புதிதான சண்டைகளில் விடுதலைப்புலிகள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது
இலங்கையின் வடக்கே புதுக்குடியிருப்பு பொதுப் பிரதேசத்திலும், கரையான் முள்ளிவாய்க்கால் பகுதியிலும் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற கடும் மோதல்களில் 26 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், விடுதலைப்புலிகளின் 6 சடலங்களையும் ஆயுதத் தளபாடங்களையும் இராணுவத்தி்னர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
இரணைப்பாலை பகுதியில் இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் நடத்தி்ய தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு, விடுதலைப்புலிகளின் பிரதேசத்தினுள் இராணுவத்தினர் முன்னேறியிருப்பதாகவும் அது தெரிவித்திருக்கின்றது.
இதேவேளை, வவுனியா மன்னார் வீதியில் தாலிக்குளம் பகுதி்யில் சனிக்கிழமையன்று வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசாரைக் கண்ட விடுதலைப்புலியின் தற்கொலைத் தாக்குதல் உறுப்பினர் ஒருவர் தற்கொலைக்குண்டை வெடிக்கவைத்து மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
எதிர்பாராத வகையில் பொலிசாரின் கண்களில் அவர் பட்டதும், தற்கொலைக்குண்டினை அவர் வெடிக்கவைத்ததாகவும், இந்த குண்டு வெடிப்பில் பொலிசாருக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment