இனப் பிரச்சினை தொடர்வதற்கு புலிகளின் தவறுகளே காரணம்
சுரேஷ் நாகேந்திரா
புலிகளின் தோல்விக்குப் பின் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் இல்லை என்று சிலர் பிரசாரம் மேற்கொள்கின்றார்கள். உடனடியாக யுத்தநிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இப் பிரசாரத்துடன் தொடர்புடையது. இலங்கையில் வழமையாகப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தவர்களும் தென்னிந்திய அரசியல் தலைவர்களும் இப் பிரசாரத்தைத் தீவிரமாக முன்னெடுக்கின்றார்கள்.
தமிழ் மக்களின் எதிர்காலம் ஒருபுறமிருக்க, அம்மக்கள் இன்று அனுபவிக்கும் துன்பங்களுக்குப் புலிகளின் தவறான முடிவுகள் எவ்வளவுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன என்பது பற்றிப் பலர் சிந்திப்பதாகத் தெரியவில்லை. இன்று தமிழ் மக்களில் பலர் தங்கள் சொந்த வாழ்புலங்களிலிருந்து வெளியேறி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு வெளியேறியவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்று குடியேறும் நிலையிலேயே அவர்கள் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும்.
கடந்த இரண்டு தசாப்தங்களாகத் ‘தனி ஆவர்த்தனம்’ செய்துவரும் புலிகள் இம் மக்களின் துன்பம் தீர்வதற்கு எதுவுமே செய்யவில்லை. இம் மக்களின் துன்பத்தை அதிகரிப்பனவாகவே புலிகளின் செயற்பாடுகள் இருந்திருக்கின்றன. மக்களின் துயரநிலை பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் போராட்டம் என்றால் மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று புலி ஆதரவாளர்கள் கூறுவது வழக்கம். அடைய முடியாத இலக்குக்காகத் தியாகம் செய்வது அர்த்தமற்றது.
புலிகள் இயக்கம் வரலாற்றில் பல தவறுகளை இழைத்திருக்கின்றது. இத் தவறுகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் கட்டங்கட்டமாகப் பலவீனப்படுத்தி வந்திருக்கின்றன.
பல ஆயுதக் குழுக்கள் தமிழ் அரசியல் அரங்கில் தலையெடுத்தன. இவை எல்லாம் தனிநாடு அமைப்பதையே இலக்காகப் பிரகடனப்படுத்திய போதிலும் அது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை விளங்காதிருக்கவில்லை. ஆயுதப் போராட்டம் நியாயமான அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன் இவை செயற்பட்டனவென்பது இந்திய- இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின் இவை எடுத்த முடிவிலிருந்து புரிகின்றது. ஆனால் புலிகள் அப்போதும் தனிநாட்டு இலக்கைக் கைவிடவில்லை. அதேநேரம், மற்றைய இயக்கங்களை அழிப்பதிலும் தீவிரம் காட்டினார்கள். புலிகளின் இச்செயல் அரசியல் தீர்வுக்காகப் பேரம் பேசும் தமிழ் மக்களின் சக்தியை வெகுவாகக் குறைத்தது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண சபை அமைந்தது. புலிகள் அதை எதிர்த்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி மாகாண சபையில் திருப்தி கொள்ளவில்லையெனினும், ஜனநாயக ரீதியான தீர்வின் ஆரம்பம் என்ற வகையில் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.
மாகாண சபை அமைப்பின் மூலம் தமிழ் மக்கள் எதையும் இழக்கவில்லை. அவர்கள் முன்னர் அனுபவித்திராத சில உரிமைகள் இதன் மூலம் கிடைத்தன. கிடைக்கும் உரிமைகளைப் பெற்றுக்கொண்டு எஞ்சிய உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவது ஆக்கபூர்வமான அணுகுமுறை. இந்த அடிப்படையில் மாகாண சபை நிர்வாகத்தை ஈ.பி.ஆர்.எல்.எப். ஏற்றுக்கொண்டமை வரவேற்கத்தக்கது. ஆனால் தனி ஆவர்த்தன மனோபாவத்துடன் செயற்பட்ட புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பை மாகாண சபை நிர்வாகத்திலிருந்து வெளியேற்றுவதிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்தார்கள். மாகாண சபை நிர்வாகத்தைச் சீர்குலைப்பதற்குப் பிரேமதாசவுடன் சேர்ந்து சதி செய்தார்கள்.
நிர்வாகத்திலிருந்து வெளியேறினாலும் மாகாண சபை அமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமை அதற்கான ஆலோசனையை அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கூடாக முன்வைத்தது. ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பைச் சேர்ந்த 38 மாகாண சபை உறுப்பினர்களும் இராஜினாமா செய்து புலிகளுக்கு வழிவிடுவது என்றும் புலிகள் மாகாண சபை நிர்வாகத்தைப் பொறுப்பேற்று ஒரு வருடத்தில் தேர்தலை நடத்தலாம் என்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆலோசனை தெரிவித்தது. இந்த ஆலோசனை 1989 டிசம்பர் மாதத்தில் தெரிவிக்கப்பட்டது.
கருணாநிதி அன்ரன் பாலசிங்கத்துடன் இது பற்றிப் பேசினார். தாங்கள் பின்கதவால் பதவிக்கு வர விரும்பவில்லை என்றும் மாகாண சபையைக் கலைத்துப் புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என்றும் பாலசிங்கம் கருணாநிதிக்குத் தெரிவித்தார். இதே விதமான கருத்தைப் புலிகள் பிரேமதாசவுக்கும் தெரிவித்திருந்தனர்.
மாகாண சபையின் ஈ.பி.ஆர்.எல்.எப். நிர்வாகத்தை வெளியேற்றி மாகாண சபை கலையும் நிலையை உருவாக்க வேண்டும் என்ற பிரதான நோக்கத்துடனேயே புலிகள் பிரேமதாச அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தார்கள். அவர்கள் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண்பதற்காகவே பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கின்றார்களெனப் பிழையாகக் கருதிய பிரேமதாச அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு முன்வந்தார். தாங்கள் முறைப்படியான மக்களாணையைப் பெறவில்லை என்றும் மாகாண சபையைக் கலைத்து நடைபெறும் தேர்தலில் போட்டியிட்டு மக்களாணையுடன் வந்து அரசியல் தீர்வு பற்றிப் பேசலாம் என்றும் அன்ரன் பாலசிங்கம் அப்போது பிரேமதாசவுக்குக் கூறினார்.
மாகாண சபை செயற்பட முடியாத நிலையைப் பிரேமதாசவுடன் சேர்ந்து புலிகள் ஏற்படுத்தினார்கள். ஆனால் தேர்தல் நடக்கவில்லை. தேர்தல் நடப்பதற்கு இடமளிக்காமல் புலிகள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகப் பிரேமதாசவுக்கும் கருணாநிதிக்கும் கூறியபோதிலும் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் புலிகளுக்கு இருக்கவில்லை. இரண்டு தலைவர்களையும் ஏமாற்றிவிட்டார்கள்.
மட்டுப்பட்ட அளவிலென்றாலும் அதிகாரப் பகிர்வைத் தமிழ் மக்கள் அனுபவிப்பதற்குப் புலிகள் இடமளிக்கவில்லை. மாகாண சபை தொடர்ந்து செயற்பட்டிருந்தால் காலப்போக்கில் கூடுதலான அதிகாரங்களைப் பெற முடிந்திருக்கும். மாகாண சபை கலைத்ததற்குப் பிந்திய வளர்ச்சிப் போக்கு தமிழ் மக்களுக்குப் பாதகமானதாகவே அமைந்தது. இக்காலப் பகுதியிலேயே தமிழ் மக்கள் பெருமளவில் இடம்பெயர நேர்ந்தது.
சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை அடுத்த கட்டம். புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும் அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்குத் தயாராக இருக்கவில்லை.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 1995 மார்ச் 9ம் திகதி பிரபாகரனுக்கு அனுப்பிய கடிதத்தில் அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தைக்கான ஆலோசனையைத் தெரிவித்திருந்தார். ஏப்ரல் 2ம் திகதிக்கும் 10ம் திகதிக்குமிடையே அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு வசதியான ஒரு திகதியைக் குறித்து அனுப்பினால் அத் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அரசாங்கத்தின் தீர்வுத் திட்டம் அனுப்பிவைக்கப்படும் என்றும் அக்கடிதத்தில் ஜனாதிபதி சந்திரிகா கூறியிருந்தார்.
அந்தச் சந்தர்ப்பத்தைப் புலிகள் பயன்படுத்தவில்லை. அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தை இடம்பெறுவதைத் தவிர்ப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள். பொதுசன ஐக்கிய முன்னணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தைக்குத் தங்களை இட்டுச் சென்றுவிடும் என்பதை உணர்ந்ததால் பேச்சுவார்த்தையைக் குழப்புவதற்கு முடிவு செய்தார்கள். பூநகரி இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் கிழக்கு மாகாணத்தில் புலிப் போராளிகள் ஆயுதங்களுடன் நடமாடுவதை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி, அரசாங்கம் அதற்குச் சம்மதிக்காததால் யுத்தநிறுத்தத்தை முறித்தார்கள். பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. அரசியல் தீர்வைத் தவிர்ப்பதற்காகவே இவ்விரு கோரிக்கைகளையும் புலிகள் வலியுறுத்தினார்கள்.
புலிகளின் அடுத்த பாரிய தவறு பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் தொடர்பானது. இத் தீர்வுத் திட்டம் ஒற்றையாட்சியிலிருந்து விடுபடுவது. சமஷ்டித் தன்மை கொண்டது. பல வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருந்தது.
இத் தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் தனிநாட்டுக் கோரிக்கை வலுவிழந்துவிடும் என்ற அச்சம் புலிகளுக்கு ஏற்பட்டதால் வழமையான பாணியில் தமிழ்க் கட்சிகளை இத் தீர்வுத் திட்டத்துக்கு எதிராக அணிதிரட்டினார்கள். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இணைந்திருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுத் தீர்வுத் திட்டத்தை எதிர்த்ததால் அதை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இயலவில்லை. அரசாங்கம் தீர்வுத் திட்டத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அரசியல் தீர்வை அடைவதற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் புலிகள் தட்டிக்கழித்து வந்ததனால் உருவாகிய நிலை தமிழ் மக்களுக்குச் சாதகமானதாக இல்லை. புலிகள் மாத்திரமன்றி அவர்களின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்படும் தமிழ்க் கட்சிகளும் இந்த நிலை உருவாகியதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்ட காலத்தில் பேரினவாத சக்திகள் எழுச்சி பெற்றிருக்கவில்லை. அதிகாரப் பகிர்வு பற்றிய அறிவூட்டல் கருத்தரங்குகள் நாட்டின் மூலைமுடுக்குகளிலெல்லாம் அப்போது நடைபெற்றன. அதன் விளைவாக அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவான பொதுசன அபிப்பிராயம் அப்போது வளர்ந்திருந்தது. அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்துக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்ததும் இக் கட்சிகள் புலிகளுடன் அணிசேர்ந்ததும் நிலைமையில் மாற்றம் ஏற்படக் காரணமாகின.
நியாயமான தீர்வு எனப் பரவலாகக் கருதப்பட்ட தீர்வுத் திட்டத்தைத் தமிழ்த் தலைவர்கள் எதிர்த்ததும் எதிர்த்ததோடு நிற்காமல் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகச் செயற்படத் தொடங்கியதும் தமிழ்த் தலைமையின் அரசியல் தீர்வுக் கோரிக்கையைச் சிங்கள மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதற்கு வழிவகுத்தன. தனிநாடு அமைக்கும் இலக்குடனேயே அரசியல் தீர்வு பற்றிப் பேசுகின்றார்கள் என்ற சந்தேகம் சிங்கள மக்களிடம் எழுந்தது. இச் சந்தேகத்தைப் பேரினவாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதிகாரப் பகிர்வுக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட பிரசாரம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சுருக்கமாகக் கூறுவதானால், பேரினவாதிகள் தலைதூக்குவதற்கும் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சி பல வருடங்கள் பின்னோக்கித் தள்ளப்படுவதற்கும் புலிகளின் தவறுகள் காரணமாக இருந்திருக்கின்றன.
ரசியல் தீர்வு முயற்சியை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டிய நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த காலங்களின் கசப்பான அனுபவம் புதிய சிந்தனைக்கு வழிவகுக்க வேண்டும்.
-தினகரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment