பொதுமக்கள் கொல்லப்படுவதை ஏற்கமுடியாது: எரிக் சொல்ஹெய்ம்
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென நோர்வே தெரிவித்துள்ளது.
“இரு தரப்புக்கும் இடையிலான இறுதிக்கட்ட மோதல்களில் பொதுமக்களுக்கு மேலும் இழப்புக்கள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.
“பொதுமக்களுக்காக அரசாங்கமே பாதுகாப்பு வலயத்தை உருவாக்கியது. அவர்களே அந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, உயிரிழப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும்” என அமைச்சர் தெரிவித்தார்.
“தமிழ் மக்களுக்காகப் போராடுவதாகவே விடுதலைப் புலிகள் கூறுகின்றனர். எனவே, பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற விரும்பும் மக்களை அவர்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும். அவர்கள் மீது துப்பாக்கிச் சூடுகளை நடத்தக் கூடாது” என சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.
மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் அரசியல் தீர்வொன்றுக்குச் செல்வார்களாயின் பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் குறையும் எனக் குறிப்பிட்ட எரிக் சொல்ஹெய்ம், ஐ.நா. செயலாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு அமைய இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதநேய உதவிகளை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றார்.
“பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறிய மக்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவார்கள் என நோர்வே எதிர்பார்க்கிறது. அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இடம்பெயர்ந்தவர்கள் காணாமல் போவதைத் தவிர்ப்பதற்கு அவர்கள் அனைவரும் பதிவுசெய்யப்பட வேண்டும். கூடிய விரைவில் இடம்பெயர்ந்த மக்கள் தமது இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்” என அவர் கூறினார்.
அத்துடன், இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு மேலதிகமாக 20 மில்லியன் நோர்வேஜின் குரோண் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இரு தரப்புக்கும் இடையிலான மோதல்களை முடிவுக்குக்கொண்டுவர அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment