பிரபாகரன் பயங்கரவாதியில்லை - கருணாநிதி
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ஒரு பயங்கரவாதி அல்ல என்றும் அவர் தனது நல்ல நண்பர் என்றும் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு தமிழக முதல்வர் அளித்துள்ள இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழம் உருவாக வேண்டும் என்ற விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய கொள்கைகளும் லட்சியங்களும் உன்னதமானவை என்று இப்பேட்டியில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு பயங்கரவாதியாகக் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பிரபாகரன் தன்னுடைய நல்ல நண்பர். தான் பயங்கரவாதி அல்லவே என்றும் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து விளக்கம் அளிக்கையில், பிரபாகரன் ஓர் பயங்கரவாதி அல்ல;அவரது இயக்கத்தில் சிலர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அது பிரபாகரனுடைய தவறு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
தங்களுடைய நியாயமான லட்சியங்களை அடைய விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த சில வழிமுறைகள்தான் தவறானவை என்று அவர் இந்தப் பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார்.
BBC Tamil
0 விமர்சனங்கள்:
Post a Comment