தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல அரசாங்கம் தயாரில்லை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல
பேச்சுவார்த்தைக்கு வரமுன்னர் தமது கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துப் பொதுமக்களையும் விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மோதல்களில் சிக்குண்டிருக்கும் மக்களின் நன்மைகருதி அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கை அரசாங்கத்துடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையொன்றுக்குச் செல்லத் தயாரென விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பிரித்தானிய ஊடகமொன்றுக்குத் தெரிவித்திருந்தார்.
எனினும், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தையொன்றுக்குச் செல்ல அரசாங்கம் தயாரில்லையெனத் தெரிவித்த அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, எனினும் அரசாங்கத்திடமிருந்து விடுதலைப் புலிகள் பதிலை எதிர்பார்க்கிறார்களாயின் தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்கள் அனைவரையும் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றார்.
“தற்போதைய நிலையில் விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறோ அல்லது ஆயுதங்களைக் கீழே வைக்குமாறோ நாங்கள் கூறவில்லை. அதனைப் பற்றி நாங்கள் பின்னர் பார்ப்போம்” என்றார் அமைச்சர்.
முன்நிபந்தனைகள் எதுவுமின்றி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவிருப்பதாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் லண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருந்தார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள நலன்புரி நிலையங்கள் மீது நாளாந்தம் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், இதனால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நடேசன் தனது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, வடபகுதியை முழுமையாக மீட்கும் இராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் உக்கிரப்படுத்தி, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பெருமளவானவற்றைக் கைப்பற்றத் தொடங்கியதும், பேச்சுவார்த்தைக்குத் தயாரென விடுதலைப் புலிகள் பல்வேறு தடவைகள் அழைப்பு விடுத்தனர்.
எனினும், விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அழைப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வந்ததுடன், விடுதலைப் புலிகள் தம்மிடம் சரணடைய வேண்டுமென முன்னர் கூறியிருந்தனர். ஆனால், முல்லைத்தீவில் மீட்பதற்கு இன்னமும் 20 கிலோமீற்றர் நிலப்பரப்பே இருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், விடுதலைப் புலிகள் சரணடைவதையா அல்லது அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைப்பது பற்றியோ பின்னர் சந்திப்போம் என அரசாங்கம் கூறியுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment