வன்னி மக்களை அப்புறப்படுத்தும் திட்டம் அமெரிக்காவிடம் இல்லை
வன்னி மக்களை போர்ச் சூழலில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் அமெரிக்காவிடம் தற்போது இல்லை.
வன்னியில் இருந்து பொது மக்களை விடுவிப்பது தொடர்பாக பல தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன.
அரசும் விடுதலைப் புலிகளும் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே மக்களை வெளியேற்றவது சாத்தியமாகும்'' என அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளாக் இன்ரநியூஸ் செய்தியாளர் எஸ். ரமணனுக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அப்பேட்டியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: இலங்கையில் நிரந்தர அமைதியை உண்டாக்குவதே எமது அடிப்படை எண்ணமாக உள்ளது. கிழக்கில் அமைதியும் அபிவிருத்தியும் ஏற்பட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
வன்னியில் போர் பிரதேசங்களில் சிக்கியுள்ள மக்களை விடுவிக்குமாறு அரசு தரப்பிற்கும் விடுதலைப் புலிகள் தரப்பிற்கும் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வருட இறுதிக்குள் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களில் 81 சதவீதமானோர் மீள்குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்ற அறிவிப்பை அமெரிக்கா வரவேற்கிறது. இருப்பினும் அமெரிக்காவிடம் தற்போது வன்னி மக்களை போர் சூழலில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான திட்டங்கள் ஏதும் இல்லை. மனித உரிமைகள் தொடர்பாகவும் பத்திரிகை சுதந்திரம் பாதிப்படைந்திருப்பதை இட்டும் அமெரிக்கா மிகுந்த கவலை கொண்டுள்ளது.
ஒபாமா நிர்வாகம் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்றே செயற்பட்டு வருகிறது. ஜனநாயக கட்சியோ, குடியரசுக்கட்சியோ இலங்கை தொடர்பாக சீரான கொள்கைகளையே கொண்டுள்ளன. அமெரிக்காவின் இலங்கை தொடர்பான பிரதான இலக்கு இங்கு அமைதியை காண உள்ள வழிவகைகளை ஊக்குவிப்பதாகும்.
இனப்பிரச்சினையோ மனித உரிமைப் பிரச்சினையோ மனிதாபிமான பிரச்சினையோ அதனை தீர்க்கவே அமெரிக்கா உதவுகிறது.
விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பிரதேசங்களில் அமைதியையும் அபிவிருத்திøயயும் கட்டியெழுப்பலாம் என்றே அமெரிக்கா கருதுகிறது. தனியார் நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உருவாக்கப்பட வேண்டும். துணை இராணுவ படைகள் களையப்பட வேண்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகள் களையப்பட்டமையை இதற்கு ஒரு உதாரணமாக காணலாம். இலங்கையின் கிழக்கு பகுதியில் இதன் மூலம் சுபீட்சத்தை காண முடியும்.
கிழக்கில் அரசு தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை உருவாக்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.கிழக்கில் பெருந்தொகையான இடம்பெயர்ந்த மக்கள் மீள அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களும் விரைவில் மீள சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர். இதற்கு நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படுவது பிரதானமாகும். அரசு இது தொடர்பாக உறுதிபூண்டுள்ளது என்றே நம்புகிறோம்.
மனித உரிமைகள் தொடர்பாக கடந்த சில வருடங்களாக இலங்கையில் நிலவும் சூழ்நிலையை இட்டு அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. அதிகரித்துள்ள ஆள் கடத்தல்கள், பொது மக்கள் காணாமல் போதல், நீதிக்கு புறம்பான கொலைகள் இதனை இட்டு அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. அரசு இது தொடர்பாக முகம் கொடுக்க அமெரிக்க ஊக்குவிக்கும்.
மனித உரிமைகள் தொடர்பாக ஆண்டுதோறும் அமெரிக்கா அறிக்கை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. தொண்டு நிறுவன ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், சட்டத்தரணிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். மனித உரிமை மறுப்பு என்பது தமிழர்களை இங்கு பெரிதும் பாதித்துள்ளது. தேசிய ஒருமைப்பாடு, யுத்தத்தின் பின்னர் எட்டப்படக்கூடும். மனித உரிமைகள் நிலைமைகளை முன்னேற்றுவதன் மூலம் அமைதியை காண முடியும். மனித உரிமைகளை இங்கு நிலை நாட்டுவதற்கு அமெரிக்கா ஐ.நா.உடனும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்என்பவற்றுடன் இணைந்து செயலாற்றி வருகிறது.
வன்னியில் இருந்து பொது மக்களை விடுவிப்பது தொடர்பாக பல தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன. விடுதலைப் புலிகளும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். வன்னியில் இருந்து பொது மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதி வழங்க வேண்டும். மக்கள் இலங்கையில் சுதந்திரமாக நடமாட உரிமை உள்ளது போர்ச் சூழலில் இருந்து மக்களைவிடுவிக்க அரசோ விடுதலைப்புலிகளோ அமெரிக்காவிடம் கோரிக்கை ஏதும் முன்வைக்கவில்லை.
இவ்வாறு கோரிக்கை வைக்கும் பட்சத்தில் அதை அமெரிக்கா நிச்சயம் பரிசிலிக்கும் முதலில் விடுதலைப் புலிகள் வன்னி போர் பகுதியில் தடுத்து வைத்துள்ள மக்களை விடுவிக்க முன்வர வேண்டும். இதற்கு ஐ.நா, அனுசரனை அவசியம் இல்லை. அனேகமாக தினமும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வன்னியில் காயமடைந்தவர்களை, நோயாளிகளை அப்புறப்படுத்தி வருகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment