மாற்றான்தோட்டத்து மல்லிகை மீதான மோகம்
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கும், அடியாட்கள் 8 பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் 10 ஆண்டு கால கடுங்காவல் தண்டனையை மாற்றி ஆயுள் தண்டனை விதித்துள்ளதையடுத்து சரவணபவன் அதிபர் தனக்கு வழ ங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றில் மேன் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளார்.
இதேவேளை இன்று அவர் நீதிமன்றில் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தேத்தகுடி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவஜோதி. இவர் தனது தாயார் மற்றும் கணவருடன் சென்னையில் வசித்து வந்தார். ராஜகோபாலின் ஹோட்டலில் வேலை பார்த்தார் ஜீவஜோதியின் தந்தை.
அதன் மூலமாக ஜீவஜோதி குடும்பத்துக்கும் ராஜகோபாலுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
ஜீவஜோதி மீது ராஜகோபாலின் கண் விழுந்தது. ஆனால், வேளாச்சேரியை சேர்ந்த பிரின்ஸ் சாந்தகுமாரை ஜீவஜோதி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனாலும், ஜீவஜோதியை விடாத ராஜகோபால் பிரின்ஸை பலமுறை அழைத்து மிரட்டியுள்ளார்.
ஜீவஜோதியை 3 ஆவது திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறியும் அவரை விட்டு விலகுமாறும் பிரின்ஸை மிரட்டினார்.
இந்த மிரட்டலுக்கு பிரின்ஸ் அஞ்சவில்லை. இந் நிலையில் 26.10.2001 அன்று சாந்தகுமார் வீட்டிலிருந்து மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இதையடுத்து, வேளச்சேரி பொலிஸில் ஜீவஜோதி கொடுத்த புகாரில் சரவண பவன் அதிபர் ராஜகோபாலும் அவரது ஆட்களும் தனது கணவரை கடத்தி சென்று விட்டதாக கூறியிருந்தார்.
இதையடுத்து, பிரின்ஸை பொலிஸார் தேடி வந்தனர். 5 நாட்கள் கழித்து 31 ஆம் திகதி பிரின்ஸ் சாந்தகுமாரின் உடல் கொடைக்கானலில் ஒரு மலைப் பள்ளத்தாக்கில் கிடந்தது.
சில ஆட்டிடையர்கள் கொடுத்த தகவலின்பேரில் பிரின்ஸ் உடல் மீட்கப்பட்டது.
பிரின்ஸ் கழுத்தை நெரித்தும், அடித்தும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சென்னையிலிருந்து அவரை காரில் கடத்தி, வழியெல்லாம் அடித்தும், கழுத்தை நெரித்தும் அவரைக் கொலை செய்துவிட்டனர்.
இந்த வழக்குத் தொடர்பாக சரவண பவன் அதிபர் அண்ணாச்சி ராஜகோபால், அவரது மனேஜர் டானியல், மற்றும் கார்மேகம், ஜாகீர் உசேன், தமிழ்செல்வன், காசிவிசுவநாதன், பட்டுராஜன், சேது, முருகானந்தம் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து வேளச்சேரி பொலிஸார் பூந்தமல்லி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி நீதிமன்றம், கடந்த 2004 ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 55 இலட்சம் ரூபாய் அப ராதமும் விதித்தது.
கொலைக்கு உடந்தையாக இருந்த 8 பேருக்கு 9 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் சாந்தகுமாரை கடத்திய வழக்கில் ராஜ கோபாலுக்கு 3 ஆண்டும், மற்ற 8 பேருக்கும் இரண்டு ஆண்டுகளும் தண்டனை அளித்தது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் 9 பேரும் மனு செய்தனர். இதையடுத்து தண்டனையை நிறுத்தி வைத்த உயர்நீதிமன்றம் 9 பேருக்கும் பிணை வழங்கியது.
இந்த நிலையில் அரசுத் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் தண்டனையை அதிகரித்து ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என கூறப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை ஏற்கனவே முடிந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில், அண்ணாச்சி ராஜகோபால், டேனியல், கார்மேகம், ஜாகீர் உசேன், காசிவிசுவநாதன், பட்டுராஜன் ஆகிய 6 பேருக்கு தண்டனையை அதிகரித்து ஆயுள் தண்டனை வழங்குவதாக அறிவித்தனர்.
தமிழ்செல்வன், சேது, முருகானந்தம் ஆகியோருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் விதித்த அதே தண்டனையை உறுதி செய்வதாகவும் கூறினர்.
குற்றவாளிகளுக்கு இபிகோ 302 வது பிரிவின்படி தண்டனை வழங்காமல், தண்டனை வழங்கியதில் பூந்தமல்லி நீதிமன்றம் தவறிழைத்து விட்டதாகக் கூறிய நீதிபதிகள், குற்றவாளி ராஜகோபால் தெளிவான நோக்கத்துடன் இந்த பயங்கர குற்றத்தை இழைத்திருப்பதாகவும், இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் இந்த நீதிமன்றம் கருதுகிறது. அவருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று கூறினர்.
மேலும், 9 பேரின் பிணைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அவர்களை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என பொலிஸாருக்கு பிடியாணை பிறப்பிக்க பூந்தமல்லி நீதிமன்றிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் ராஜகோபாலுக்கு கீழ் கோர்ட்டு விதித்த 55 இலட்சம் ரூபா அபராதத்தை 30,000 ரூபாவாக நீதிபதிகள் குறைத்தனர்.
நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்ட போது ராஜகோபால் உள்ளிட்ட 9 பேரும் நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதையடுத்து அவர்களை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டனர்.
தனது ஹோட்டலில் வேலைபார்த்து வந்த கிருத்திகா என்ற பெண்ணையும் அவரது கணவரை விரட்டி விட்டுவிட்டு ராஜகோபால் தன்வசப்படுத்தியதும் நினைவுகூரத்தக்கது. இப்போது கிருத்திகாவுக்கும் ராஜகோபாலின் மகன்களுக்கும் இடையே சொத்து சண்டை நடந்து வருகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment