கட்டார் சிறைச்சாலையில் வாடும் இலங்கையர்
சிறைக் கைதிகள் இருவர் பயிற்சி நிலையத்தினுள்
கட்டார் சிறைக்கு நேரில் சென்று வந்த ஏ.ஆர்.ஏ. பரீல்
நான் செய்த குற்றத்துக்காக கடவுள் எனக்கு சரியான தண்டனை தந்துள்ளார். ஆறுவருட காலமாக நான் இலங்கைக்கு செல்லாது சிறையில் இருக்கிறேன். எனது மகனுக்கு தற்போது 5வயதாகிறது.
எனது குழந்தையின் முகத்தைக் கூட நான் இன்னும் காணவில்லை. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்று வருபவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாது நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று நான் எங்கள் நாட்டவரைக் கேட்டுக் கொள்கிறேன். நேர்மையாக நடந்துகொண்டாலே நாம் நிம்மதியாக மகிழ்வாக வாழ முடியும்.
கட்டார் நாட்டுச் சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நிட்டம்புவயைச் சேர்ந்த 25 வயதான வீரதுரிய எனும் சிறைக்கைதியை நான் சந்தித்த போது விழிகளில் நீர்மல்க மேற்கண்டவாறு தெரிவித்தார். போதைப்பொருள் ஒன்றை (மதன லேகியம்) இலங்கையிலிருந்து கொண்டு சென்று விற்பனை செய்த குற்றத்துக்காக அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழு காதிநீதிபதிகளுக்கான இரு வாரகால பயிற்சி நெறி ஒன்றினை கட்டார் அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. இப்பயிற்சி நெறிக்கான சகல செலவுகளையும் கட்டார் அரசாங்கம் ஏற்றிருந்தது. இலங்கையிலிருந்து சென்ற தூதுக் குழுவுக்கு கம்பஹா மேல் நீதிமன்ற நீதவானும், நீதிச் சேவை ஆணைக் குழுவின் உதவிச் செயலாளருமான அப்துல் கபூர் தலைமை வகித் தார். குழுவில் 15 பேர் அங்கம் வகித்தனர்.
கட்டார் சிறைச்சாலையில் 74 இலங்கையர்கள் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்களில் அறுவர் கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாவர். ஐவர் தங்களது மரண தண்டனைக்கு எதிராக அப்பீல் செய்துள்ளார்கள்.
எமது சிறைச்சாலையில் உள்ள சிறைக் கைதிகளை நாம் மிகவும் அன்புடன் நடத்துகிறோம். அவர்களை சமூகத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்றியமைத்து விடுதலை செய்கிறோம். சிறைச்சாலையினுள் அவர்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம் என்று கட்டார் நாட்டு சிறைச்சாலை ஆணையாளர் எம்மிடம் இவ்வாறு தெரிவித்தார்.
சிறைச்சாலை எட்டு பாரிய கட்டடங்களை உள்ளடக்கியதாகும். இங்கு ஈரான், பாகிஸ்தான், நேபாள், வியட்நாம், இந்தியா, இந்தோனேசியா, பங்களாதேஷ், பிலிப்பைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு குற்றங்க ளுக்காக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, பாவனை, களவு, மோசடி, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களைப் புரிந்தவர்கள் இவர்கள். பெண் சிறைக் கைதிகளும் இருக்கிறார்கள். இவர்கள் சிறு குற்றச் செயல்களைப் புரிந்தவர்களாவர்.
சிறைக் கைதிகளாக இருப்பவர்கள் சிறையிலிருந்து கொண்டே வெளியில் திருமணம் செய்து கொள்ளலாம். அவர்களுக்கு சிறையில் அறை ஒதுக்கிக் கொடுக்கப்படும். வாரம் ஒருமுறை அவர்கள் அறையில் 5 மணித்தியாலம் ஒன்றாக இருக்கலாம். கைதிகளுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள் கைதிகளுடன் மிகவும் அன்புடன் பழகுகிறார்கள். கைதிகளை மனித உரிமைகள் பணியக அதிகாரிகள், செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் அடிக்கடி வந்து பார்வையிட்டு செல்கிறார்கள்.
சிறைச்சாலையினுள் பல்வேறு தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. பெயிண்டிங் (வரைதல்), தையல், மரவேலைகள், இரும்பு வேலைகள் என்பன சிறைச்சாலையினுள் நடைபெற்று வருகின்றன. கணனி பயிற்சியும் வழங்கப்படுகிறது. தொழிலில் ஈடுபட்டுள்ள கைதிகளுக்கு வேலை செய்யும் தினமொன்றுக்கு 10 கட்டார் ரியால் வழங்கப்படுகிறது. இது அவர்களது சேமிப்பில் இடப்பட்டு விடுதலையாகிச் செல்லும்போது மொத்தமாக வழங்கப்படுகிறது.
விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு கைதிகளுக்கு காலையில் 2 மணித்தியா லங்களும், மாலையில் 1ண மணித்தியாலங்களும் வழங்கப்படுகிறது. நீண்டகாலம் சிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்டிருப்பவரின் தண்டனைக் காலம் நீதி மன்றம் மூலம் குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள்.
கட்டார் சிறைச்சாலையில் நான் செலவிட்ட சில மணி நேரங்களில் இலங்கை கைதிகள் பலரிடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
மாத்தறையைச் சேர்ந்த விக்கரமசிங்க எனும் கைதி ஒரு கொள்ளைச் சம்பவத்திற்காக குற்றம் சாட்டப்படு 1995ம் ஆண்டு முதல் 14 வருடகால சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அப்போது அவரது வயது 21, இப்போது அவரது வயது 35. 13 வருடங்களாக சிறையில் இருக்கிறார்.
நான் எனது இளமைக் காலத்தில் குற்றம் புரிந்து அதன் பிரதிபலனை இப்போது அனுபவித்து வருகிறேன். என் இளைமை சிறைக்கு அர்ப்பணிக்கப்பட்டு விட்டது. பல கைத்தொழில்களைப் பயின்றுள்ளேன். இஸ்லாம் மதத்துக்கும் மாறிவிட்டேன். இப்போது எனது பெயர் மொஹமட் ஜுனைத். சிறையிலிருந்து விடுதலை பெற்று இலங்கை சென்று ஒரு நல்லவனாக, நேர்மையானவனாக வாழ விரும்புகிறேன் என்றார் அவர்.
மேலும், கட்டார் சிறைச்சாலையில் மாவனல்லை, ஹம்பாந்தோட்டை, பண்டாவளை, கேகாலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், நிக்கவரட்டிய, திருகோணமலை, கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இலங்கையர்கள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
சிறைக்கைதிகளின் நெருங்கிய உறவினர்கள் எவராவது மரணித்தால் அவர்களுக்கு மரண வீட்டுக்குச் சென்று திரும்ப 48 மணித்தியாலய விடுமுறை வழங்கப்படுகிறது. அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் மரண வீட்டுக்கு அழைத்துச் சென்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்படுவார்கள். நெருங்கிய உறவினர் கடும் சுகயீனமுற்றால் அவரைப் பார்வையிட்டு வர 4 மணித்தியாலங்கள் வழங்கப்படுகிறது. சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்துவரும் கைதிகளில் குறிப்பிடப்பட்ட ஒரு தொகையினர் ரமழான் மாதத்தில் கட்டார் நாட்டு அமீரினால் (தலைவர்) மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார்கள். மனித உரிமை தினத்தன்றும் மன்னிப்பு வழங்கப்படுகிறது.
இலங்கை சிறைக் கைதிகளுடன் உரையாடி விடைபெற்றபோது அவர்களின் விழிகளில் சோகக் கண்ணீரின் நிரம்பலைக் காண முடிந்தது. நீங்கள் எங்களைப் பார்க்க வந்தது எமக்கு ஆறுதலாக இருக்கிறது. அவர்கள் எங்கள் கரங்களை இறுகப்பற்றி விடை தந்தார்கள். நான் என் விழிகளைத் துடைத்துக் கொண்டேன்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்களுக்கு கட்டார் சிறைச்சாலையினுள் சில மணித்தியாலங்கள் ஒரு பாடமாக இருக்கட்டும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment