ஐ.நா. மனித உரிமைகள் ஸ்தானிகரின் அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பு
வன்னியில் சிவிலியன்கள் பாதிப்புத் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் திருமதி நவனீதம்பிள்ளையினால் வெளியிடப்பட்ட அறிக்கை உண்மைக்குப் புறம்பானதென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஜனவரி 20 இல் இருந்து ஏழு வாரங்களுக்குள் 2800 சிவிலியன்கள் வன்னியில் கொல்லப்பட்டதாக திருமதி நவனீதம்பிள்ளை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது மிகைப்படுத்தப்பட்டதாகும். இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ஐ. நா. வின் முக்கிய பிரிவாக இருக்கின்ற மனித உரிமைகள் அமைப்பு மிகவும் தொழில்சார் தன்மையிலிருந்து விலகிச் செயற்பட்டுள்ளது. இப்படியான அறிக்கையொன்றை வெளியிடும் முன்னர் இலங்கையிடம் அதனை பரிசீலித்திருக்க வேண்டும். அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.
புலிகள் சிவிலியன்களை பலாத்காரமாகத் தடுத்து வைத்து மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். சிவிலியன்களை சுதந்திரமாக செல்வதற்கு அனுமதிக்கும்படி நவனீதம்பிள்ளை புலிகளுக்குக் கூறியிருக்க வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகாரச் செயலாளர் பாலித கொஹன, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல, பிரிகேடியர் உதய நாணயக்கார ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் புலிகளின் தமிழ் நெற் இணையத்தளமும் புலிகள் சார்பு ஏனைய இணையத் தளங்களும் வெளியிட்ட பொய்யான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஐ. நா. இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது என்றார்.
அரசாங்க பாதுகாப்புப் படையினர் ஒரு போதும் சிவிலியன்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்துவதில்லை. பாதுகாப்பு வலயத்தினை இலக்கு வைத்தும் படையினர் தாக்குதல் நடத்துவதில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment