தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்மை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும்
நலன்புரி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்மை சுதந்திரமாக நடமாட அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினருடன் பேசி மேற்கொள்ள வேண்டும் என்று வவுனியா நெலுக்குளம் நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெலுக்குளம் நலன்புரி முகாமிற்கு தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி, அவரின் செயலாளர் இரா. சங்கையா ஆகியோர் நேற்று விஜயம் செய்தனர். இந்த விஜயத்தின்போதே கூட்டணித் தலைவரிடம் இந்த கோரிக்கையினை நலன் புரி முகாமில் தங்கியுள்ள மக்கள் விடுத்துள்ளனர்.
இந்த முகாமில் 1378 குடும்பங்களைச் சேர்ந்த 3070 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து நலன்புரி முகாம்களில் நாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எமது சுதந்திரமான நடமாட்டத்திற்கு உரிய வழிவகைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் போன்றோர் வவுனியாவிலுள்ள தமது உறவினர்களுடன் சென்று வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். இதற்குரிய நடவடிக்கையினை தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியிடம் இங்கு வாழும் மக்கள் கோரியுள்ளனர்.
நலன்புரி முகாமில் கடமைபுரியும் சில அரச ஊழியர்கள் முறையற்ற விதத்தில் செயற்படுவதாகவும் இவர்கள் குறித்தும் கவனம் எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இங்கு கருத்து தெரிவித்த கூட்டணித் தலைவர், வன்னியில் அனுபவித்த கஷ்டங்களை விட இங்கு நீங்கள் அதிகளவான கஷ்டங்களை அனுபவிக்கலாம். ஆனாலும், சில மாதங்கள் பொறுமையாக இருந்தால் சொந்த இடங்களில் மீள குடியேறும் நிலை ஏற்படும். இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் நான் வலியுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்கள் கூட்டணித் தலைவரிடம் கையளித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment