பிரபாகரன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது: கேரளாவில் வசிக்கும் பிரபாகரனின் அத்தை மகள் பேட்டி
பிரபாகரன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று கேரளாவில் வசிக்கும் பிரபாகரனின் அத்தை மகள் பேட்டி அளித்துள்ளார்.
விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் அத்தை(தந்தை வேலுப்பிள்ளையின் சகோதரி) மகள் ஜானகியம்மா(வயது 76). இவர் தனது கணவர் பரமேஸ்வரன்பிள்ளையுடன் கேரள மாநிலம் கொல்லம் நகரில் வசித்து வருகிறார்.
முந்திரி பருப்பு சுத்திகரிக்கும் தொழில் நடத்தி வரும் ஜானகியம்மா, தனது 22-வது வயதில் கொல்லம் பகுதிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
இலங்கையில் வேலுப்பிள்ளை ஒரு வியாபார கடையில் வேலை செய்து வருவதாக நான் கொல்லம் வந்த சில வருடங்களுக்கு பிறகு கடிதம் எழுதி இருந்தார். பின்பு வேலுப்பிள்ளை இலங்கையில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்த தகவலும் கிடைத்தது. திருமணம் செய்த பின்பும் எனது கொல்லம் முகவரிக்கு பணம் அனுப்புவார். கடிதமும் அனுப்புவார்.
வேலுப்பிள்ளை உடன் பிறந்தவர்கள் 8 பேர். அவர்களில் 6 பேர் சகோதரிகள். இதில் நாணியம்மா என்ற சகோதரியின் மகள் தான் நான்.
பிரபாகரன் பிறந்த ஒரு வருடத்தில் எனது மாமா வேலுப்பிள்ளை, மனைவியை பிரிந்து விட்டார். பின்னர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிரபாகரன் 10 வயது இருக்கும் போது, அவரது தந்தையுடன் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் எனது தாயார் இறந்ததற்கு கொல்லம் வந்திருந்தார். அதன்பிறகு பிரபாகரன் மற்றும் அவரது தந்தை இங்கு வரவே இல்லை.
இப்போது பத்திரிகைகளில் பிரபாகரன் தொடர்பாக வரும் தகவல்களை கேட்கும் போது மனது வேதனை அடைகிறது. பிரபாகரன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன்.
கடந்த 25 வருடங்களாக எனது மாமன் மகன் பிரபாகரனை டி.வி.யிலும், பத்திரிகைகளிலும் தான் பார்க்கிறேன். பிரபாகரன் சண்டை, சச்சரவுகளை கைவிட்டுவிட்டு நல்ல வாழ்க்கை வாழ முன்வரவேண்டும்.
இவ்வாறு ஜானகியம்மா கூறினார்..
0 விமர்சனங்கள்:
Post a Comment