புலிகளுக்கு ஆதரவான அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை : அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு
"பயங்கரவாதத்தை ஒழித்துக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது" என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது :
"விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் போரின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள இந்தத் தருணத்தில் பனோஸ் எனப்படும் அரச சார்பற்ற நிறுவனம் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக உள்நாட்டு ஊடகவியலாளர்களையும் தம்மோடு இணைத்துக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மேற்படி நிறுவனம் புலிகளுடன் இணைந்து தயாரித்த எழுத்துமூலமான ஆவணங்கள் பல எமக்கு கிடைத்துள்ளன. இந்த ஆவணங்களை, குறித்த ஊடகவியலாளர்களைப் பயன்படுத்தி வெளியிட்டு மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான பிரசாரங்களை – இந்த அமைப்பினர் மேற்கொண்டு வந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றாக அழிப்பதற்கான படையினரின் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏன் தலையிட்டனர் என்பதற்கான காரணம் இதன் மூலம் வெளிப்படையாகின்றது.
இவ்வாறான அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மேற்படி பனோஸ் நிறுவனம் குறித்தும் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றது. விசாரணைகள் பூர்த்தியாகும் பட்சத்தில் அந்நிறுவனம் மற்றும் அதற்கு சார்பாகச் செயற்பட்ட ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment