‘வணங்கா மண்” இன்று புறப்பட்டது; இலங்கை துறைமுகம் ஒன்றுக்குள் கொண்டு வந்து முழுமையான சோதனைக்கு உட்படுத்திய பின்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
பிரித்தானிய துறைமுகம் ஒன்றிலிருந்து ‘வணங்கா மண்” என்ற கப்பல் இன்று (மார். 31) புறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வன்னி யுத்தப் பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிக் கொண்டே இந்தக் கப்பல் இன்று புறப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்களின் ஒருவர் தெரிவித்துள்ளார்.
500 தொன் பொருட்களுடன் புறப்பட்டுள்ள இந்தக் கப்பலில் மருத்துவர்கள் குழுவொன்றும் இடம் பெற்றள்ளது. முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இந்தக் கப்பலை நிறுத்தி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சுச் செயலாளர் பாலித கொஹனவையைத் தொடர்புகொண்டு ஒரு இணைய ஊடகம் கேட்ட போது, இவ்வாறான கப்பலொன்று புறப்படுவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்படவில்லை.
அவ்வாறு இலங்கையின் கடற்பரப்புக்குள் இந்தக் கப்பல் நுழைந்தால் சர்வதேச கடல் சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எமது கடற்படையினரூடாகக் குறிப்பிட்ட கப்பலை துறைமுகத்துக்குள் கொண்டு வந்து முழுமையான சோதனையொன்றுக்கு உட்படுத்தி அதன் பின்னர் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment