"வணங்கா மண்' கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால் தாக்குதல்
வன்னிக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் வரும் "வணங்கா மண்' என்ற கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தால் அதன் மீது தாக்குதல் நடத்தப்படுமென இலங்கை கடற்படை எச்சரித்துள்ளது.
வன்னியில் படை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த ஈழத்தமிழர்கள் வழங்கும் சுமார் 2 ஆயிரம் மெற்றிக்தொன் அத்தியாவசிய உணவுப்பொருட்களுடன் "வணங்காமண்' என்ற கப்பல் எதிர்வரும் 26 ஆம் திகதி பிரிட்டனிலிருந்து இலங்கையை நோக்கி புறப்படவுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச்சங்க கொடியுடன் இந்த கப்பல் பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கிலேயே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானோர் வன்னி மக்களுக்கென்ற பேரில் இந்த உணவுப்பொருட்களை விடுதலைப்புலிகளுக்கு கொண்டுவரமுற்படுவதாக இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த கப்பலானது இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தால் அதன் மீது தாக்குதல் நடத்தப்போவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் எதிர்ப்பையும் மீறி "வணங்காமண்' என்ற அந்த கப்பலை இலங்கை கடற்பரப்புக்குள் கொண்டு செல்ல பிரிட்டனைச் சேர்ந்த தமிழமைப்பு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேநேரம், அந்த கப்பலின் உரிமையாளர் குறித்த விபரங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வன்னிமக்களுக்காக இந்த கப்பலில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அனுப்பப்படும் தகவல்களை அறிந்து பெருமளவு புலம்பெயர் தமிழ் மக்கள் பெருமளவு பொருட்களை வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment