கூட்டமைப்பு எம்.பி.கள் இன்று அவசர சந்திப்பொன்றை கொழும்பில் நடத்துகின்றனர்
ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை கொழும்பில் அவசர சந்திப்பொன்றை நடத்துகின்றனர்.
நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு தொடர்பாக இன்று முடிவெடுக்கப்படுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இதேநேரம், ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று பேச்சுவார்த் தைக்குச் செல்வது சிறந்ததாகுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தனித் தனியாக அனுப்பி வைத்த கடிதம், நேற்றைய தினமே கிடைத்ததாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
எனினும் நேற்றைய தினமே அவசரமாகக் கூடுவதென முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொழும்புக்கு வெளியில் உள்ள சில உறுப்பினர்களின் வசதி கருதி இன்றைய தினம் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
நாளை வியாழக்கிழமை மாலை 6.30 இற்கு நடைபெறும் ஜனாதிபதியுடனான கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று சாதகமான முடிவு எடுக்கப்படலாமெனத் தெரியவருகின்றது.
முன்பு, கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. தற்போது திடீரென கிடைத்துள்ள அழைப்பை கூட்டமைப்பினர் தவறவிடக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment