என்று ஒரு சந்தர்ப்பத்திலும் ஈரான் மற்றும் காஷ்மீர் பிரச்சினைகள் குறித்தும் பிரஸ்தாபித்த போது பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்படவேண்டு; இராணுவ நடவடிக்கைகளால் அல்ல என்று மற்றொரு சந்தர்ப்பத்திலும் கருத்து வெளியிட்டார்.
அப்போது பான் கீ மூன் “இன்னர் சிற்றி பிறெஸ்” செய்தியாளரிடம் மேலும் கூறியதாவது:
“இலங்கை நிலைவரம் தொடர்பாக இரு வாரங்களுக்கு முன்னர் நியூயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்ட அந்த நாட்டின் சிறப்புப் பிரதிநிதியுடன்(பஸில் ராஜ பக்ஷவுடன்) ஆராய்ந்தேன்.
மேலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் இந்த விடயம் தொடர்பாகத் தொலைபேசியில் தீவிரமாக ஆராய்ந்தேன்.
அவர் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவேண்டும், மோதலில் சிக்கியுள்ள மக்களுக்கும் உதவ வேண்டும். இதன் மூலம் அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றலாம் எனத் தெரிவித்திருந்தேன்.
அவர் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்குவார் எனத் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் அளவுக்கதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவே நியாயபூர்வமாகச் சிந்திக்கும் அனைவரினதும் கருத்தாகும்.
இலங்கை விவகாரம் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சிநிரலில் இடம்பெறவில்லை. நாடொன்றின் இறைமையை மதிப்பது என்ற விடயத்தை எனது முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ளேன்.
எனினும் இலங்கை மற்றும் காஸா நிலைவரங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்ட விடயங்களாகும்.சர்வதேச தராதரங்கள் மீறப்படுதல் தொடர்பாக நான் தொடர்ச்சியாக எனது ஆழ்ந்த கண்டனத்தைத் தெரிவித்து வந்துள்ளேன்.
குறைந்தளவிலேயே தகவல்கள் கிடைத்துள்ளன இலங்கையில் தொடரும் முறைகள் தொடர்பாக தொடர்ச்சியாக எனது கவலையைத் தெரிவித்து வந்துள்ளதுடன் இராணுவத் தீர்வல்ல, அரசியல் தீர்வே அவசியம் என்பது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளேன். இலங்கையில் காணப்படும் நிலைவரம் குறித்து குறைந்த எண்ணிக்கிகையிலேயே தகவல்ககள் வெளியாகியுள்ளன. எந்த மோதல் சூழ்நிலையிலும் நீங்கள் முதலில் அறிய விரும்புவது உண்மை நிலைவரம் எவ்வாறானதாக உள்ளது என்பதையே என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment