கஞ்சி குடித்துக்கொண்டு உயிர் பிச்சைக்காக கையேந்தும் நிலையாக எம்மவரின் வாழ்வு மாறிவிட்டது
பதுங்கு குழிகளுக்குள் இருந்து கஞ்சி குடித்துக்கொண்டு உயிர் பிச்சைக்காக கையேந்தி நிற்கும் நிலைதான் எம்மவரின் அன்றாட வாழ்வாக மாறிவிட்டது. இந்நிலை மாறுவதற்கு எங்கள் பாவங்களுக்காக மனம் மாறி, மனம் வருந்தி, மனம் திருந்த இறைவனிடம் பிரார்த்திக்கவேண்டும் என யாழ். ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.
தவக்கால பங்கு தரிசிப்பின் போது மிருசுவில் நீக்கிலார் ஆலயத்தின் நலன்புரி நிலைய மக்கள் மத்தியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் நாம் எமது வாழ்வில் என்றும் இல்லாதவாறு பல சொல்லொண்ணா துன்ப துயரங்களையும் மனித பேரவலங்களையும் மனிதப் படுகொலைகளையும் விபரிக்க முடியாத இடப்பெயர்வுகளையும் மனித மாண்புக்கு ஒவ்வாத போர்முனையையும் சந்திக்கின்றோம்.
நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. இறந்தவர்களை மதச்சடங்குடனும் மனித மாண்புடனும் அடக்கம் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றோம்.
இப்படிப்பட்ட வேதனைகள் நிறைந்த நிலையில் நாம் பலரையும் பல தலைவர்களையும் நினைத்து நொந்து புலம்பி அழுகின்றோம். ஆனால் இது யார் செய்த பாவம்? யார் செய்த துரோகம்? யார் செய்த குற்றம்? என்ற கேள்வி எழலாம் ஆனால் யாருமல்ல அன்பான சகோதர சகோதரிகளே நாங்கள் செய்த துரோகம், நாங்கள் செய்த குற்றம் இவை யாவும் நாம் தேடிக் கொண்டவையே.
எனவே இத் தவக் காலத்தில் நாங்கள் செய்யவேண்டியதென்ன? வேதம் சொல்வதுபோல் வீண் ஆடம்பரங்களைத் தவிர்த்து வீண் செலவுகளைக் குறைத்து கோணி உடுத்தி, புழுதியில் உட்கார்ந்து, புலம்பி அழுது கரமுயர்த்தி ""நாங்கள் பாவம் செய்தோம் எங்களை மன்னியும்''என்று இறைவனை பிரார்த்திக்கவேண்டும்.
நல்ல தவக்கால பக்தி முயற்சிகளில் ஈடுபடவேண்டும். பிறரை குற்றங் காண்பதை தவிர்த்து என்னுடைய குறைகுற்றங்களுக்காக மன்னிப்பு பெற்று புதிய படைப்பாக மாறிட வரம் கேட்க வேண்டும் என்றார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment